04/10/2026
செப்டிக் டேங்கிற்குள் இறங்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு
உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த கோட்டாட்சியர்
அரியலூர், அக். 4–
அரியலூர் மாவட்டம் செந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கிற்குள் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை காந்திநகர் பிரதானச் சாலையைச் சேர்ந்த ம.சுப்பிரமணியன் என்பவர், செந்துறை–உடையார்பாளையம் சாலையில் உள்ள வள்ளலார் நகரில் புதிய வீடு கட்டி வருகிறார். வீட்டின் பின்புறத்தில் சுமார் 12 அடி நீளம், 10 அடி அகலம், 8 அடி ஆழத்தில் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை செப்டிக் டேங்கிற்குள் நடைபெற்ற பணியில் திருவாரூர் மாவட்டம் அலிவளம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த தினகரன் (60), கடாரங்கொண்டான் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (45), செந்துறை காந்திநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (48) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
முதலில் தினகரன் செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோது மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்பதற்காக பாஸ்கர் உள்ளே இறங்கியபோது அவரும் மயங்கி விழுந்தார். இருவரையும் மீட்க முயன்ற ராமச்சந்திரனும் உள்ளே இறங்கி மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரையும் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மூவரது உடல்களும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன.
பிணவரை முன்பு முற்றுகை
உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவரை முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், திருச்சி மாவட்டச் செயலாளர் ஜி.வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பா.லெனின், எஸ்.ரேணுகா, கிருஷ்ணன், துரை.அருணன், மூத்த நிர்வாகி சிற்றம்பலம், செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, அருணாச்சலம், செண்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உயிரிழந்த ராமச்சந்திரனின் மனைவி வளர்மதி, தினகரனின் குடும்பத்தினர், பாஸ்கரின் உறவினர் புருஷோத்தமன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும், இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், 2013-ம் ஆண்டின் கையால் மலம் அள்ளுவோர் பணியமர்த்தல் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் (PMSR Act) பிரிவுகள் 7 மற்றும் 9-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நிவாரணத் தொகையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
எழுத்துப்பூர்வமான உறுதிமொழி வழங்கப்பட்ட பின்னரும், தலா ரூ.30 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு வரும் வரை மூவரது உடல்களையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என உறவினர்களும் போராட்டக்காரர்களும் தெரிவித்தனர்.
மூவருக்கும் உடற்கூறாய்வு முடிந்த பின்னர், அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து தெளிவான அறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
செப்டிக் டேங்க் பணிகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் ஆபத்தான சூழலில் பணியாற்றச் செய்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
(Dinamani)
CPIM Tamilnadu Theekkathir ஐவி.நாகராஜன்