"இந்த இக்கட்டான கட்டத்தில் அனைத்து இலங்கையரும் ஒன்றிணைந்து சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்."
- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21.05.2019) ஒரு மாதமாகிறது. அதன் வேதனையிலும் அதிர்ச்சியிலுமிருந்து நாடு இன்னும் மீளவில்லை.
ஏப்ரல் 21தாக்குதல் இலங்கையின் ஸ்திரத் தன்மையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. நாடு ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் தீவிர கரிசனையுடன் அக்கறை கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவை குறித்து அரசாங்கமும், அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், சிவில் சமூகமும், ஊடகங்களும் துரிதமாக செயற்பட்டாக வேண்டிய வரலாற்றுக் கடமை நம் முன்னே உள்ளது.
மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய 14 அம்சங்கள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சுட்டிக் காட்டியுள்ளது. அவையாவன:
01. பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். பயங்கரவாத மனோநிலையை உருவாக்கும் காரணிகளையும் ஒழிக்க வேண்டும். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
02. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனவாதத்தைத் தூண்டி, அப்பாவி மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து அழிவுகளை மேற்கொள்ளும் நாசகார சக்திகளை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
03. உயிர்த்த ஞாயிறன்று படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள், ஏனைய சொத்துகளுக்கும் நியாயமான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.
04. குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும், சொத்திழப்புகளுக்கும் அரசாங்கம் நியாயமான இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
05. நாட்டின் பன்மைத்துவமும் சமய கலாச்சாரத் தனித்துவங்களும் மனித உரிமைகளும் பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டும்.
06. தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியும் சீர்குலைவும் கூடிய விரைவில் நிவர்த்திக்கப்பட வேண்டும்.
07. வேலை இழப்பும் வேலைவாய்ப்பின்மையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இது எல்லா சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து எல்லோரும் கரிசனை எடுக்க வேண்டும். இதற்கான நடைமுறைத் தீர்வுகள் மிகவும் இன்றியமையாதவையாகும். அவை விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
08. சந்தேகத்திற்கிடமான வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
09. வெளிநாட்டு சக்திகளின் அனாவசியமான தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, நாட்டின் இறையாண்மையும் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
10. தாக்குதலுக்குப் பிந்திய சூழலை அனாவசியமாக ஊதிப் பெருப்பித்து, வன்முறைச் சூழலுக்கு வித்திட்டதில் ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மைக்கும் தான்தோன்றித் தனத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இது கண்டனத்திற்குரியதாகும். ஊடக தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
11. பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில், மக்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களையும் நடைமுறைகளையும் அவசர அவசரமாகத் திணிக்காமல், அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
12. மக்களுக்கு மத்தியில் அனாவசியமான அச்சமும் பீதியும் நிலவுகிறது. இதனைக் களைந்து இயல்பு வாழ்க்கையை துரிதமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
13. வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய வகையிலான வெறுப்புப் பேச்சைத் (Hate Speech) தடை செய்யும் சட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
14. அனைத்து இலங்கையரும் ஒன்றிணைந்து, சுபீட்சமும் வளமும் நிறைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).
21.05.2019
NFGG Akkaraipattu
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NFGG Akkaraipattu, Political organisation, Akkaraipattu.
"தாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஜனாதிபதி-பிரதமருக்கிடையிலான அரசியல் இழுபறிகள் நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதனை அனுமதிக்க முடியாது"
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவிப்பு.
-ஊடகப்பிரிவு
“ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான போதிய புலனாய்வு தகவல்களும், கால அவகாசமும் அரசாங்கத்திற்கு இருந்திருக்கின்றது. அதைச் செய்யத் தவறியமையானது அரசாங்கத்தின் படுமோசமான பொறுப்பற்ற செயலாகும். இதன் விளைவு நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களை இழந்து, மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காயத்திற்குள்ளாக்கிய சோக வரலாற்றை சுமந்து, முழு இலங்கை தேசமும் கண்ணீர்வடிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறான அழிவுகளை தவிர்த்திருக்கக் கூடிய முன்னைய சில சந்தர்ப்பங்களிலும் இவ்வாறே அவை அலட்சியப்படுத்தப்
பட்டிருக்கிறது. ‘நாட்டு மக்களின் பாதுகாப்பு’ என்ற உச்சக்கடமையை அலட்சியம் செய்யும் அரசாங்கங்களின் இந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஜனாதிபதியும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தேசிய பாதுகாப்பு எனும் கூட்டுப்பொறுப்பிலிருந்து நழுவமுடியாது. அத்தோடு, நாட்டில் ஏற்பட்டிருக்கும் துரதிஷ்டவசமான இந்த நிலமைகளை இன வாத சக்திகள் பயன்படுத்தி கொள்ளாதிருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று (24.4.2019) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFGGயின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஈஸ்டர் ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும் தலைநகரின் பிரதான ஹோட்டல்கள் மீதும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 350 பேரளவில் கொல்லப்பட்டும் 500ற்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தும் இருக்கிறார்கள். சில
தேவாலயங்கள் முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன. மிகக்கொடூரமான இந்தத்தாக்குதல்களின் போது கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்களில் குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,வெளிநாட்டவர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.
தெற்காசியாவில் நடைபெற்ற படு மோசமான தொடர் குண்டுத்தாக்குதல் எனச்சொல்லப்படும் இத்தாக்குதலானது, இலங்கையினை மாத்திரமன்றி முழு சர்வதேசத்தையும் உலுக்குகின்ற கோரமான தாக்குதலாகவும் மாறியுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் இன்னும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இத்தாக்குதல் தொடர்பான நம்பகமான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்ததாக தற்போது உறுதியாகத் தெரிகிறது . அரசாங்க அமைச்சர்களே இதனை பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான போதிய புலனாய்வுத் தகவல்களும் கால அவகாசமும் அரசாங்கத்திற்கு இருந்திருக்கின்றன. குறைந்த பட்சம் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு பொறுப்பானவர்களிடமாவது இம்முன்னெச்சரிக்கை தகவல்கள் சொல்லப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதைச்செய்ய தவறியமையானது அரசாங்கத்தின் படுமோசமான பொறுப்பற்ற செயலாகும். இதன் விளைவு நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களை இழந்து, மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காயத்திற்குள்ளாக்கிய சோக வரலாற்றை சுமந்து, முழு இலங்கை தேசமும் கண்ணீர்வடிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போது இந்த பாரிய இழப்புக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கே இருக்கிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் நீடிக்கும் அரசியல் கயிறிழுப்புகளே நாட்டு மக்களின் உயிர்களை பலி கொடுக்க காரணமாக அமைந்துவிட்டதோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
ஜனாதிபதி தரப்பும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தேசிய பாதுகாப்பு எனும் கூட்டுப்பொறுப்பிலிருந்து நழுவமுடியாது.
நாட்டை அழிவிற்கு இட்டுச்செல்லும் தீவிரவாதிகளின் திட்டங்கள் பற்றிய புலனாய்வுத் துறை தகவல்களையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் தகவல்களையும் முன்னெச்சரிக்கை வேண்டுகோள்களையும் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு உதாசீனம் செய்து செயற்பட்டமை இது முதற் தடவையல்ல.
2014 ஆம் ஆண்டு இனவாதிகளால் அளுத்கமை தாக்கப்படுவதற்கு முன்னரும், 2018 ஆம் ஆண்டு கண்டி- திகன பிரதேசம் தாக்கப்படுவதற்கு முன்னரும் முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு தாக்குதலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை பல்வேறு தரப்பினரும் எச்சரித்திருந்தனர். இருந்த போதிலும் பொறுப்பிலிருந்த அரசாங்கங்கள் மிகவும் அலட்சியமாகவே நடந்து கொண்டன.
இவ்வாறே இம்முறையும் பாரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தத் தக்க தாக்குதல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படுவதான புலனாய்வுத் தகவல்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் காத்திரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக நடந்துகொண்டுள்ளது. இது மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்துள்ளது.
அத்துடன் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பல்வேறு குழுக்களும் மக்களிடையே மேலும் இனவாத, மதவாத பிரிவினைகளை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடவும் வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் சிவில் தலைமைகளும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது.
குறுகிய அரசியல் நோக்கு கொண்ட சக்திகளின் சதிவலையில் சிக்கி கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்வதும் அனைத்து மக்களினதும் கடமையாகும்.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாம் ஒரு தேசத்தின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் தேவையான சகல உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளோம்.
அத்தோடு தீவிரவாத, பயங்கரவாத கருத்துக்கள் செயற்பாடுகள் அனைத்தையும் இந்நாட்டிலிருந்து துடைத்தெறிந்து நாம் வென்றெடுத்த சமாதானத்தையும் பாதுகாப்பான சூழலையும் நிரந்தரமான ஒன்றாக நிலை நிறுத்துவதற்காக இன, மத, மொழி பேதம் கடந்து நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்றஅடிப்படையில் ஒன்றிணைந்து உழைப்போம்.
"நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்ல எத்தனிக்கும் காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசியமுன்னணி (NFGG) மிக வன்மையாகக் கண்டிக்கிறது."
-ஊடகப்பிரிவு-
"இன்று காலை தொடர்ச்சியாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத்தனமான, மிலேச்சத்தனமான தாக்குதல்களை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) குறிப்பிட்டுள்ளது.
இன்று (21.4.2019) காலை கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை கண்டித்து NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கிறிஸ்தவ மக்களின் புனிதத்தினமான இன்று இவ்வாறானதொரு துன்பியல் சம்பவம் தேவாலயங்களிலும் முக்கிய சில இடங்களிலும் இடம்பெற்றிருப்பது மிக வேதனையான, கவலைக்குரிய ஒன்றாகும். சமாதானத்தையும் சக வாழ்வையும் விரும்பும் அனைவரையும் இது மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிக திட்டமிடப்பட்ட வகையிலும் பொது மக்களின் உயிர்களை இலக்கு வைத்தும் கோழைத்தனமாக நிகழ்த்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் மிக இழிவான ஒரு அருவருக்கத்தக்க செயலாகும்.
ஒட்டு மொத்த இலங்கையர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடு கடந்து இந்த நாட்டில் நிலவுகின்ற இனவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் என்பவற்றை முழுமையாக ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதற்கான அவசியமும் அவசரமும் இன்று மீண்டும் உணரப்பட்டிருக்கிறது.
இம்மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளையும் இதன் பின்னணிகளையும் உடனடியாகக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் எவராக இருப்பினும் இவ்வாறான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இனி ஒருபோதும் இந்த நாட்டில் இடம்பெறாத வகையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட வகையில் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இப்பதட்டமான சூழலில் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
இத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயங்களுக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு , இந்நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காகவும், அனைத்து மக்களினதும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்பதோடு, இதற்காக அனைவரும் அர்ப்பணத்துடன் ஒன்று பட்டு உழைப்போம்.”
15/03/2019
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் (Counter Terrorism Bill) மக்களின் சுதந்திரத்தையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் ஒரு மோசமான சட்டமூலமாகவே காணப்படுகிறது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் மக்களால் கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலையே நாட்டில் தோன்றும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் தன்னைத் தெரிவு செய்த மக்களையே அடக்கியாளும் ஒரு பயங்கரமான சூழ்நிலையே இந்த சட்டத்தின் மூலம் உருவாகும்.
எனவே இந்த சட்ட மூலத்தை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரதும் தார்மீகக் கடமையாகும். அந்த வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட மூலத்தின் உள்ளடக்கம் அது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நேற்று (14.3.2019) கொழும்பில் இடம் பெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசியல் மற்றும் உரிமைகளுக்கான சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), முஸ்லிம் கவுன்சில், இலங்கை சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் என்பன இணைந்தே இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. தொடர்ந்தும் இது சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முன்கொண்டு செல்லவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
அதிகாலைச் சிந்தனைகள்-10
திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்படாத - போகிற போக்கில் வாழும்- வாழ்க்கை ஆபத்தானது. நமது பயணத்தின் இலக்கையும் திசையையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் தீர்மானிக்கிற பாதையில் நாம் செல்லத் தொடங்கினால், யாரோ சிலரின் நிகழ்ச்சி நிரலில் (Agenda) பயணிக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டு விடும். நமது பயணத்தை - நமது பாதையை- நமது நிகழ்ச்சி நிரலை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் நாம் கனவு காணும் விளைவுகளை அறுவடை செய்ய முடியும்.
சிராஜ் மஷ்ஹூர்
02.03.2019
இன்று புதன்கிழமை (27.02.2018) இரவு 9.00 மணிக்கு...
UTV #சமர் - அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் NFGG தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்.
நிழ்ச்சித் தொகுப்பாளர்: Mohammed Muszhaaraff
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்: Ihzan Mohamed
Editing: Sajjadh Samad
பின்வரும் அலைவரிசைகளில் கண்டு களிக்கலாம்:
UHF 54 Dialog 23
PEO TV 127
www.utv.lk
அதிகாலைச் சிந்தனைகள்-09
நாம் அதிகம் உரைப் (speech) பாரம்பரியத்தில் வளர்ந்தவர்கள்; இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். உரையாடல் (Dialogue) மீதான நமது ஈடுபாடு குறைவு. நாம் உரைகளால் மூழ்கடிக்கப்படுகிற அளவுக்கு, உரையாடல்களால் நனைக்கப்படுவதில்லை. மற்றவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, அதைக் கேட்கும்- கேட்டு மதிக்கும் பண்பைக் கைக்கொள்வதற்கு உரையாடல் கலாச்சாரம் வழி வகுக்கும்.
எங்கு பார்த்தாலும் பேச்சும் பயானும் உபந்நியாசங்களும்தான் நிறைந்திருக்கின்றன. நம் மத்தியில் அடுத்தவரோடு ஊடாடும் கலந்துரையாடல்களை (Interactive Discussion) அதிகரிக்க வேண்டும். ஈடுபாடு மிக்க கேட்டல் திறனை (Active Listening) வளர்க்க வேண்டும். இவைதான் ஆரோக்கியமான சமூக மாற்றத்தைத் துரிதப்படுத்தும்.
சிராஜ் மஷ்ஹூர்
26.02.2019
ஒரு தெளிவுக்காகவும் பொறுப்புக் கூறும் நோக்கிலும்...
மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை எனது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அல்லாது, பொதுப் பணிகளுக்கே செலவிடுவேன் என தேர்தல் காலங்களில் பேசியிருந்தேன்.
எனது அங்கத்துவத்தை இராஜினாமாச் செய்துள்ள நிலையில், அது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு (Accountability) எனக்கு உள்ளது. இது நல்லாட்சிப் பண்புகளுள் ஒன்றாகும். அதற்காகவே இந்த விபரத்தை மக்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
தேர்தல் 2018 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடந்தாலும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல் அமர்வு 2018 ஏப்ரல் 12 ஆம் திகதியே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட இறுதி அமர்வு 2019 பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன் பிரகாரம் 11 மாத கொடுப்பனவுகள் எனக்குக் கிடைத்தன. 11×20,000.00 = ரூபா 2,20,000.00
இது செலவளிக்கப்பட்ட விபரம்:
1.மாற்றுத் திறனாளிகளுக்கான கற்றல் துணைச் சாதனங்கள்- ரூபா 60,000.00
2.விளையாட்டு உபகரணங்கள் - ரூபா 5,000.00
3. வறிய குடும்பமொன்றின் திருமண செலவிற்காக - ரூபா 15,000.00
5. அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா கிளையின் கட்டிட நிதிக்காக- ரூபா 50,000.00
5. அறநெறிப் பாடசாலையொன்றிற்கு - ரூபா 10,000.00
6..பட்டினப் பள்ளிவாசலுக்கு - ரூபா 20,000.00
7. அதிக தேவையுடைய குர்ஆன் மத்ரஸா ஒன்றிற்கு - ரூபா 20,000.00
8. அதிக தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்காக - ரூபா 20,000.00
9. இளைஞர்களது ஆற்றல் விருத்திக்காக (Capacity Building) - ரூபா 20,000.00
எங்களுக்கு வாக்களித்த அக்கரைப்பற்று மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக பயன்கள் கிடைக்கும் வகையில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிராஜ் மஷ்ஹூர்,
முன்னாள் மாநகர சபை உறுப்பினர்.
23.02.2019
22/02/2019
இன்று அக்கரைப்பற்று மாநர முதல்வருக்கு NFGG தவிசாளர் சிராஜ் மஷ்ஹூரால் கையளிக்கப்பட்ட இராஜினாமாக் கடிதம்.
22.02.2019
முதல்வர்,
மாநகர சபை,
அக்கரைப்பற்று.
ஐயா,
இராஜினாமா
இன்றிலிருந்து அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து கொள்கிறேன்.
அத்தோடு, இந்தப் பதவி வெற்றிடத்திற்கு எமது கட்சி தீர்மானிக்கும் பொருத்தமான ஒருவரை உறுப்பினராக நியமிப்பதற்கு, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஒப்பம்.
N.M.Siraj.
22/02/2019
மாநகர சபை உறுப்பினராக இருந்தமைக்காக NFGG தவிசாளர் சிராஜ் மஷ்ஹூருக்கு கிடைத்த இரண்டரை மாத கொடுப்பனவை, அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமாவின் நிரந்தரக் கட்டிட நிதிக்காக அவர் அன்பளிப்புச் செய்தபோது.
இதனை ஜம்மியத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளைத் தலைவர் மௌலவி எம்.எம்.அப்துல் லத்தீப் (பஹ்ஜி) அவர்கள் பெற்றுக் கொண்டார்.
21/02/2019
NFGG தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சகோதரர் சிராஜ் மஷ்ஹூர், தனது மாதாந்த கொடுப்பனவுத் தொகையை அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கியபோது...
கடந்த வருடம் இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் அவர் பட்டினப்பள்ளி (Town Mosque) வட்டாரத்திலேயே போட்டியிட்டார். அதில் கணிசமான வாக்குகளும் அவருக்குக் கிடைத்தன. அதன் அடையாளமாகவே இந்த நன்கொடை.
பட்டினப் பள்ளி நம்பிக்கையாளர் சபையின் பதில் தலைவரும், முஸ்லிம் மத்திய கல்லூரியின் மறக்க முடியாத அதிபருமான முன்னாள் கொத்தணி அதிபர் எம்.ஏ. உதுமாலெப்பை சேர், பள்ளிவாசல் அலுவலகத்தில் வைத்து இதனைப் பெற்றுக் கொண்டார். அருகில் இருப்பவர் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் யூ.எல். மஹ்றூப் (இஸ்ஸதீன் ஹாஜியார்).
19/02/2019
புத்தளம் அறுவக்காலு குப்பைப் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினையாகும்
-NFGG தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்
(தோப்பூர் - எஸ்.ஏ.எம்.அஸ்மி)
புத்தளம் அறுவக்காலு குப்பைப் பிரச்சனையானது புத்தளத்திற்கான ஒரு பிரச்சனையல்ல, அது ஒரு தேசிய பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்க்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, இங்கு குப்பை கொண்டுவருவதனை நிறுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.
புத்தளம் அறுவக்காலு பகுதியில் குப்பை கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து, கடந்த வெள்ளிக்கிழமை (15.02.2015) புத்தளம் கொழும்புமுகத் திடலில் Clean Puttalam ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போராடுகின்ற மக்கள் ஒருபோதும் பின் வாங்க வேண்டாம். அரசியல்வாதிகள் மக்களுக்கு பணி செய்ய வந்தவர்களே தவிர, மக்களின் எஜமானர்கள் கிடையாது. மக்களின் கோரிக்கைகளை சிரமேற்கொண்டு செய்வதே அரசியல்வாதிகளின் பணியாகும்.
புத்தளம் அறுவக்காலு பிரச்சனை தொடர்பாக ந.தே.முன்னணியின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய பிரதி தவிசாளருமான அப்துர் ரஹ்மான், கடந்த வருடம் ஜெனிவாவிலே இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடரின்போது கையளிப்பதற்காக ஆவணங்களைக் கொண்டு சென்றிருந்தார். இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக அப்போது கண்டி, திகன பிரச்சினை எற்பட்டதன் காரணமாக முழு நிகழ்சி நிரலும் மாற்றமடைந்ததோடு, கொண்டு சென்ற ஆவணங்களைக் கையளிக்க முடியாமல் போனது. ஆனால், இச்சந்தர்ப்பத்தில் ஒரு வாக்குறுதியளிக்கின்றோம். மீண்டும் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இப்பிரச்னையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு எங்களால் ஆன முயற்சிகளை எடுப்போம்.
பல நாடுகளில் இவ்வாறான பிரச்சனைகளை மனித உரிமைப் பிரச்சனையாக மாற்றி, அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதனைப் பரவலாக நாம் காணலாம்.
நுரைச்சோலைப் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது கந்தலகம, ரத்துபஸ்வெல, சம்பூர் பிரச்சனையாக இருக்கலாம் இவை யாவும் மக்கள் போராட்டமாக இருந்தபோதிலும், கடைசி வரை அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுக்காமலேயேதான் இருந்தது.
ஆனால் சம்பூர் பிரச்சினையின்போது, தமிழ் மக்கள் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதற்கு ஆதரவளித்திருந்தோம். அந்த இணைந்த போராட்டத்தின் காரணமாக சம்பூர் அனல்மின் நிலைய திட்டம் கைவிடப்பட்டது. அதேபோன்று அறுவக்காலு குப்பை பிரச்சினையும் கைவிடப்பட வேண்டும். அதற்காக சர்வ சமயத்தினரும் ஒன்றிணைந்திக்கின்றோம். இதுவே முதல் வெற்றியாகும்.
இப்போராட்டம் தொடர வேண்டும். நாங்கள் உங்களோடு இருப்போம். சுத்தமான குடிநீருக்காக ரதுபஸ்வெல மக்கள் தங்களது உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். இங்கு நாங்கள் வெயிலையும் பொருட்படுத்தாது போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இது உரிமைக்கான போராட்டம், வாழ்வதற்கான போராட்டம், ஆரோக்கிய வாழ்விற்கான பேராட்டம். இது ஒரு மக்கள் போராட்டம். இந்த மக்கள் போராட்டம் ஒருபோதும் தோற்றுப் போய்விடக் விடக் கூடாது. அதனை நாங்கள் மதிக்கின்றோம்.
அதேபோன்று புத்தளம் நகரசபையிலே இப்பிரச்சினைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எங்களது உறுப்பினர் அமீன் அவர்களும் ஆதரவளித்து, எங்களால் முடியுமான ஒரு முயற்சியை செய்திருக்கின்றோம்.
தற்போது நடைபெற்றுக் பெற்றுக் கொண்டிருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வுப் போராட்டமானது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டமாக மட்டும் இருக்கப்போவதில்லை. தொழிற்சங்கங்கள், மக்கள் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புக்கள், மற்றும் நீதியையும், நியாயத்தையும் மதிக்கின்ற மக்கள் அனைவரினதும் போராட்டமாகும் என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றார்கள். அவர்களுக்கான ஆதரவினை நாங்கள் தெரிவிக்கின்றோம். அதேபோன்று இது புத்தளத்திற்குரிய பிரச்சனையல்ல, இதனை கொழும்பிலும் வந்து பேசுங்கள், கிழக்கு மாகாணத்திற்கும் வந்து பேசுங்கள். இது ஒரு தேசியப் பிரச்சினையாகும்.
இவ்வாறு அவர் தனது உரையில் கருத்துத் தெரிவித்தார்.
படங்கள்: றிஜாஸ்
நன்றி: விடிவெள்ளி.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Akkaraipattu
32400
