10/09/2026
நவீனமயமாக்கப்பட்ட
பம்பலப்பிட்டி ரயில் நிலையம்
மக்கள் பாவனைக்கு!
‘Clean Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நாடளாவிய ரீதியில் 100 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம் இன்று (10) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டாண்மையின் கீழ் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, பிரதான கட்டடம், முதலாம் மற்றும் இரண்டாம் நடைமேடைகள், சுகாதார வசதிகள், மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பிரதான வீதிக்கும் ரயில் பாதைக்கும் இடையிலான புதிய மேம்பாலம், உணவகம் உள்ளிட்ட ரயில் நிலைய வளாகத்தின் பல்வேறு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புனரமைப்புப் பணிகளுக்காக 60 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், குறித்த நிதி இலங்கையில் வசிக்கும் போஹ்ரா சமூகத்தினரின் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 மார்ச் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்புப் பணிகள் சுமார் ஐந்து மாதங்களில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
‘Dream Destination’ திட்டத்தின் கீழ் இதுவரை தல்பே, நாரஹேன்பிட்ட, மருதானை மற்றும் பொலன்னறுவை ரயில் நிலையங்களும் தனியார் துறை நிதிப் பங்களிப்புடன் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பொதுப் போக்குவரத்து சேவை திட்டமிடலின் கீழ், Clean Sri Lanka செயலகம், ரயில்வே திணைக்களம் மற்றும் தனியார் துறை இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
நிகழ்வில் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, சமய விவகார பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உள்ளிட்ட அரச அதிகாரிகள், ரயில்வே திணைக்கள அதிகாரிகள், டாவூதி போஹ்ரா சமூக பிரதிநிதிகள் மற்றும் NIO Engineering நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.