10/09/2026
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி மாநிலக் குழு
பத்திரிகைச் செய்தி
10.09.2026
கரையாம்புத்தூர் கோயில் நில குத்தகை விவசாயிகளுக்கு அநீதி: முதலமைச்சர் மற்றும் அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் மனு!
வணக்கம். புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன், கரையாம்புத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தடுத்து நிறுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.
கரையாம்புத்தூர் கிராமத்தில் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான நன்செய், புன்செய் நிலங்களை அதே பகுதியைச் சேர்ந்த 22 விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாகக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் குத்தகை வரியை நிலுவையின்றி செலுத்தி வந்தபோதிலும், கடந்த 02.08.2026 அன்று முன்னறிவிப்பின்றி, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக நிலங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
காழ்ப்புணர்ச்சி காரணமாக, பல மடங்கு குத்தகைத் தொகை (ரூ.70,000 முதல் 90,000 வரை) உயர்த்தப்பட்டுள்ளதோடு, குத்தகை விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியத்தில் ஒரு பகுதியும் வரியாக தேவஸ்தான நிர்வாகத்தால் வசூலிக்கப்படுகிறது.
பயிர் உள்ள நிலங்களை ஏலம் விடுவது, முழுக் குத்தகைத் தொகையையும் ஆண்டின் தொடக்கத்திலேயே கேட்பது போன்ற செயல்களால் குத்தகை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை சம்பந்தமாக, புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. ராஜவேல் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வே. பெருமாள், ஆர். ராஜாங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, 02.08.2026 அன்று விடப்பட்ட சட்டவிரோத குத்தகை ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். மேலும், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 'தமிழ்நாடு விவசாய நிலங்கள் குத்தகை உரிமைச் சட்டம் 1969'-ஐப் பின்பற்றி, புதுச்சேரியிலும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணுமாறும் அவர்கள் அரசை வலியுறுத்தினர்.
இந்தச் செய்தியை தங்களது பத்திரிகை மட்டும் ஊடகத்தில் வெளியிடடு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வழங்கப்பட்ட மனு இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்
செயலாளர்,
சிபிஐ(எம்)
புதுச்சேரி மாநிலக்குழு