28/05/2026
தியாகத்தின் மேன்மையை பறைசாற்றும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னதமான தியாக வாழ்வை நினைவுகூரும் இந்நாள், நமக்குள் தியாக சிந்தனையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் விதைக்கும் நன்னாளாகும். சமூகத்தின் அறியாமையை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும், ஏதேச்சதிகார சக்திகளுக்கு எதிராக சமரசமின்றிப் போராடியதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிச்சலும், அறிவாற்றலும், அர்ப்பணிப்பும் நமக்கான மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
தியாகத்தை போற்றும் இந்நாளில், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்படவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நாம் உறுதியேற்போம்.
மக்களிடையே அன்பும், பரஸ்பர பாசமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரவும்; உலகெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கம் தழைத்தோங்கவும் இப்புனித நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
28/05/2026
69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வீரியமாக சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்: SDPI கட்சி வலியுறுத்தல்!
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பல தசாப்தங்களாகப் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்து வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக் கொள்கை, தற்போது உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்டச் சவாலை எதிர்கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூக நீதி கட்டமைப்பையே அசைத்துப் பார்க்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளைத் தமிழக அரசு மிகத் தீவிரமாகக் கையாண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை எவ்வித சமரசமுமின்றி பாதுகாக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு என்பது ஏதோ சாதாரணமாக வழங்கப்பட்ட சலுகை அல்ல. இது பல சமூக நீதிப் போராளிகளின் தொடர் போராட்டங்களினாலும், தமிழக மக்களின் நீண்டகால தியாகங்களினாலும் வென்றெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமிதம் மிக்க சமூக நீதி உரிமையாகும்.
1992-ல் உச்ச நீதிமன்றம் 'இந்திரா சாஹ்னி' வழக்கில் 50% வரம்பு விதித்த போதிலும், தமிழகத்தின் தனித்துவமான சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அன்றைய தமிழக அரசு 1993-ல் தனிச் சட்டம் இயற்றி, இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இணைத்துப் பாதுகாப்புப் பெற்றது. இந்தச் சட்டப் பாதுகாப்பிற்கு இப்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான அச்சுறுத்தலாகும்.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த மிக முக்கியமான வழக்கில், நாட்டின் மிகச் சிறந்த, மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு தமிழக அரசு தனது வாதங்களை மிக வலுவாக முன்வைக்க வேண்டும். 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தமிழகத்தில் உள்ள சமூக, பொருளாதாரப் பின்னடைவுகள் என்னென்ன என்பது குறித்த துல்லியமான, அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்களைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒற்றைக் குரலில் மாநில அரசு தனது நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும், வெறும் ஆலோசனைகளோடு நின்றுவிடாமல், களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும்.
இடஒதுக்கீட்டு வரம்பில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது தமிழகத்தின் அமைதிக்கும், சமத்துவத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே, 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் துளியும் வீரியம் குறையாமல் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
27/05/2026
நீண்ட நாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு உடனடி பரோல் வழங்கிடுக! - தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகச் சிறைகளில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக, அதாவது 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்துவிட்டனர். அரசின் கருணை விடுதலை கிடைக்கப் பெறாத நிலையில், பரோலில் இருந்த இவர்களுக்கான பரோல் காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அவர்கள் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களாகக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்துவந்த சிறைவாசிகள் உட்பட அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த மனிதாபிமானப் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
முன்னாள் சிறைவாசி பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சட்டப்பூர்வ முன்னுதாரணங்கள் உள்ள நிலையில், அதே சட்டக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எவ்விதப் பாரபட்சமுமின்றி துரிதப்படுத்த வேண்டும். மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில், அந்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை நிரந்தரமாக விடுதலை செய்ய அரசு உரிய ஆவன செய்ய வேண்டும்.
மேலும், அவர்களின் இறுதி விடுதலைக்கான சட்ட வழிமுறைகள் நிறைவடையும் இடைப்பட்ட காலம் வரை, அவர்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அவர்களுக்கு மீண்டும் நீண்டகாலப் பரோல் வழங்கிடத் தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே தற்போதைய முதன்மையான கோரிக்கையாகும். பரோல் நீட்டிப்பு மட்டுமே இப்போது தவித்துக் கொண்டிருக்கும் அவர்களின் குடும்பங்களுக்குத் தற்காலிக நிம்மதியைத் தரும்.
கால் நூற்றாண்டு காலச் சிறைவாசம் என்பது ஒரு மனிதனின் ஆயுளில் பெரும்பகுதியாகும். இவர்களின் எஞ்சிய வாழ்நாளையாவது தங்களது குடும்பத்தினருடன் கழிக்கும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கையைத் தனிப்பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, முதற்கட்டமாக இவர்களுக்கு மீண்டும் நீண்டகாலப் பரோல் வழங்கிட விரைந்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Chief Minister of Tamil Nadu
24/05/2026
சென்னையில் தொடரும் மின்வெட்டால் மக்கள் அவதி! தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - SDPI கட்சி வலியுறுத்தல்*
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தலைநகர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, பல மணி நேரம் நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது பெரும் கவலையளிக்கிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியின்போது, கோடைக் காலத்திலும் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்த சூழலில், புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, அதுவும் தலைநகர் சென்னையிலேயே மக்கள் மின்வெட்டைக் கண்டித்து வீதிக்கு வந்து போராடும் அவல நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அரசும், மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போதிய திட்டமிடலையும் செய்யத் தவறியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.
மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் கால மின்சுமையைத் தாங்கக் கூடிய வகையில் மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களை உடனடியாகப் பராமரிப்புச் செய்ய வேண்டும்.
புதிய அரசு என்பது மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும்.அவர்களின் தூக்கம் கெடுக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் அரசாகச் செயல்பட்டு, இந்த மின்வெட்டுப் பிரச்னைக்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
24/05/2026
கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல்! - SDPI கட்சி கடும் கண்டனம்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமும், சட்டச் சலுகைகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குப் பெருந்துணிச்சலை ஏற்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் தொடர்கதை ஆகக் காரணமாகின்றன. வெறும் சட்டப் புத்தகங்களால் மட்டும் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது; சமரசமற்ற கடும் நடவடிக்கையும், காலதாமதமற்ற விரைவான புலனாய்வும், உறுதியான அதிரடித் தண்டனையுமே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அண்டை வீட்டைச் சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்கும், பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாகத் தமிழகம் மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இவ்விவகாரத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழக் கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
24/05/2026
முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை வழங்கிடுக! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
அதேவேளையில், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.
எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் வெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியை காக்கும் அரசு என கூறும் இந்த அரசில் தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், முஸ்லிம் பெயர் என்பதற்காக சிறுபான்மையினர் நலத்துறை என்ற வழக்கமான, சுருக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டும் முஸ்லிம் அமைச்சர்களை முடக்கிவிடக் கூடாது. அடையாள அரசியலுக்காக வெறும் பெயரளவு துறைகளை மட்டும் ஒதுக்காமல்; அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கல்வி, தொழில், வருவாய் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அதிகாரப் பகிர்வும், சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்பதால், பரந்துபட்ட பார்வையில் இக்கோரிக்கையைப் பரிசீலித்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கான உரிய பங்கீட்டை முதல்வர் அவர்கள் உரிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.