07/12/2025
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? யு.ஜி.சியின் மறைமுக இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது!
இந்தியாவிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி பல்கலைக்கழக மானியக் குழு ஆணையிட்டிருக்கிறது. எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் விரும்பிப் படிப்பதே சிறந்தது; அதற்கு மாறாக மூன்றாம் மொழியை கட்டாயப்படுத்தி திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் மனீஷ் ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அனைத்து பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றில் இப்போது கற்பிக்கப்படும் இரு மொழிகளுடன் மூன்றாவதாக ஒரு மொழி கண்டிப்பாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் மொழியாக உள்ளூர் மொழியும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் கற்பிக்கப்படும் நிலையில், மூன்றாம் மொழியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் யு.ஜி.சி அறிவுறுத்தியுள்ளது. இந்த மொழிகளில் மாணவர்களின் புலமையை அளவிலும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு புலமை நிலைக்கும் ஏற்றவாறு மொழிப்பாடங்களுக்கு கிரெடிட் வழங்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில், 3 மொழிப்பாடங்களையும் குறிப்பிட்ட புலமை நிலையில் கற்றுத் தேறாவிட்டால் பட்டம் பெற முடியாது என்பது தான். இதன் மூலம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழியை யு.ஜி.சி கட்டாயமாக்கியுள்ளது.
மாணவர்கள் அவர்களால் இயன்ற வரையில் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முதல் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டு வரும் தேர்தல் அறிக்கைகளில், ‘‘தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மொழிகள் கற்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து கொடுக்கும். அதே போல உயர்கல்வி மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளை விருப்பத்தின் அடிப்படையில் கற்பதற்கான உதவிகள் செய்யப்படும்’’ என்று தொடர்ந்து உறுதி அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாணவர்களின் விருப்பம் இல்லாமல் எந்தவொரு மொழியும் அவர்களின் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பது தான் பாமகவின் நிலைப்பாடு.
எந்த திட்டத்தையும் செயல்படுத்தும் போது அதனால் ஏற்படக் கூடிய பயன்கள், சாத்தியக் கூறுகள் ஆகியவை குறித்து ஆராயப்பட வேண்டும். வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்வதால் பயன் உண்டு; ஆனால், தாய்மொழி தவிர்த்த பிற உள்நாட்டு மொழிகளை கற்றுக் கொள்வது எந்த வகையான வேலைவாய்ப்புக்கும் பயனளிக்காது என்பது பல்வேறு காலக்கட்டங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பயனற்ற மூன்றாம் மெழியை மாணவர்கள் மீது கட்டாயப்படுத்தி திணிப்பது தேவையற்றது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இன்றைய நிலையில் மூன்றாம் மொழியை கற்பிப்பது சாத்தியம் இல்லை. தமிழகத்தின் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களை கற்பிப்பதற்கே ஆசிரியர்கள் இல்லை. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அவர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றால் 10 துறைகள் கொண்ட ஒரு கல்லூரியில் குறைந்தது 4 முதல் 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசு உயர்கல்வி நிறுவனங்களால் அது சாத்தியமில்லை.
அதுமட்டுமின்றி, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு கூறினாலும், தகுதியான ஆசிரியர்களின் இல்லாமை, அதிக வகுப்பறைகள் இல்லாத சூழலில் இயன்றவரை பெரும்பான்மையான மாணவர்களை ஒரே வகுப்புக்குள் கொண்டு வர வேண்டிய தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தி மொழியைத் தான் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த வகையில் இது மறைமுகமான இந்தித் திணிப்பு தான்.
உலகம் முழுவதும் கல்விச் சூழலும், தகவல் தொழில்நுட்ப புரட்சியும் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் வகையில் தான் புதிய திட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகம் செய்ய வேண்டும். அதை விடுத்து 60 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைக்கப்பட்டத் திட்டங்களையே மீண்டும், மீண்டும் தூசு தட்டி முன்மொழிந்து கொண்டிருக்கக் கூடாது.
உயர்கல்வி நிறுவனங்களில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை மீது தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை திமுக அரசு தெளிவாக விளக்க வேண்டும். மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி நாடமாடிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உயர்கல்வி நிறுவனங்களில் புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை திமுக அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது. அதற்கு வசதியாக, பள்ளிக்கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை அரைகுறையாக வெளியிட்ட திமுக அரசு, உயர்கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை இன்று வரை வெளியிடவில்லை. இத்தகைய பின்னணி கொண்ட திமுக அரசு, மூன்றாவது மொழியையும் கொல்லைப்புறமாக ஏற்கத் தயங்காது.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாது என்று தி.மு.க. அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும்.
07/12/2025
பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை மீட்பு பயணம்!
நாள்: 07.12.2025, நேரம்: காலை 10.00 மணி
இடம்: விஜயலட்சுமி மஹால்,
காவேரிப்பாக்கம், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி .
14/11/2025
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் தீவிர பற்றாளரான பண்ணப்பட்டி சீனிவாசன் அவர்களின் தந்தை அழகேசன் அவர்களின் மறைவு நம்மை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. தந்தையாரை இழந்து துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14/11/2025
ஊரக வேலை உறுதித் திட்டம்: ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்று வரை ரூ.1251.39 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான இந்தத் திட்டத்தில், வழக்கத்தை விட மிகக் குறைந்த நாள்களே வேலை வழங்கி விட்டு, அதற்கான ஊதியத்தை உடனடியாக வழங்காமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்கான ஊதியம், நிர்வாகச் செலவு ஆகியவற்றை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில், மூலப் பொருள்கள் மற்றும் திறன்பெற்ற பணியாளர்களின் ஊதியத்தை மத்திய மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. இந்தத் திட்டத்தின்படி 2024&25ஆம் ஆண்டில் முடிக்கப் பட்ட பணிகளுக்காக ரூ.273.91 கோடி ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டியுள்ளது. நாகை, மயிலாடுதுறை தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலுவைத் தொகை வழங்கப்படவேண்டியுள்ளது. அதிக அளவாக கோவை மாவட்டத்திற்கு ரூ.39.96 கோடியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.31.05 கோடியும், கடலூர் மாவட்டத்திற்கு ரூ.27.23 கோடியும் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கும் ஊதியம் பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், 2025&26ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப் பட்டுள்ளது. இதிலும் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.81.74 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.79.42 கோடி, சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.69.96 கோடி வீதம் ஊதியம் வழங்கப் படவேண்டியுள்ளது. இந்த அளவுக்கு ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருப்பதற்கு, ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்குரிய பங்கை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெறத்தவறியது தான் காரணம்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 12 கோடி மனித வேலை நாள்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டதை விட மிகவும் குறைவு. 2020&21 ஆண்டில் 33.39 கோடி, 2021&22ஆம் ஆண்டில் 34.57 கோடி, 2022&23ஆம் ஆண்டில் 33.46 கோடி, 2023&24ஆம் ஆண்டில் 40.87 கோடி, 2024&25ஆம் ஆண்டில் 30.61 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தான் இந்த முறை தமிழகத்திற்கு வேலை நாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு 150 நாள்கள் வேலை பெற்று தருவோம் என்று 2021&ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த திமுக, மனித வேலை நாள்கள் குறைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை வேலை செய்தவர்களுக்கு ஊதிய பாக்கி வைக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு மிகக் குறைந்த நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக வேலைத் திட்டத்தில் பணி கோரி பதிவு செய்தவர்களில் 75.08 லட்சம் பேருக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டில் வெறும் 50.39 லட்சம் பேருக்கு மட்டும் தான் இதுவரை வேலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை.
தொடர்ந்து பணி செய்யும் அனைவருக்கும் பணி வழங்கப்பட்டால், இதுவரை 13.90 நாள்கள் மட்டுமே வேலை கிடைத்திருக்கும். நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில், இன்னும் இரு நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். கடந்த ஆண்டுகளில் அதிகபட்சமாக 3.97 லட்சம் குடும்பங்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 2698 பேருக்கு மட்டுமே 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் வேலை நாள்களை ஏற்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக, வெறும் 13.90 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கியுள்ளது. அதிகபட்சமாக சராசரியாக 15.98 நாள்களுக்கு மேல் வேலை வழங்க வாய்ப்பே இல்லை. 150 நாள்கள் வேலைவழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு, அதில் 10% அளவுக்குக் கூட வேலை வழங்க நடவடிக்கை எடுக்காததற்காக ஆளும் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டிக்கு நடப்பாண்டில் வெறும் 12 கோடி மனித நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். மேலும் குறைந்தது 50 நாட்கள் வேலை வழங்க 43 கோடி மனித நாட்கள் வேலை தேவைப்படுவதால், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தேன். ஆனால், மாநில அரசின் உரிமைகளை வென்றெடுக்க போராடுவதாக முழங்கி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்காக மத்திய அரசுக்கு கடிதம் கூட எழுதவில்லை.
திமுகவின் முகமூடிகள் ஒவ்வொரு நாளும் கிழிந்து தொங்குகின்றன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எனினும் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணிகளுக்கான ஊதியத்தைப் பெற்றுத்தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை மத்திய அரசிடமிருந்து திமுக அரசு பெற்றுத் தர வேண்டும்.
03/11/2025
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்.
4 நவம்பர் 2025
பென்னாகரம்
மாலை 5 மணி
பாலக்கோடு
மாலை 7 மணி
#உரிமைமீட்க
#தலைமுறைகாக்க
#அன்புமணியின்பயணம்
02/11/2025
ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்.
#உரிமைமீட்க
#தலைமுறைகாக்க
#அன்புமணியின்பயணம்
02/11/2025
இன்று, ஜெயங்கொண்டத்தில்.!
04/09/2025
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் மிலாதுநபி வாழ்த்து!
ஒழுக்கத்தையும், உண்மையையும் கற்பித்த இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.
போதனையும், பின்பற்றலும் இணைந்து செல்வது மிகவும் அரிது. ஆனால், தாம் கடைபிடித்ததை மட்டுமே போதனையாக வழங்கினார் நபிகள் நாயகம். இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற வழியில் பயணித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே போற்றத்தக்க பாடம் ஆகும்.
உண்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதில் அனைவரும் நபிகள் நாயகத்தை முன்னோடியாக ஏற்க வேண்டும். ஒழுக்கமும் உண்மையும் நிறைந்தால், உலகில் அமைதியும் வளமும் நிறையும். அந்த நிலை உருவாவது மட்டுமின்றி, மனநிறைவு, மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம், கொடை ஆகியவையும் நிறைந்ததாக மாற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
16/08/2025
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோளை ஏற்று, விடுதலை தினத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பானாபுரம்
மானத்தாள் நல்லா கவண்டன் பட்டி
16/08/2025
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோளை ஏற்று, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் விடுதலை தினத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேல்பள்ளிபட்டு
பாக்கம்பலம்