IUML Tamil Nadu State

IUML Tamil Nadu State

Share

Official Page for Indian Union Muslim league Tamil Nadu.

Photos from IUML Tamil Nadu State's post 04/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு பொது பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் A.M.ஷாஜஹான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முகமது அபூபக்கர் எக்ஸ் எம்எல்ஏ, மாநில துணைத்தலைவர் கே.நவாஸ் கனி எம்பி, தேசிய துணைச் செயலாளர் H.அப்துல் பாசித், மூத்த ஊடகவியலாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

04/06/2026

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

வக்பு சொத்துக்களுக்கு பட்டா, இடஒதுக்கீடு உயர்வு மற்றும் சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட சமுதாய கோரிக்கைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (04-06-2026) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று நல்லாட்சி நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துகளும், பாராட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.ஏஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான், மாநில செயலாளர் ஹெச். அப்துல் பாசித் ஆகியோர் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரையும் இணைத்துக் கொண்டு, பணியாற்றக் கூடிய வாய்ப்பு அளித்து கண்ணியப்படுத்தியமைக்கு சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்து எல்லா சமுதாய மக்களும் எல்லாமும் பெற்று வளமுடன் வாழ பிரார்த்தனை செய்வதாகவும் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்திய முஸ்லிம்களின் தனிபெரும் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் 05-06-2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காயிதே மில்லத் அடக்கதலம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெறுகின்றது. இவ்விழாவில் முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்டு விழாவில் கலந்து கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக முஸ்லிம் சமுதாய மக்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனு ஒன்றை அளித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அளித்த கோரிக்கை மனுவில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

பள்ளிவாசல், கபரஸ்தான்களுக்கு பட்டா வழங்க வேண்டுதல்:

தமிழ்நாட்டில் பெரும் பாலான பள்ளிவாசல்கள், கபரஸ்தான்கள், தர்காக்கள், மத்ரஸாக்கள், ஆஷுர் கானா என்ற வழிப்போக்கர் தங்குமிடங்கள், அனாதை இல்லங்கள் என்பவை ‘வக்ப்பை யூசர்’ என்ற பயன்பாட்டில் உள்ள வக்புகளாக காலம் காலமாக உள்ளன.
இதனிடையே “ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம்” என்ற பெயரில் வக்பு திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்து, வக்பு சொத்துகளை உமீத் வலைதளத்தில் பதிவு செய்ய டிசம்பர் 6, 2025 வரை ஒன்றிய அரசு அறிவித்து, பெரும்பான்மையான வக்பு சொத்துகள் பதிவு செய்யப்படாததால் சென்னை வக்பு தீர்ப்பாயத்தை தமிழ்நாடு வக்பு வாரியம் அணுகி ஜுன் 30, 2026 வரை கால அவகாசம் பெறப்பட்டுள்ளது.

ஆனாலும் ஏராளாமான பள்ளிவாசல்கள், கபரஸ்தான்களை பதிவு செய்ய முடியவில்லை. காரணம், இந்த வக்பு சொத்துக்களுக்கு பட்டா இல்லாததால் உமீத் போர்ட்டல் இதை பதிவுக்கு ஏற்கவில்லை.
எனவே காலம் காலமாக பயன்பாட்டில் உள்ள வக்பு சொத்துக்களை காப்பாற்ற, பட்டா இல்லாத பள்ளி வசாசல்கள், கபரஸ்தான்கள், தர்காக்கள், ஆஷுர்கானா, மத்ரஸா, அனாதை இல்லங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி, உமீத் போர்ட்டலில் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி, வக்பு சொத்துக் களை காப்பாற்றித் தர தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

மத வழிபாட்டு தலங்கள் புதிதாக கட்டுவதற்கும்,

புதுப்பிப்பதற்கும் அனுமதிக்கான தடங்கல்களை நீக்க வேண்டுதல்:

தமிழ்நாட்டில் சிறுபான் மையினரான முஸ்லிம் கள் உருவாக்கும் மத வழி பாட்டுத் தலங்கள் மற்றும் கட்டமைப்புகளை கட்ட அனுமதி கிடைப்பது சாத்திய மற்றதாக உள்ளது. இவற்றை புதுப்பிப்பதற்கும் விரிவுபடுத்து வதற்கும் வரைபட ஒப்புதல் பெறுவது கால தாமதமாகிக் கொண்டே செல்வதால் அப்பணிகள் தடைபெற்று நிற்கின்றன.

இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின் பொது (சட்டம் - ஒழுங்கு - பி) துறையின் அரசு செயலாளர் 07.03.2024 அன்று அனுப்பிய எண் 4398/ L & O B/2023 - 3 சுற்றறிக்கையும் நடைமுறைப்படுத்திப்படுவதில்லை.
இதனிடையே கடந்த 08.01.2026 அன்று G.O.MS No 4 அரசாணை பிறப்பிக் கட்டு, ‘மதச்சார்பான கட்டங்க ளுக்கு திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும், 2019 முதல் 2024 வரையிலான கால கட்டத்தில் அனுமதி வேண்டி விண்ணப்பித் திருக்கும் மதச்சார்பான கட்டங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு எல்லா காலத்திற்கும் பொருந்தும் வகையிலும், அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள பள்ளி வாசல்கள் மற்றும் மத்ரஸா புதிதாக கட்டுதல், புதுப்பித்தல் பணிகளுக்கு உடனடி அனுமதி கிடைத்து உடனடியாக பணியை தொடங்கிட உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி தரவும்,
இடஒதுக்கீட்டின் பலன் அனைத்து துறைகளிலும் கிடைக்கச் செய்யவும் வேண்டுதல்:

தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கி செப்டம்பர் 13 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் செய்யப்படுவதால் இதன் பலன் கிடைப்பதற்கு கால தாமதம் ஆகிறது; அத்துடன் அனைத்து துறைகளிலும் இந்த இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை
``தனி இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்டறியவும், அதை செயல்படுத்தவும் உயர்மட்ட குழு அமைத்திட வேண்டுகிறோம்.
மேலும், முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் கிடைக்கச் செய்யவும், வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கைதூக்கிவிட இந்த இட ஒதுக்கீட்டின் அளவை 3.5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்த்தி தரவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்பித்தர வேண்டல்:

தமிழ்நாட்டில் 500 க்கும் அதிகமான அளவில் சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்தும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை பள்ளிக் கூடங்கள் உள்ளன. 18க்கும் மேற்பட்ட கலைக் கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிலையங்களில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது.

சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு தேவைப்படும் பணியிடங்களை நிரப்பி, சிறுபான்மையினர் கல்வி முன்னேற்றத்திற்கு வழி செய்ய வேண்டுவதோடு, சிறுபான்மை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய விரிவுரையாளர்களை நியமிப்பதற்கும், பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவி யாளர்களை நியமிப்பதற்கும் உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசை வேண்டு கிறோம்.

மேலும், சிறுபான்மை முஸ்லிம்கள் நடத்துகின்ற ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் மற்றும் இதர பள்ளிகளுக்கு உரிய கால இடைவெளியில் அங்கீகாரங்கள் வழங்கிடவும், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தகுதியான பள்ளிக் கட்டிடங்களுக்கு உரிய கட்டணங்கள் மூலம் கட்டிட அனுமதி செய்து ஆணையிடவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மதுரை, கோவையில் வக்பு தீர்ப்பாயம் அமைக்க வேண்டுதல்:

தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் உள்ள வக்ப் நிறுவனங்களுக்கான பிரஃ பார்மா ரிப்போர்ட் என்ற மூல அறிக்கை, உரிமை ஆவணம் என்ற டைட்டில் டீடு, தூய இனாம் பதிவேடு என்ற இனம் ஃபேர் ரிக்கார்ட் இவைகளை ஆதாரமாகக் கொண்டு வக்ப் சொத்துக்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டு, வக்பு சொத்துகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு மாவட்டம்தோறும் தனி அதிகாரிகளை நியமித்து இப்பணியை முடுக்கி விட வேண்டியது அவசியமாகி உள்ளது.
அத்துடன், வக்ப் தொடர்பான தாவாக்கள் அனைத்தும் சென்னை வக்ப் தீர்ப்பாயத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் வழக்குகள் குவிந்து வருவ தோடு, வழக்குகள் முடியவும் நீண்ட கால தாமதமாகிறது.

எனவே ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்தபடி மதுரை மற்றும் கோவையில் வக்பு தீர்ப்பாயம் மிக விரைவாக அமைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கபரஸ்தான்களுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டுதல்:

தமிழ்நாட்டில் மாநக ராட்சி, நகராட்சிகள் புதிதாக அமைக்கப்பட்டும், விரிவாக்கம் செய்யப்பட்டும் வருகின்றன. தொழில், வாழ் வியல் வசதிகளை கருத்தில் கொண்டு கிராமப் புறங்களில் இருந்து நகரப் பகுதிகளி லேயே மக்கள் குடி வருகின்றனர்.
அப்படி இப்பகுதிகளுக்கு குடிவருகின்ற முஸ்லிம் கள் மரணித்தால் அவர்கள் நல்லடக்கம் செய்யப்படுவ தற்கு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கபரஸ்தான்கள் இல்லாமல் பெரும் சிரமம் ஏற்படுகிறது. முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சில பகுதிகளில் கபரஸ்தான்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதை கண்டறிந்து உரிய உத்தரவை பிறப்பித்திட வலியுறுத்துகிறோம்.

எனவே சென்னை பெருநகர மாநகராட்சி, புறநகர்கள் மற்றும் மாநக ராட்சிகள், நகராட்சிகளில் முஸ்லிம்களுக்கான அடக்கத் தலங்கள் என்ற கபரஸ் தான்கள் அமைக்க அரசு இடம் ஒதுக்கி தருமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு விடுதலை வேண்டல்:

தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகள் முன் விடுதலைக்கு தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 1762 / 20. 04. 1987 ன் படி தகுதி பெற்றும் விடுதலை மறுக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் சிறைவாசிகள் சிறையில் இருந்து வந்தனர். பெரும் முயற்சிகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கருணையால் பலரும் விடுவிக்கப்பட்டு 15 பேருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரோல் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அந்த பரோல் விடுப்பு காலம் இப்போது நீட்டிக்கப்படாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களின் மனைவி பிள்ளைகள் குடும்பத்தினருடன் வாழ்ந்து, சட்டத்தை முழுமையாக மதித்து, நேரிய வாழ்வை கடைபிடித்து வந்த நிலையில், 17.11.2025 அன்று அவர்கள் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தண்டனை காலத்திற்கும் மேலாக மிக நீண்ட காலம் அவர்கள் சிறையில் இருப் பதை கருத்தில் கொண்டு 22 முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் கருணை காட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டுவதோடு, இந்த விடுதலை உத்தரவு தாமதமாகும் பட்சத்தில் அதுவரை அவர்களுக்கு பரோல் விடுப்பு வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் நல்லிணக்கம் நிலைக்க வேண்டும்

மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்கா அனைத்து மதத்தினரும் வழிபாட்டுக்கு வந்து செல்லும் ஒரு திருத்தலம்.

இம்மலைமீது அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் அமைந்துள்ள தீப மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளில் இந்து பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலத்தில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் சிலர் வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். உயர்நீதிமன்ற தனி நீதிபதி அந்த கோரிக்கைக்கு இசைவாக உத்தரவு பிறப்பித்தார்.

இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் அந்த உத்தரவை உறுதிப்படுத்தியது. இந்த உத்தரவுக்கெதிராக இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. அவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
ஆண்டாண்டு காலமாக இருந்த நடைமுறைகளுக்கு எதிராகவும், கோவிலுக்கு சொந்தமில்லாத தர்கா நிலத்தில் அமைந்துள்ள கல் தூணில்தான் தீபமேற்றுவோம் என சமய ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழும் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொது ஒழுங்கை குலைக்கவும் சில விஷமிகள் மதத்தின் பெயரால் மேற்கொண்ட இந்த நடவடக்கைகளால் சமுதாயத்தின் அமைதிக்கும் சகவாழ்வுக்கும் மிகுந்ததொரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பெருவாரியான மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்று ஆட்சி அமைத்துள்ள மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில் இந்த திருப்பரங்குன்று கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வினில் மத அரசியலைக் களைந்து, சமூகப் பதற்றத்தை தனித்து மீண்டும் திருப்பரங்குன்றம் அமைதிப் பூங்காவாக திரும்பிடத் தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் அவர்கள் எடுத்திட வேண்டுமென ஒட்டுமொத்த தமிழ் சமுதாயம் எதிபார்க்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேற்கூறிய மேல்முறையீட்டை திறம்பட நடத்திட உரிய நடவடிக்கைகளை விரைவில் செய்திட வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.

உள்ளாட்சி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை (Ward Delimitation) என்பது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் எல்லைகளைச் சீரமைக்கும் மற்றும் புதிய வார்டுகளை உருவாக்கும் நடைமுறையாகும். ஆனால் கடந்த ஆட்சியின்போது, மக்கள் தொகை அடிப்படையாக கொண்டு இல்லாமல், வீடுகளின் அடிப்படையாக கொண்டு வார்டு மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. இதனால், முஸ்லிம்கள் மிகுதியாக கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் மிகுந்த வித்தியாசம் ஏற்பட்டு வார்டுகளின் வாக்காளர்கள் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரே வார்டில் இருக்கும் வீடுகள் கூட, மற்றொரு வார்டில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம்களின் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்து, சரியான முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதனால், சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், முக்கியத்துவம் குறைந்து வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தன.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறையின்போது, வீடுகளின் அடிப்படையில் இல்லாமல் மக்கள் தொகையின் அடிப்படையில் வார்டுகளை பிரிக்க வேண்டும். அப்படி வார்டுகளை அமைக்கும்போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி அமைப்புகளில் முறையாக கிடைக்கும். அதன்மூலம், சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் வார்டுகளில் அவர்கள் சார்ந்த நலன் தொடர்பான பணிகள் சிறப்பான நடைபெற வாய்ப்புகள் உருவாகும். எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறையை மக்கள் தொகை அடிப்டையில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நிரந்தர தலைமை செயல் அலுவலரை நியமிக்க கோருதல்

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்பு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் வக்பு வாரியத்திற்கு நிரந்தர தலைமை செயல் அலுவலர் (CEO) இல்லாததால், வக்பு வாரியத்தில் பணிகளில் தோய்வு ஏற்பட்டு, மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நிரந்தர தலைமை செயல் அலுவலவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இதன்மூலம், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் அனைத்துப் பணிகளும் தோய்வு இல்லாமல் நடைபெறும் என வாய்ப்புகள் உருவாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நிரந்தர தலைமை செயல் அலுவலரை (CEO)
நியமிக்க அரசு உடனடிகாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

சிறுபான்மையின நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோருதல்
தமிழ்நாடு சிறுபான்மையின நலத்துறையின் மூலம் மாநிலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்கள், தர்ஹாகள், தேவலாயங்கள் ஆகியவை புனரமைப்பு செய்யப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் தமிழ்நாடு சிறுபான்மையின நலத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால், சிறுபான்மையின நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
எனவே, 2026-27 நிதியாண்டில், தமிழ்நாடு சிறுபான்மையின நலத்துறைக்கு கடந்த காலங்களைவிட இரட்டிப்பாக நிதி ஒதுக்கீடு செய்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பக்ரீத் பெருநாள் குர்பானி தடையின்றி நடைபெற வேண்டும்

முஸ்லிம் மக்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருளான்று ஆடு, மாடுகளை பலியிடுவது முஸ்லிம்களின் மார்க்கக் கடமையாக இருந்து வருகிறது. நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பக்ரீத் பெருநாளாளை எந்தவொரு தடையுமின்றி சிறப்பான முறையிலேயே கொண்டாடி வருகின்றனர். பள்ளிவாசல் மற்றும் மதரசா வளாகத்தினுள் ஒதுக்கப்பட்ட தனி இடங்களிலும் தத்தம் இல்லங்களிலும், தோட்டத்திலும் பக்ரீத் பெருநாளுக்காக ஆடு, மாடுகளை அறுப்பதை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.

குர்பானி கொடுப்பதை எந்தவொரு பொது இடங்களிலும் செய்யப்படுவதில்லை. மேலும் இதனால், சமூகத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
சமீபத்தில் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் சில தனி நபர்களும், அமைப்பினரும், முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்கக் கடமையான பக்ரீத் நாளின் குர்பானி கொடுக்கும் நடைமுறையை தடுக்கும் தீய எண்ணத்தோடு செயல்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அரசின் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விலங்குகளை அறுக்க வேண்டும் என்று ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளை மேற்கோளிட்டு, தமக்கு சாதகமான தீர்ப்பினையும் பெற்றுள்ளனர். இதனால் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்ட அரசு அதிகாரிகள் பல்வேறுபகுதிகளில் முஸ்லிம் மக்கள் தங்களின் மார்க்க கடமையினை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இந்நிலையில், மத சிறுபான்மை மக்களின் அரசியல் சாசன உரிமைகளைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்ய வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதுபோன்று குழப்பங்களுக்கு முடிவு ஏற்படும் வகையில் பன்னெடுங் காலமாக நடைமுறையில் உள்ளவாறு பக்ரீத் நாளன்று முஸ்லிம்கள் குர்பானி கொடுக்கும் நிகழ்வினை மட்டும் சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் வரையறைக்குட்படுத்தாமல், விலக்கு அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தினை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

#சிறுபான்மையினர்நலத்துறை

Photos from IUML Tamil Nadu State's post 04/06/2026

தமிழ்நாடு அரசு மாண்புமிகு அமைச்சராக முதல்முறை தென்காசி வருகை தந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹானுக்கு எழுச்சி மிகு வரவேற்பு!

தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது முதல் மாவட்ட அதிகாரப்பூர்வ பயணமாகத் 03.06.2026 அன்று தென்காசிக்கு வருகை தந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் அவர்களுக்கு, தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வரலாறு காணாத எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாகத் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு, தென்காசி இரயில் நிலையத்தில் திரண்ட தென்காசி மாவட்ட, நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும், பொன்னாடைகள் மற்றும் மலர் மாலைகள் அணிவித்தும் உற்சாக முழக்கங்களுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த வரலாற்றுத் தருணத்தையும் தொண்டர்களின் பேரன்பையும் அமைச்சர் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

பச்சிளம் பிறைக்கொடி ஏற்றி வைப்பு

வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில், கட்சியின் அடையாளமான பச்சிளம் பிறைக்கொடியை மாண்புமிகு அமைச்சர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் முறைப்படி ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

கம்பீரமாகப் பிறைக்கொடி வானில் பறந்த அந்தப் பொன்னான தருணத்தில், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தக்பீர் முழக்கங்களை எழுப்பி, தங்களின் மகிழ்ச்சியைப் பேராதரவோடு வெளிப்படுத்தினர்.

#சிறுபான்மையினர்நலத்துறை

Photos from IUML Tamil Nadu State's post 04/06/2026

தென்காசியில் சிறுபான்மையினர் நலத்துறை ஆய்வு கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான்!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறப்பு ஆய்வு கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (03-06-2026) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தலைமை தாங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆய்வு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கோரிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை

இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்தும், அவர்களின் பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் குறித்தும் அமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டது. மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர், மக்களின் நியாயமான கோரிக்கைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விலையில்லா தையல் இயந்திரம், கிரைண்டர் விநியோகம்

ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து, சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விலையில்லா தையல் இயந்திரங்கள், மின்சார கிரைண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை மாண்புமிகு அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கி, தங்களது சுயதொழிலை நல்முறையில் மேம்படுத்திக் கொள்ள வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விரைந்து செயலாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

நிகழ்வில் பேசிய அமைச்சர், அரசு வழங்கும் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் அனைத்தும் தகுதியான கடைகோடி மக்களுக்கும் தங்கு தடையின்றிச் சென்றடைவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

#சிறுபான்மையினர்நலத்துறை

Photos from IUML Tamil Nadu State's post 04/06/2026

#பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு கூட்டம்: தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் ஆய்வு!

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடனான சிறப்புக் கலந்தாய்வு மற்றும் ஆய்வு கூட்டம் 02-06-2026 மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தலைமை தாங்கி, தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள் குறித்து தீவிர ஆய்வு

இக்கூட்டத்தில் பாபநாசம் வட்டாரத்திற்கு உட்பட்ட பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தற்போது தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்தும், தொய்வின்றி விரைந்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகள் அமைச்சரிடம் விரிவாக விளக்கிக் கூறினர்.

04/06/2026

"100 வருட கனவு.." "வாழ்த்து உங்களுக்குத்தான்" - அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் A.M.ஷாஜகான்

| | #சிறுபான்மையினர்நலத்துறை

03/06/2026

பேரிடர் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்

கபிஸ்தலம் அருகே அம்மாபள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் வீசிய கடும் காற்றில் மரம் விழுந்து இறந்த மதினா பேகம் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 4 இலட்சத்திற்கான காசோலையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வழங்கினார்

02/06/2026

THE FIRE Media YouTube channel பேட்டியில் IUML மாநில பொதுச் செயலாளர் KAM முஹம்மது அபூபக்கர் Ex MLA தெளிவான விளக்கம்....

* புதிய ஆட்சி அமைப்பதில் நடைமுறை சாத்தியம் இல்லாத யோசனைகள் தோல்வி!

* ஆட்சியில் பங்கேற்க கேரளாவில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா?

* முதலமைச்சர் விஜய் உத்தரவாதம் கொடுத்தார்!

* திமுகவை IUML விமர்சிக்கவில்லை

* குர்பானி விசயத்தில் அமைச்சர் ஷாஜஹான் விரைவாக செயல்பட்டார்!

* தலைவர் பேராசிரியர் KMK ஏன் கோபப்பட்டார்!

* கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தனியாக பிரிக்க முடியுமா?

* தமீமுன் அன்சாரி MLAக்கு IUMLலை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?

* சமுதாயத்தின் கள நிலவரம் தெரிந்த இயக்கம் முஸ்லிம் லீக்

02/06/2026

பேரிடர் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்

கபிஸ்தலம் அருகே அம்மாபள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் வீசிய கடும் காற்றில் மரம் விழுந்து இறந்த மதினா பேகம் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 4 இலட்சத்திற்கான காசோலையை இன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வழங்கினார்

02/06/2026

தலைமை நிலைய அறிவிப்பு

ஜூன் 5, சென்னை வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில்

காயிதே மில்லத் (ரஹ்) 131-வது பிறந்த நாள் ஜியாரத்

அனைத்து ஊர்களிலும் கொடியேற்று விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுகோள்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்களின் 131-பிறந்த தினமான 05.06.2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா மஸ்ஜித், வளாகத்திலுள்ள காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் அடக்கத் தலத்தில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு சேர்மன் பானக்காடு செய்யது சாதிக்அலி சிஹாப் தங்ஙள், தேசிய பொதுச் செயலாளரும் கேரள மாநில அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி ஆகியோர் முன்னிலையில் ஜியாரத் பாத்திஹா - துஆ மஜ்லிஸ் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பா ளர்கள் திரளாக பங்கேற்றிட கேட்டுக் கொள்கின்றோம்.

காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்த நாளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிறைக்கொடியேற்றி இனிப்பு வழங்குதல், தாய்ச்சபையின் மூத்த முன்னோடிகளை கௌரவித்தல், ஏழை எளிய மக்களுக்கு உதவுதல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளை சந்தித்து மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி நற்பணிகளாற்றிடவும், காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் மறுஉலக நல்வாழ்விற்காக திருக்குர்ஆன் ஓதி துஆ மஜ்லிஸ் நடத்திடவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகிகள், முஸ்லிம் மாணவர் பேரவை, முஸ்லிம் யூத் லீக், இந்திய யூனியன் மகளிர் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், தகவல் தொழில்நுட்ப அணி, காயிதே மில்லத் பேரவை, அகில இந்திய கேரள முஸ்லிம் கலாச்சார மையம் (கே.எம்.சி.சி.), வழக்கறிஞர் அணி (லாயர்ஸ் ஃபோரம்) வர்த்தகரணி, சுதந்திர கிசான் சங்கம் (விவசாயிகள் அணி) அயலகத்திலிருந்து தாயகம் திரும்பியோர் நலன் அணியான பிரவாசி லீக், சர்வசமய நல்லிணக்க மாமன்றம் ஆகிய பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

02-06-2026
சென்னை

(ஒப்பம்)
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Indian Union Muslim League
Chennai
600001