11/07/2019
#இந்து_நாளிதழில் மரு.ராமதாசு பற்றியக் கட்டுரை
இந்து தமிழ் திசை நாளிதழில் ’’தலைவர் 11” என்ற தலைப்பில் அரசியல் தலைவர்கள் குறித்த 11 அம்சங்களை விளக்கும் கட்டுரை வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் மரு.ராமதாசு பற்றிய 11 அம்சங்களை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது.இந்து தமிழ் திசை நாளிதழுக்கும், விவரங்களை தொகுத்தளித்த பத்திரிகையாளர் கே.கே. மகேசுக்கும் நன்றி!
தலைவர் 11: ச.ராமதாஸ்
ஜூலை 25 அன்று 80-வது வயதில் அடியெடுத்துவைக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கீழ்சிவிறி கிராமத்தில் சஞ்சீவிராய கவுண்டர் - நவநீதம்மாள் தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். உள்ளூர் ஆதிதிராவிடர் காலனியில் இருந்த காந்திஜி ஆதாரப் பள்ளியில்தான் ராமதாஸின் கல்விப் பயணம் தொடங்கியது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் நடத்திய பள்ளி அது. அந்தக் காலகட்டத்தில் அந்தப் பள்ளியில் படித்த தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் ராமதாஸ்.
பள்ளிக்கல்வி முடித்து, உரிய வழிகாட்டு தல் இல்லாததால், புலவர் படிப்பில் சேர முயன்றார் ராமதாஸ். “நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய். மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலென்ன?” என்று வழிகாட்டியவர் மூத்த மாணவர் சொக்கலிங்கம். ஆனால், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஒருவர் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்க, விரக்தியடைந்தார் ராமதாஸ். நமக்கெங்கே சீட் கிடைக்கப்போகிறது என்று கலக்கத்தில் இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. அந்த லஞ்ச நீதிபதியைத் தேர்வுக் குழுவிலிருந்தே நீக்கியிருந்தார் முதல்வர் காமராஜர். ஆக, சிபாரிசு இன்றியே மருத்துவர் இடம் கிடைத்து விட்டது.
ராமதாஸின் திருமணம், ‘லவ் அண்ட் அரேஞ்டு மேரேஜ்’ என்பது இன்றைய தலைமுறை அறியாதது. ராமதாஸின் மருத்துவப் படிப்புக்கு உதவிய உறவுக்காரரான ராமசந்திரனின் சகோதரி சரசுவதியைப் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே திருமணம் செய்துகொண்டார் ராமதாஸ். படிப்பு முடிந்ததும், திண்டிவனத்திலேயே அரசு மருத்துவரானார். ‘கைராசி டாக்டர்’ என்று பெயரெடுத்தார். மூன்றே ஆண்டுகளில் அரசு வேலையை விட்டவர், தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மாத்திரை, ஊசி எல்லாவற்றுக்கும் சேர்த்து மூன்று ரூபாய் மட்டுமே நீண்ட நாள் வாங்கினார். பத்தாண்டுகளுக்குப் பிறகே அது ஐந்து ரூபாய் ஆனது. காசில்லாமல் பார்த்த நாட்களும், நோயாளிகளுக்கு பஸ் கட்டணம் கொடுத்துவிட்ட நாட்களும்கூட உண்டு.
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் 1975-ல் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, தோட்டமாக்கினார் ராமதாஸ். 43 ஆண்டுகளாக அந்தத் தைலாபுரம் வீட்டில்தான் குடியிருக்கிறார். ராமதாஸுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஸ்ரீகாந்தி, அடுத்தது அன்புமணி, கடைசியாக கவிதா. மகள் வயிற்றுப் பேரன் சுகந்தனுக்குத் திருமணமாகி, கொள்ளுத் தாத்தாவும் ஆகிவிட்டார் ராமதாஸ். பிள்ளைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேத்தி என்று அத்தனை பேரும் கூடும் வகையில், ஆண்டுதோறும் அவர் நடத்தும் ‘தைக்கூடல்’ உறவினர்கள் தவறவிடாத சந்திப்பு நிகழ்ச்சி.
மருத்துவம் பார்த்த காலத்தில்தான் வன்னியர் சமூக மக்கள் எந்த அளவுக்கு மோசமாக வறுமையில் ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார் ராமதாஸ். விளைவாகவே கல்வி - வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு கேட்டு 20.7.1980-ல் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தார். ஏழு ஆண்டு களாகப் போராட்டங்கள் நடத்தியும் அவரைச் சந்திக்கவே முதல்வர் எம்ஜிஆர் மறுத்ததால், தொடர் சாலை மறியல் போராட்டத்தைக் கையில் எடுத்தார் ராமதாஸ். 1987 செப். 17 அன்று அவர் அழைப்பு விடுத்த போராட்டம் வட தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தது. பெரும் கலவரமும் வெடித்தது. காவல் துறை துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியிலும் 21 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந் தனர். ஒட்டுமொத்த இந்தியாவும் ‘யார் இந்த ராமதாஸ்?’ என்று கேட்டது.
ராமதாஸைப் பேச்சுவார்த்தைக்கு அழைத் தது அதிமுக அரசு. ஆனால், ராமதா ஸைச் சந்தித்த ஒரு மாதத்தில் எம்ஜிஆர் காலமாகிவிட ராமதாஸின் கோரிக்கை நட்டாற்றில் தத்தளித்தது. 1989-ல் திமுக ஆட்சியைப் பிடித்ததும், மீண்டும் போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த கருணாநிதி, காலம் தாழ்த்தாமல் ராமதாஸை அழைத்துப் பேச்சுநடத்தினார். வன்னியர் உட்பட 107 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரையறைக்குள் கொண்டுவந்து, அதற் கென 20% ஒதுக்கீடு வழங்கினார். வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ். நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது அரசு. கட்சியை உருவாக்கினார் ராமதாஸ். 16.07.1989-ல் பாமக பிறந்தது.
பாமகவின் தொடக்க காலத்திலேயே வட மாவட்டங்களில் வன்னியர் - தலித் சமூகத்தினர் இடையேயான மோதல்கள் ஒரு பிரச்சினையாகிவந்த நிலையில், இதற்கு முகங்கொடுக்காமல் கட்சியை எல்லோருக்குமானதாகக் கட்ட முடியாது என்பதை முழுமையாக உணர்ந்திருந்தார் ராமதாஸ். தலித் சமூகத்தினருட னான நல்லுறவை மனதில் கொண்டு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தார். அதில் மிக முக்கியமானது தமிழகத்தில் 100 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நிறுவும் திட்டம். “தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலைகளை அதிகம் திறந்த தலித் அல்லாத தலைவர் ராமதாஸ்தான். நீல நிறம் தலித்துகளின் குறியீடு என்பதாலேயே எல்லோரும் ஒதுக்குவார்கள். ராமதாஸோ பாமக கொடியில் நீலத்தை வலிய உள்ளடக்கினார். எல்லாக் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டும் இதைச் சொல்வேன்” என்று இன்றும் நெருக்கமானவர்களிடம் நினைவுகூர்வார் திருமாவளவன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒரு தலித் என்ற முழக்கத்தைப் பாமக மூலம் முன்வைத்தார் ராமதாஸ். மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு இடம் கிடைத்தபோது ‘பாமகவின் முதல் அமைச்சராக ஒரு தலித்’ என்று சொல்லி ஏழுமலையை அமைச்சராக்கினார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய சடலத்தைப் பொது வழியில் எடுத்துச்செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டபோது, சொந்த சமூகத்தையே பகைத்துக்கொண்டு சடலத்தைச் சுமந்துவந்த வரலாறும் ராமதாஸுக்கு உண்டு. அதெல்லாம் ஒரு காலம்.
தமிழுரிமைக்கான உறுதியான குரல்களில் ஒன்று ராமதாஸுடையது. அவருடைய நிழலில் வந்த ‘தமிழ் ஓசை’ நாளிதழ், ‘மக்கள் தொலைக்காட்சி’ இரண்டும் கையாண்ட தனித்தமிழ் அவருடைய அக்கறைக்கான அத்தாட்சி. மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்துசெய்ய வைத்தது, சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டுவரச் செய்தது, மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்க வைத்தது, நெடுஞ் சாலையோரக் கடைகளை மூடவைத்தது, தமிழ் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்று அறிவிக்கச் செய்தது என்று பல விஷயங்களைத் தன்னுடைய அரசியல் போராட்டங்களால் சாதித்தவர் ராமதாஸ்.
மத்திய - மாநில அரசுகள் செய்யும் தவறுகள் எதுவாயினும் முதலில் தட்டிக்கேட்பவராக இருக்கிறார். கூடவே, அரசுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைக்கும் விரிவான அறிக்கையும் அவரிடம் இருந்தே முதலில் வருகிறது. தமிழக அரசுக்கு வழிகாட்டும் வகையில் இவர் வெளியிடும், நிழல் நிதிநிலை அறிக்கை, விவசாயத்துக்கென தனியே வெளியிடும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கவனத்துக்குரியன. மும்முறை மத்திய அரசில் அங்கம்வகித்தபோது ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் வழி தமிழ்நாட்டுக்கு முக்கியமான சில திட்டங்களையும் கொண்டுவந்தது பாமக.
தன் வாழ்நாள் முழுவதும், தானோ, தன் குடும்பத்தினரோ கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க மாட்டோம் என்று சூளுரைத்தவர் ராமதாஸ். பிற் பகுதியில் தன்னுடைய மகன் விஷயத்தில் அதைப் பின்பற்ற முடியாமல் போய்விட்டாலும், தன்னளவில் சட்ட மன்றம், நாடாளுமன்றம் இரண்டையும் தவிர்த்தவர் ராமதாஸ். மத்திய கூட்டணி அரசில் அமைச்சர் பதவிகள் கிடைத்தபோது மற்றவர்களுக்குக் கொடுத்து அழகுபார்த்தவர். எல்லைகளைக் கடந்து, அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக ஆக வேண்டும் என்ற ராமதாஸின் கனவையே பெரும்பான்மை தமிழர்களும் விரும்புகின்றனர்!
செய்தி வெளியீடு..
ஊடகப்பிரிவு...