01/06/2026
ரொம்ப தப்பு Bro
தஞ்சையில் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடிய விவசாயிகள் மீதான காவல்துறை அத்துமீறல் கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும், பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை மேற்கொண்ட அத்துமீறல்களும், கைது நடவடிக்கைகளும் கடும் கண்டனத்திற்குரியவை.
தேர்தல் களத்தில், "விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் வகையில் அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.
விவசாயிகளைத் தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் ஏமாற்றும் செயலாகும். 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார முறை என்றும் அரசு அறிவித்திருப்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்துக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஜனநாயக ரீதியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், காவல்துறையைக் கொண்டு அவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல.
எனவே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்றும் வகையில், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் உடனடியாக, முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
01/06/2026
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்வி - அரசு மருத்துவர்களுக்கான 50% உள் இடஒதுக்கீடு பறிபோகும் ஆபத்து!
தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் காக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வீரியமாகப் போராட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல; அவை பல கோடி ஏழை, எளிய மக்களின் உயிரைக் காக்கும் உன்னத இடங்கள் ஆகும். இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற மிக முக்கியமான, உயர்தர மருத்துவப் படிப்புகளில் (Super Speciality), தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கென 50% உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்திப் பெற்ற இந்த உரிமை, இன்று தமிழக அரசின் மெத்தனப்போக்கால் பறிபோகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 215 இடங்களில், கடுமையான தகுதி மதிப்பெண் (Cut-off) நிபந்தனைகளால் தற்போது வரை 74 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை ஒன்றிய அரசின் ‘அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு’ (All India Quota) தாரை வார்ப்பதற்கான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
வழக்கமாக இது போன்ற சூழல்களில் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து, முதலில் தமிழக மருத்துவர்களைக் கொண்டுதான் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், தமிழக அரசின் பலவீனமான வாதத்தாலும், தவறான அணுகுமுறையாலும் நமது மாநில இடங்கள் வெளிமாநிலத்தவருக்குச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.
இந்தக் காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்குத் தாரை வார்ப்பது ஏழை, எளிய பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இதன் விளைவாக, சிக்கலான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஏழை நோயாளிகள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து, தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது தமிழக பொது சுகாதாரத் துறையையே ஒட்டுமொத்தமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தகுதி மதிப்பெண்களைக் குறைக்கும் போதெல்லாம், அதே சலுகையைத் தமிழக அரசு மருத்துவர்களுக்கும் நீட்டித்து, காலி இடங்களை நமது மாநில மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும். கடந்த காலங்களைப் போல உச்ச நீதிமன்றத்தில் வலுவான, வீரியமிக்க சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் தமிழக அரசு உடனே பாதுகாக்க வேண்டும்.
ஆகவே, தமிழக மருத்துவர்களின் உரிமையையும், ஏழை எளிய மக்களின் இலவச உயர் சிகிச்சைக்கான உரிமையையும் நிலைநாட்ட, சட்டப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
31/05/2026
நீட் தேர்விற்கான Question paper பிரதமர் நேரடி பார்வையில் இருந்தால் மட்டும்தான் பாதுகாப்பு ஏனென்றால் இவர் தான் சௌக்கிதார்
31/05/2026
அரசமைப்புச் சட்டத்தின் மத உரிமைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் குர்பானி தடை உத்தரவு விவகாரம்:
தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பக்ரீத் பெருநாள் அன்று எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை அரசு அனுமதியுள்ள பதிவு செய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பலியிடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு, இஸ்லாமியப் பெருமக்களின் சமய உரிமைகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொன்றுதொட்டு விலங்குகளைப் பலியிட்டு வழிபடும் வழக்கம் கொண்ட தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பூர்வகுடி சமூகங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
இந்துத்துவ ஆதரவாளரால் தொடரப்பட்ட இந்த வழக்கில், பக்ரீத் பண்டிகையின் முதல் நாள் அன்று மாலை இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்பதை உணர்த்துகிறது. பண்டிகைக் காலத்தையும், அதற்குப் பிந்தைய சூழலையும் இலக்கு வைத்து இத்தடை அமலாக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் ஆபத்தான போக்காகும். இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய சட்டப் பொறுப்பு இருந்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்திற்கே வழிவகுக்கும்.
நீதியரசர் அவர்களின் உத்தரவின்படி, அரசு அனுமதி பெற்ற இடங்களைத் தவிர பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி, தனி நபர்களின் சொந்த இடங்களிலும் மாடு உள்ளிட்ட எந்தவொரு கால்நடையையும் பலியிடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு, இஸ்லாமியர்களின் 'குர்பானி' கடமையை முடக்குவது மட்டுமல்லாமல், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும், அனைத்து சமூக மக்களின் பாரம்பரிய உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கும். இத்தகைய ஆபத்தான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை மேல்முறையீடு செய்யாமல் மௌனம் காப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, வடமாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க இந்துத்துவ அமைப்புகள் முயன்றுள்ளன. அதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குர்பானி கொடுப்பதற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுகளும், இந்துத்துவ அமைப்புகளுடன் இணைந்து காவல்துறை மாடுகளைப் பறிமுதல் செய்த கண்டனத்திற்குரிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. காவல்துறையின் கண்காணிப்பை மீறி, இத்தகைய கும்பல்கள் மாடுகளைக் கைப்பற்றும் அத்துமீறல்களில் ஈடுபடுவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவான போதிலும், தமிழக அரசோ அல்லது தமிழக முதல்வரோ இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது சரியல்ல. முக்கியமாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏமாற்றமளிக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சமூக நீதித்துறை அமைச்சரும் தங்களுக்குரிய பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஷாஜகான் அவர்கள் துறை சார்ந்த எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த விவகாரத்தில் அச்சத்தில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குத் தைரியம் அளிக்கும் வகையிலான உடனடி ஆறுதல் நடவடிக்கைகளை அவர் அரசுடன் இணைந்து மேற்கொண்டிருக்க வேண்டும். எனவே, இந்த குர்பானி தடை உத்தரவு விவகாரத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு வெறும் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல; இது கால்நடைகளை பலியிடும் பாரம்பரிய வழக்கம் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் எதிரானது என்பதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வரும் மதச் சடங்குகளையும், பண்டிகைக் கால வழிபாட்டு உரிமைகளையும் மக்கள் வழக்கம்போல அச்சமின்றித் தொடர்வதை அரசு உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
29/05/2026
பக்ரீத் மாடு பலியிட தடை குறித்தான தீர்ப்பு - நீதிபதி
திருப்பரங்குன்றம் தொகுதி MLA தற்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
எங்கேயோ இடிக்குதே
27/05/2026
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போது நடைபெறும் குர்பானி நிகழ்வு, காலம் காலமாகப் பிற மதத்தினரோடு இணைந்த ஒரு சிறந்த சமூக நல்லிணக்க விழாவாக, எவ்விதப் புகாரோ இடையூறோ இன்றி அமைதியான முறையில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இந்த எளிய பாரம்பரிய நடைமுறையில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்ற கவலையையும் அதிர்ச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பானது நீதிமன்றம் சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் நுழைந்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.எனவே, தமிழக அரசு மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதற்குரிய சட்டப்பூர்வ மேல்முறையீட்டு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்தத் தீர்ப்பின் பின்னணியில் தேவையற்ற பதற்றமோ அச்சுறுத்தலோ ஏற்படாத வண்ணம், சிறுபான்மை மக்களின் குர்பானி போன்ற வழிபாட்டு உரிமைகளையும் பக்ரீத் கொண்டாட்டங்களையும் அரசு நிர்வாகமும் காவல்துறையும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். சட்டத்தின் கடமையும் சமூக நடைமுறையும் இணைந்து செல்வதே உண்மையான ஜனநாயகம் என்பதால், அரசு இதில் உரிய கவனம் செலுத்தி நல்லதொரு தீர்வைக் காண வேண்டும்.
- முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
27/05/2026
அனைவருக்கும் இனிய தியாக திருநாள் ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துக்கள்