07/02/2026
சிவகாசி ரயில் நிலைய பெயர்ப் பலகையில் தமிழை பின்னுக்கு தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது மறைமுகமான இந்தி திணிப்பை ஊக்குவிக்கிறது.
இத்தகைய இந்தி திணிப்பு முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழை பின்னுக்குத் தள்ளி இந்தியை திணிக்க முயலும் ஒன்றிய அரசு துறைகளின் முயற்சிகள் அப்பட்டமாக தமிழ் மக்களின் மொழி உணர்வுகளை அவமதிக்கும் செயல்.
தமிழ் மக்களின் உணர்வை மதித்து தெற்கு ரயில்வே பெயர்ப்பலகையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
தேசிய செயலாளர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
07/02/2026
காயிதே மில்லத் எச்சரிக்கையும்,
13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா முடிவும்!
எல்லையோரங்களில் வாழும் இந்திய முஸ்லிம்களை "பாக்கிஸ்தானிகள்" எனக் கூறி வெளியேற்றிய அக்ரமத்தை எதிர்த்து காயிதே மில்லத் குரல்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் சட்டமன்றத்தைச் சேர்ந்த 13 காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்:"இந்திய முஸ்லிம்களை வெளியேற்றும் அக்ரமம் நிறுத்தப்படாவிட்டால், எங்கள் பதவிகளை ராஜினாமா செய்வோம்!மேலும், வெளியேற்ற விவகாரங்களை விசாரிக்க நீதிமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
07/02/2026
ரமலான் மாதத்திற்கு முன்பாக முகப்பேர் - நொலம்பூரில் முஸ்லிம்களுக்கு அடக்கஸ்தலம் வழங்கப்படும்.
நீண்ட நாள் கோரிக்கை ஏற்ற தமிழ்நாடு அரசிற்கு ஜமாஅத்தினர் நன்றி!
சென்னை.பிப்,1. சென்னை முகப்பேர் மேற்கு நொலம்பூர் மஸ்ஜித் முபாரக் விரவாக்கம் மற்றும் அரபி மதரஸா புதிய கட்டிட திறப்பு விழா 01.02.2026 அன்று காலை 11.30 மணியளவில் ஜமாத் தலைவர் காதர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிவாசல் மற்றும் மதரஸா விரிவாக்க புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்,அதாயி கல்வி குழுமத்தின் நிறுவனர் மெளலவி முஹம்மது நிசார் ஜமாலி,முஸ்லிம் தொண்டு இயக்க தலைவர் மன்சூர் ஹாஜியார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுக் குழு உறுப்பினர் பூவை எம்.எஸ்.முஸ்தபா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது,பொருளாளர் ரஹ்மான் ஹுசைன், பாடி ரசூல்தீன் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசும்போது,
அன்மையில் கும்பகோணத்தில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று ஐந்து முக்கிய அறிவிப்புகளை செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நெலம்பூர் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு அடக்கத்தலம் -கபர்ஸ்தான் இல்லாமல் ராயப்பேட்டை வரை வந்து மரணித்தவர்களை அடக்கம் செய்ய வேண்டி உள்ளது, இதனை கருத்தில் கொண்டு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, நொலம்பூரில் முஸ்லிம்களுக்கான அடக்கஸ்தலம் உருவாக்கும் பணிகளை விரைவு படுத்தி ரமலான் மாதத்திற்கு முன்பே அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்று ரமலானுக்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு நொலம்பூர் அடக்கஸ்தலம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஜமாத்தினர் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
30/01/2026
முனைவர் அறிவியல் ஆய்வாளர்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தமிழ்த்தொண்டு, சங்கத்தமிழ் வளர்த்த புலவர் வழியில் என்றும் தொடர வாழ்த்துகிறேன்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு
திருச்சி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தமிழ்த்தொண்டு, சங்கத் தமிழ் வளர்த்த புலவர் வழியில் என்றும் தொடர வாழ்த்துகிறேன் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-தங்கத் தமிழகத்தில் பொங்குபுகழ் பெற்று வரும் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மேலான வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நாடும் நானிலமும் போற்றும் விதமாகப் பணியாற்றி எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றுத் திகழ்கிறார். அவரின் பாரம் பரியம் அன்பில் தர்மலிங்கம் அவர்களுடைய பண்பாட்டு குடும்ப பாரம்பரியம் என்பதை நாட்டு மக்கள் நன்றாகத் தெரிந்திருக்கிறார்கள்.
அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது பாரம்பரியக் குடும்பப் பண்பாட்டுக்கு ஏற்ப, தனது சொல்லாலும், செயலாலும், மக்கள் தொண்டாலும் வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறார். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பங்கேற்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை நிகழ்த்தித் தமிழ் பண் பாட்டையும், தமிழ் இலக்கியச் சிறப்பையும் உலகளாவிய முறையில் பரப்புரை செய்து வந்திருக்கிறார். மதநல் லிணக்கம் பேணுவது இவருடையவும் இவரது குடும்பத்தின் பாரம்பரியமும் சாதித்து காட்டும் சரித்திரம் ஆகும். பள்ளிக் கல்விக்குப் பணியாற்றும் அமைச்சர் அவர்கள் ஆய்வாளராகவும் பணி தொடர்கிறார் என்பது அவர்களின் கணினி, ஆறிவியல், உடற் கல்வியியல் (இருபுலச்சார்பு) பாடத்தில் ஆய்வு மேற்கொண்டதற்காக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் வழங்கப் பட்ட முனைவர் பட்டம் சான்றாகிவிட்டது. முனைவர் பட்டம் பெற்றுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது இதயப்பூர்வமான பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து, அமைச்சர் அவர்களின் தமிழ்த் தொண்டு, சங்கத்தமிழ் வளர்த்த புலவர் வழியில் என்றும் தொடரவும் வாழ்த்திப் பாராட்டுகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தனது இதயப்பூர்வமான பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்திருக் கிறார்கள்.
தமிழ்நாட்டு அமைச்சர் பெருமக்கள் யாவரும், தமிழகத்தில் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆய்வாளர்களும், தமிழ்ச் சான்றோர்களும் பெரியோர்களும் மகேஸ் பொய்யாமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிழ்கிறார்கள்.
தமிழக அரசு, `நான் முதல்வன்’ திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களின் தனித்தன்மையான வளர்ச்சிக்கு வழிகாட்டி யிருக்கிறது.
அதற்கு முன்னுதாரணமாக, மாணவர் களுக்கு முதன்மையாக வழிகாட்டும் விதத்தில், பள்ளிக் கல்வி, அமைச்சர் அவர்களின் ஆய்வு விளங்குகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை பள்ளிக்கல்வி அமைச்சரும் தனது ஆராய்ச்சி மூலம் நிரூபித்திருக்கிறார். திராவிட மாடல் நல்லாட்சி நாள் உள்ள நாளெல்லாம் நீடிக்க வாழ்த்துகிறோம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு மகேஸ் பொய்யாமொழி அவர்களின் தமிழ்த் தொண்டும், மாணவர்களுக்கு ஆற்றும் சேவையும், தமிழகத்திற்கு அறிவார்ந்த முறையில் அழகிய வழியில் எல்லோரும் செல்ல வேண்டும்; தமிழகம் எல்லா வழிகளிலும் வெல்ல வேண்டும்; இதை வரலாறு எப்போதும் சொல்ல வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.
முனைவர் அறிவியல் ஆய்வாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.