All India Democratic Women's Association

All India Democratic Women's Association

Share

Official Page of All India Democratic Women's Association Tamilnadu State Committee

27/03/2026

பெண்களை அவமரியாதையாக பேசும் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசியல் தளத்தில் பெண்களை இழிவுபடுத்தும், அவமதிக்கும் மற்றும் பாலின வெறுப்பை தூண்டும் கருத்துக்கள் அதிகரித்து வருவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சமீபத்தில், நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து மிகக் கண்டிக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்ராம் என்பவரும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளார்.
மேலும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் அவர்கள் பொதுநிகழ்ச்சியில் பெண்களை அவமரியாதையாக குறிப்பிட்டது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் அரசு நலத் திட்டங்கள் குறித்து பேசுகிறபோது மோசமான கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த அனைத்து சம்பவங்களும் தனிப்பட்ட சம்பவங்களாக பார்க்க முடியாது பெண்களை அவதூறாக பேசுவது என்பது அரசியல் பேச்சு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற்ற முயலும் ஆபத்தான போக்கை இது பிரதிபலிக்கிறது. இது ஜனநாயக அரசியல் சூழலில் பெண்களின் பங்கேற்பைத் தடுக்கின்றது மற்றும் அவர்களின் கண்ணியத்துக்கு நேரடி தாக்குதலாக அமைகிறது.
இத்தகைய கருத்துக்கள், தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிமுறைகள் வெளிப்படையாக மீறுகின்றன. குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பாலின அடிப்படையில் தாக்குதல் நடத்துவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தகைய செயல்கள் சட்ட விரோதமானவை.
மேலும், இத்தகைய செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் கீழ் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் குற்றமாகவும், கருதப்பட வேண்டியவை.
பெண்களை இழிவுபடுத்தும் இந்தக் கருத்துக்கள், பாலின அடிப்படையிலான வெறுப்பை தூண்டுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளை பாதிக்கும் நோக்கத்துடனும் வெளியிடப்படுகின்றன.
உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் பெண்கள் குறித்து மோசமான கருத்துக்களை வெளியிடும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் மீது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்க வேண்டும்.
கடுமையான மீறல்கள் ஏற்பட்டால், அவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியையே ரத்து செய்யும் சட்ட நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி FIR பதிவு செய்ய மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினர் நிர்வாகிகளின் இத்தகைய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க வேண்டும்.
பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சமத்துவம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளாகும். அரசியல் மேடைகள் பெண்களை இழிவுபடுத்தும் இடமாக மாற அனுமதிக்க முடியாது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், பெண்களை அவமதிக்கும் இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறறோம்.

ஜி.பிரமிளா
அ.ராதிகா

தலைவர் பொதுச்செயலாளர்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
தமிழ்நாடு

19/03/2026

பெண்ணுரிமைப் போராளி டாக்டர் உ. நிர்மலா ராணி அவர்களின் மறைவிற்கு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் போராட்ட உணர்வும், சமூக நீதி பற்றுதியும் கலந்த அர்ப்பணிப்பு மிக்க பெண்ணுரிமைப் போராளி டாக்டர் உ. நிர்மலா ராணி அவர்கள் 17.03.2026 அன்று காலமானார், என்ற செய்தி எங்களை அளவற்ற துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் உமாநாத் பாப்பா உமாநாத் அவர்களின் மகளாக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைகுழு உறுப்பினர் தோழர் வாசுகியின் சகோதரியுமாக, போராட்ட மரபில் வளர்ந்தவர், அந்த மரபை தொடர்ந்தே வாழ்ந்தார். பெண்கள், குழந்தைகள், அடக்குமுறைக்கு உள்ளான சமூகத்தினரின் உரிமைக்காக நீதிமன்றங்களிலும், சமூக அரங்குகளிலும், கள போராட்டங்களிலும் தீவிரமாக குரல் கொடுத்தவர்.
டாக்டர் நிர்மலா ராணி அவர்கள், வழக்கறிஞராக
அநீதிக்கு எதிராக ,சட்டத்தை ஆயுதமாக மாற்றிய போராளி.
பொதும்பு பள்ளி மாணவிகள் மீதான கொடூர வன்முறையில் இருந்து, திட்டக்குடி மாணவிகள் மீதான பாலியல் சுரண்டல் வழக்குகள் வரை — ஒவ்வொரு சம்பவத்திலும் அவர் எடுத்த சட்டப் போராட்டங்கள்,
பெண்கள் குழந்தைகள் மீது இழைக்கப்படுகிற கொடுமைகளுக்கு எதிராக , அவர்களின் வாழ்வுரிமைக்கான வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

சமூகத்தின் இருண்ட மூலைகளில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு உண்மை அறியும் பணிகளில் அவர் எடுத்த முயற்சிகள்,
“குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பது தான் அரசியல்” என்ற மார்க்சிய–பெண்ணிய நிலைப்பாட்டின் உயிர்ப்பாக இருந்தது.
பெண்களை வெறும் ‘பாதிக்கப்பட்டவர்களாக’ அல்ல —
சமூக மாற்றத்தின் செயற்பாட்டாளர்களாக பார்க்கும் பார்வையே அவரது பணியின் அடிப்படையாக இருந்தது.
சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய அடக்குமுறைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் ,அதற்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தையும் முன்ன்னெடுத்தவர்.
அவர் தயாரித்த சட்ட ஆவணங்கள், ஆய்வறிக்கைகள், பகுப்பாய்வுகள்
இவை அனைத்தும் பெண்கள் இயக்கத்திற்கு வழிகாட்டும் அரசியல் ஆயுதங்களாகத் தொடரும்.

டாக்டர் நிர்மலா ராணி அவர்களின் மறைவு,
அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல
பெண்களின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஒரு பெரிய இழப்பு குறிப்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு பேரிழப்பு.
அவரின் போராட்ட வாழ்க்கை பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களுக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்.
அவர் விட்டு சென்ற பணியை அதே உத்வேகத்தோடு தொடர்வோம்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உரிமைக்காக,போராடுகிற பெண்களுக்காக
பெண்களின் உடல், உழைப்பு, வாழ்க்கை அனைத்தையும் சுரண்டும் ஆணாதிக்க–வர்க்க ஆதிக்க அமைப்புகளுக்கு எதிராக,
டாக்டர் நிர்மலா ராணி அவர்கள் முன்னிறுத்திய மார்க்சிய–பெண்ணிய போராட்டப் பாதையை,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மேலும் வலுப்படுத்தி முன்னெடுக்கும்.
அவரின் நினைவு நம் நெஞ்சங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு போராட்டத்திலும் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும்.
டாக்டர் உ. நிர்மலா ராணி அவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு வெண்கொடி தாழ்த்தி எங்கள் சிவப்பு வணக்கத்தையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஜி.பிரமிளா
அ.ராதிகா

தலைவர்
பொதுச்
செயலாளர்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
தமிழ்நாடு

17/03/2026

துயரச் செய்தி...

CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கையும், திருச்சிராப்பள்ளி மூத்த வழக்கறிஞர் திரு C. K. ராஜ்குமார் அவர்களின் இணையரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், மகளிர் சட்ட உதவி மன்றத்தின் தலைவர், வழக்கறிஞர், டாக்டர் உ. நிர்மலாராணி அவர்கள் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

அவரது இறுதிச் சடங்கு நாளை மதியம் 3.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி தில்லைநகர் விஸ்தரிப்பு, மூன்றாவது குறுக்கு தெரு, கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளி அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

17/03/2026
12/03/2026

தமிழக அரசே!
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக!

12/03/2026

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்கவும், 60 ரூபாய் விலையேற்றத்தையும் குறைக்கவும் வலியுறுத்தி தென் சென்னையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

Photos from All India Democratic Women's Association's post 07/03/2026

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெண்கள்,தொழிலாளர்கள், விவாசாயிகள், விவசாய தொழிலாளர்கள் , இளைஞர்கள், மாணவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் Aidwa, CITU,aiks, alawu,DYFI, SFI
தலைவர்கள் கலந்து கொண்டனர்.

28/02/2026

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பதின்ம வயது கருவுறுதல்! பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை நூறாண்டு பின்னுக்குத் தள்ளும் ஆபத்து
“திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் சுமார் 834 பதின்ம வயது கர்ப்பங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளன. ….”
மாதர் சங்க கலந்தாய்வில் வேதனை .
திருச்சிராப்பள்ளி, பிப். 27 - “சமுதாயத்தில் இன்று பெருகி வரும் பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பள்ளிப் படிப்பைப் பாதி யிலேயே நிறுத்தும் இடைநிற்றலே முதன்மையான காரணமாக அமைகிறது. கல்வி இடைநிற்றலை முழுமையாக ஒழிப்பதன் மூலமே பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் முறையற்ற - குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த முடியும்” என்று தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் விஜயா மிக ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
மாதர் சங்க கலந்தாய்வு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில், “அதிகரித்து வரும் பதின்ம வயது கர்ப்பம் மற்றும் களப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்” குறித்த முக்கியக் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாதர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச் செயலாளர் மல்லிகா வரவேற்றுப் பேசினார்.

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களும் எச்சரிக்கையும்

கருத்தரங்கில் மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா தனது தொகுப்புரையில் முன்வைத்த புள்ளிவிவரங்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தின. திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் சுமார் 834 பதின்ம வயது கர்ப்பங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய தரவாகும்.

வட மாநி லங்களில் மட்டுமே இத்தகைய சமூகச் சீர்கேடுகள் அதிகம் இருப்பதாகக் கருதப்பட்ட பொதுவான பிம்பத்தை உடைத்து, பகுத்தறிவு மற்றும் பெண் உரிமைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி வரும் தமிழகத்திலேயே இந்தப் பாதிப்பு இவ்வளவு தீவிரமாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், “சாதியக் கட்டுப்பாடுகள் மற்றும் குடும்பக் கௌர வம் என்ற பெயரில் நெருங்கிய உறவினர்களுக்கு ள்ளேயே செய்யப்படும் பதின்மப் பருவ - மற்றும் - முறையற்ற திருமணங்களே இத்தகைய இளம் வயது கர்ப்பங்களுக்கு முதன்மைக் காரணமாகும். இந்தப் போக்கு பெண் குழந்தைகளின் கல்வியையும் அவர் களது ஒளிமயமான எதிர்காலத்தையும் நூறாண்டுகள் பின்னோக்கித் தள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

போக்சோ வழக்குகளைக் கையாள் வதில் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் அணுகுமுறை இன்னும் மேம்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகப் பார்க்கும் மனநிலை மாற வேண்டும்.

இதற்குத் தீர்வாக, கேரளா அரசு பின்பற்றுவதைப் போன்ற பெண் குழந்தைகள் நலக் கொள்கைகளைத் தமிழக அரசும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இது குறித்து வெளிப்படையாக உரையாட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கல்வி இடைநிற்றலும் நிர்வாகத் தோல்வியும்

சிறப்புரையாற்றிய மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் விஜயா, இன்றைய சூழலில் நிலவும் நிர்வாகக் குறைபாடு களைப் பட்டியலிட்டார். தமிழக அரசு கல்வித் துறைக்காக ஆண்டுக்கு சுமார் 48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இவ்வளவு பெரிய நிதி வசதிகள் இருந்தும், மாவட்ட மற்றும் வட்டார அளவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்துவது ஏன் என்பதை அரசு தீவிரமாக ஆராய வேண்டும்.

பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் அலைந்து திரியும் குழந்தைகள் எளிதாகச் சமூக விரோதச் செயல்களுக்கு ஆட்படுகிறார்கள். 14 வயதுச் சிறுமி, தான் ஏழு மாத கர்ப்பமாக இருப்பது கூடத் தெரியாமல் மருத்துவமனைக்கு வரும் அவல நிலை நீடிக்கிறது. ஒரு மாணவியின் உடலில் ஏற்படும் இத்தகைய உயிரியல் மாற்றங்களைப் பள்ளியில் உள்ள பெண் ஆசிரியர்கள் கூடக் கவனிக்கத் தவறுவது வருத்தத்திற்குரியது. ஆசிரி யர்களுக்கு இது குறித்த கூடுதல் விழிப்புணர்வும் கண்காணிப்பும் அவசியமாகிறது.

டிஜிட்டல் ஆபத்தும் உறவினர்களின் அத்துமீறலும்

இன்றைய செல்போன் கலாச்சாரம் குறித்துப் பேசிய அவர், “10 வயதுக் குழந்தைக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் மிக விரைவாகவும், சில நேரங்களில் தவறான முறையிலும் சென்றடை கின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் எனும் கொள்ளிக் கட்டையை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொருளாதாரத் தேடலில் தாய், தந்தை இருவரும் ஓடிக்கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தனி அறைகளில் முடங்கிச் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகிப் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது” என்றார்.

மேலும் ஒரு கசப்பான உண்மையை அவர் உரக்கச் சொன்னார்: “பாலியல் அத்துமீறல்களுக்குப் பலியாகும் குழந்தைகளில் பெரும்பாலோர் அந்நியர்களால் பாதிக்கப்படுவதில்லை; நன்கு தெரிந்த 40 முதல் 50 வயதுடைய உறவினர்களே இதற்கு 50 சதவீதக் காரணமாக இருக்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்குப் ‘பாதுகாப்பான தொடுதல்’ மற்றும் ‘பாதுகாப்பற்ற தொடுதல்’ குறித்த முறையான பாலியல் கல்வியைப் பள்ளிகளிலேயே வழங்க வேண்டும்.

பெண் பிள்ளைகளை மட்டும் வீட்டு வேலைகளுக்குப் பழக்குவதையும், ஆண் பிள்ளைகளுக்குத் தளர்வுகளை வழங்குவதையும் பெற்றோர்கள் கைவிட்டு இருபாலரையும் சமமாக வளர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தீர்வுகளுக்கான பரிந்துரைகள்

குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், திருமண மண்டபங்களில் மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் அட்டையைச் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். குழந்தைகளுக்கெனப் பிரத்யேக “குழந்தைகள் நேய காவல் நிலையங்கள்” அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஆணையம் முன்வைத்துள்ளது.

இந்தக் கலந்தாய்வில் திரட்டப்பட்ட அனைத்து ஆலோசனைகளும் கோரிக்கைகளும் அடுத்த 15 நாட்களில் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாதர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.பூமயில், மருத்துவர்கள் சுபாஷினி, ஜாஸ்மின், திவ்யா, பத்மபிரியா மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சீத்தா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, இந்திய மாணவர் சங்கத்தின் ஆமோஸ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சரஸ்வதி நன்றியுரை கூறினார். (ந.நி.)

நன்றி : தீக்கதிர் 28 /02 /26.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


6th Main Road
Chennai
600004