Sinthanai Selvan

Sinthanai Selvan

Share

General Secretary - Viduthalai Chiruthaigal Katchi (VCK) | Ex-MLA of Kattumannarkoil

22/05/2026

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி.

இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் M. K. Stalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன்.

இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன்.

யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம்.

இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.

மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள்.

கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். ….

- எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.

- அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்
SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

- ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy)
பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி )
ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.

- சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

- பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.

- மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.

- திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

- இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில் அவர்களுக்கான தொழில் முனைவோர் மாநாடு ( TN BEAT ) சென்னை trade centre ல் கடந்த மூன்று ஆண்டுகளாய் மிக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

- கடந்த பல ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பதிவான பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடிச்சமூகங்களின் மீதான சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளின் அடிப்படையில் வன்கொடுமைக்கு பலியான குடும்பங்களின் வாரிசுதாரர்கள் கண்டறியப்பட்டு
சுமார் 500 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. வேலை பெற வயது தகுதி இல்லாதோருக்கு மாதம் 5000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

- வன்கொடுமையில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வந்த தீருதவி தொகை எட்டு லட்சத்தோடு தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசின் பங்களிப்பாக நான்கு லட்சம் சேர்த்து மொத்தம் 12 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய மாநிலங்களில் முன்னுதாரணமானது.

- பட்டியல் வகுப்பார் பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள கிராமப்புற கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள அறநிலையத்துறையால் வழங்கப்பட்ட தொகை ஒரு லட்சம் என்பது இரண்டு லட்சமாக உயர்வு

- தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் நமது வேண்டுகோளையடுத்து 3600 லிருந்து 5000 மாக உயர்த்தப்பட்டது.

- ஆதிதிராவிடர் நல விடுதிகளின் பழைய கட்டுமான வடிவம் முற்றிலும் மாற்றப்பட்டு நவீன கட்டமைப்பு வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர் உணவு மானியம் 300 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டது. மேலும் விடுதிகளின் பெயரும் சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்யப்படுள்ளன.

- ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் என அரசு விழாவாக அறிவிப்பு

- சென்னையில் திராவிடப் பேரொளியை பண்டித அயோத்திதாசர் மணிமண்டபம் திறப்பு

- சிதம்பரத்தில் மறைந்த தலைவர் அய்யா எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம்

- சென்னை நந்தனத்தில் 50 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் நவீன எம் சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி

- அச்சிறுப்பாக்கத்தில் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் கிடந்த மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் தற்பொழுது பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

- பரமக்குடியில் மாவீரன் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு.

- சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னை குயிலி க்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

- ஆதித்தமிழ் குடிகளின் வசிப்பிடத்தை இழிவுபடுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்க அரசாணை.

- காஞ்சியில் பன்னாட்டு பௌத்த பண்பாட்டு மையமும், மதுரையில் சமணப் பண்பாட்டு மையமும் நிறுவிடவும் அரசு அறிவிப்பு

- இசுலாமியர்களின் மெக்கா பயணம் , கிறித்துவர்களின் ஜெருசலேம் பயணம் போல அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் மேற்கொள்ளப்படும் நாக்பூர்-தீட்சபூமி பயணமும் புனிதப்பயணமாக ஏற்கப்பட்டு அப்பயணம் மேற்கொள்வோருக்கு அரசு மானியம் வழங்கிட அரசாணை.

இவற்றை பதிவிடுவது கடந்த பாதையை நினைவூட்டவும் இழுத்து வந்த தேரை முன்நோக்கி நகர்த்த வேண்டிய வரலாற்றுக்கடமையை பணிவுடன் சொல்லவுமே.

வாழ்த்துக்களுடன்
சிந்தனை செல்வன்.

20/05/2026

மே 20 — திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளில், அவரது சமூக மற்றும் பண்பாட்டு விழுமியங்களை நினைவுகூர்வோம்.

திராவிட கருத்தியலின் முன்னோடியான அவரது சிந்தனைகள் இன்றும் சமூக நீதிக்கான வழிகாட்டியாக திகழ்கின்றன.

கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, அவரது நினைவாக சென்னை கிண்டியில் மணிமண்டபம் நிறுவியது திமுக தலைமையிலான அரசு.

இந்நாளில், பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் வரலாறும் சிந்தனைகளும் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய நாம் உறுதிபூண்டிடுவோம்.

#அயோத்திதாசர்

11/05/2026

இன்று சட்டப்பேரவையில் முதல்நாளாக கம்பீரமாக நுழையும் இரண்டு சிறுத்தைகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இன்று சட்டப்பேரவையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டு முறைப்படி விசிகவின் சட்டமன்ற கட்சித்தலைவராக பொறுப்பேற்கவுள்ள என் அன்பு சகோதரர் வன்னியரசு அவர்கட்கும் , அண்ணன் ஜோதிமணி அவர்கட்கும் மீண்டும் வாழ்த்துச்சொல்லி மகிழ்கிறேன்.

எதிர் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் எளிய மக்களின் குரலாய், ஆட்சியாளர்கட்கு திசைவழி காட்டும் கலங்கரை விளக்காய் , எழுச்சித்தமிழரின் மனசாட்சியாய் உங்கள் இருவரின் சட்டமன்ற பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

08/05/2026

தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம்.
எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை.
உளிகளை கொண்டு செதுக்க
அவர் வெறும் கல் அல்ல.
எழுந்து நிற்கும் இமய மலை.

நாளைய பொழுது
நமக்காய் விடியும்.

08/05/2026

தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி. தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் திரு விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா என கேள்வி எழுகிறது.

ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக தவெக செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா ? இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும் , கவர்னர் வழியாக பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா? வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது?

வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர்தீட்டாமல் , அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பெருந்தன்மையாக கருத்துக்களை திரு விஜய் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் வெற்றிச்செய்தி வந்த மறுக்கணமே மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள் என ஆணவத்தையும், பழி வாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரிதானா? மோதிலால் நேரு , ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி என அய்ந்தாவது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரசுடன் கை கோர்த்துக்கொண்டு வாரிசு அரசியலைப் பேசுவதை விட நகைமுரண் வேறேதும் இருக்கமுடியுமா ? திமுகவை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகளையும் விசிகவையும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.?

திரு விஜய் அவர்கட்குள்ள கரிஷ்மா அடையாளத்தை , நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசாக்கி முடக்கி வைத்து விட்டு அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக்கொள்ள திரு விஜய்யை பயன்படுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே திமுக அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சமல்லவா ?
விசிக கட்சியில் தலைவர் திருமாவுடன் இருபது பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான். சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறாரகள் என பேசுவது என்னவகை அரசியல் அறம் ?

அரசியல் புரிதலாலும் தனது அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய திரு விஜய் தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்துவைக்கும் ரிசார்ட் அரசியலை கொண்டு வந்திருப்பது ரசிக்கத்தகுந்ததல்ல.

திரு விஜய் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையும் தவறான வழிகாட்டலும் தான் தனக்கு ஆதரவு வந்து சேர்வதற்கான வழியை அடைத்து வைத்திருக்கிறது என்பதை உடனே உணரவேண்டும்.

சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் மீறி கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயன்று வரும் இந்த சூழலின் ஆபத்தை உணருவதும் அதை தடுத்து தமிழ்நாட்டை காப்பதுதான் மக்கள் முன்னால் உள்ள சவால்.

07/05/2026

மாற்றம் என்பது வேறு.
புரட்சி என்பது வேறு.

கட்சியை மாற்றுவது மாற்றம்
கட்டமைப்பையே புரட்டுவது புரட்சி

அதிமுகவிற்கு பதில் திமுக, திமுகவிற்கு மாறாக தவெக என்பது மாற்றம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அதிகாரமையத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்களை ஆதிகாரத்தில் அமர்த்துவதுதான் புரட்சி.

புரட்சியை செய்யட்டும் தமிழ்நாடு.

07/05/2026

நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கி உள்ளன.
திராவிடகட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் இது என்கிறார்கள் சிலர்.

விஜய் மீதுள்ள ரசிக மனோபாவத்தில் எழுந்த ஒரு ஜென்சி அலை இது. அர்த்தமுள்ள அரசியல் பிரளயம் அல்ல. பொங்கி வழிந்து உடனே வடிந்து நீர்த்துவிடும் மாய சுனாமி இது என்கிறார்கள் சிலர்.

இது மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே நடந்த தேர்தல் அல்ல. மனிதனுக்கும் வாக்குச்சாவடி எந்திரத்திற்கும் இடையே நடந்த யுத்தம் இது. நேர்மையான தேர்தலை நடத்தவா ஞானேஷ்குமாரை பாஜக குறுக்கு வழியில் சட்டங்களை வளைத்து தலைமைத்தேர்தல் அதிகாரியாக கொண்டு வந்தது? பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்கருத்தை பொதுக்கருத்தாக திணித்து அதற்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அரங்கேற்றப்படும் நுட்பமான மோசடி இது என உறுதிபட சொல்பவர்களின் கருத்தும் புறக்கணிக்க முடியாததுதான். குளத்தூரில் அண்ணன் ஸ்டாலினின் தோல்வி எந்திர மோசடியே தவிர அது வாக்காளர்களின் உணர்வு அல்ல என்பதை அண்மை நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

இத்தகு சூழலில்தான் குடித்து விட்டு தெருவில் ஆடும் சில தவெக எம் எல் ஏக்களின் ஆட்டம் , திரு. விஜயின் உடனிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களின் பின்னணி இவற்றை கண்டு அதிர்ந்து போன பலரும் அதிமுகவை குறைந்தபட்ச செயல் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திமுக ஆதரிக்க முன்வரவேண்டுமென பேசுவதையும் காண முடிகிறது.

என்னிடமும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் இது குறித்து பேசினார்கள்.

ரசிக மனோநிலையும் பாசிசத்தின் சதியும் சேர்ந்து உருவாக்கிய ஆபத்திலிருந்து நாட்டை காக்க இப்படி நடந்தால் என்ன என கேள்வி எழுப்பினார்கள்.

இந்த சூழலில் தலைவர் திருமாவை முதல்வராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்துவதுதான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்குமென தோன்றுகிறது.

மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால் தன் வாழ்வை மக்களுக்காக அர்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும்.

சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற இப்படி ஒரு முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.

இது தமிழகத்தின் மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் துடைத்தெரிந்து விடும். இருபெரும் எதிர் துருவ திராவிடக்கட்சிகளின் இடையே இது மட்டும்தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும்.

பின்குறிப்பு: சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அன்பர்கள் கவனத்திற்கு. இது என் தனிப்பட்ட கருத்தல்ல. கோடிக்கணக்கான மக்களை நம்பிக்கையூட்டும் கருத்து.
ஆனால் சத்தியமாக எழுச்சித்தமிழருடன் இது குறித்து நான் கலந்து பேசவில்லை. முதல் முறையாக கட்சித்தோழர்கள் யாருடனும் கலந்து பேசாமல் மக்களின் தாகத்தை நான் பதிவுசெய்துள்ளேன்.

அன்புடன்

சிந்தனை செல்வன்

Photos from Sinthanai Selvan's post 04/05/2026

விடுதலைச்சிறுத்தைகளின் குரலாய் இனி பேரவையில் முழங்கவிருக்கும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தோழர் வன்னியரசு அவர்கட்கும் , காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோதிமணி அண்ணன் அவர்கட்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

04/05/2026

நமது தலைவர் எழுச்சித்தமிழரை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

04/05/2026

தலைவருக்கு வெற்றியை
காணிக்கையாக்குவோம்.

தவறுதலை வெற்றிக்கான
பாடமாக்குவோம்.

வாழ்த்துகளுடன் …

- சிந்தனை செல்வன்

Photos from Sinthanai Selvan's post 03/05/2026

செய்யூர் சட்டமன்ற தொகுதி
வாக்கு என்னும் முகவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினேன்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai