Yaakkai

Yaakkai

Share

Interest to share our experience in this page... Yaakkai Charitable Trust, established in the year of 2017.

Intensity doing Research, Documenting, Create Awareness and Conservation of heritage sites in south India. We have a volunteers team of retired Archeological officers, Epigraphists, Language research fellows and interested students, youngsters to do effectively. It registered with Tamilnadu state government, (48/2020:IV/26) for strengthen heritage. This Yaakkai Charitable Trust hereafter referred as Yaakkai.

Photos from Yaakkai's post 18/05/2026

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறம் கிளையின் சார்பில் வழங்கப்பெறும் சிறந்த தொல்லியல் ஆய்வு நூலுக்கான "சே. அருண்குமார் நினைவுத் தொல்லியல் விருது - 2025" நீலமலைத் தொல்லியல் நூலுக்கு வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை (16-05-26) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், நூலாசிரியர்கள் திருமிகு குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன் ஆகிய இருவரும் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இவ்விருது பாராட்டுச் சான்றிதழ் உடன் ரூபாய் பத்தாயிரம் பணம் பரிசு கொண்டதாகும்.

இவ்விருதினை வழங்கிய த. மு. எ. க. ச அறம் கிளையின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உடன் பயணிக்கும் யாக்கை நண்பர்கள் அனைவருக்கும் இவ்விருது சமர்ப்பணம்.

Photos from Yaakkai's post 15/05/2026

தொல்லியல் அறிஞர் முனைவர் அர. பூங்குன்றன் அவர்களுடன், யாக்கை தொல்லியல் நூலகத்தில் கல்வி உள்ளகப் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் உரையாடும் நிகழ்வு நடைபெற்றது.

"பண்டைய நூலகங்கள்" எனும் தலைப்பில் மாணவர்களுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

வெவ்வேறு கல்வி நிலையங்களில் இருந்து வந்திருக்கும் மாணவர்கள் தொல்லியல் மீதான தங்களது ஐயங்களை அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

இந்நிகழ்வை நமது யாக்கை அறக்கட்டளை ஒருங்கிணைத்தது.

Photos from Yaakkai's post 11/05/2026

யாக்கை தொல்லியல் நூலகத்தில் கல்வி உள்ளகப் பயிற்சி

கோவை PSGR மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை, சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறை (WCC) , சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறை (MCC), இராணி மேரி கல்லூரியின் வரலாற்றுத் துறை ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த இளங்கலை, முதுகலைப் பிரிவின் இருபால் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சியை நமது யாக்கை அறக்கட்டளை ஒருங்கிணைத்து வருகின்றது. இது, நிகழ்நிலைப் பயிற்சி , நேரடிப் பயிற்சி நிலைகளில் வழங்கப்படுகிறது.




Photos from Yaakkai's post 30/04/2026

நீலகிரியில் மற்றுமொரு முன் வரலாற்றுக்கால பாறை ஓவிய ஓய்விடம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ளது வெள்ளரிக்கோம்பை கிராமம். இவ்வூர் தொன்மையான ஆலுகுறுமர், இருளர் பழங்குடி மக்கள் வாழும் மலைக்கிராமம் ஆகும். இவ்வூரை சுற்றியுள்ள எழுத்துப்பாறை, தொளிக்கிப் பாறை ஆகிய இடங்களில் பதிவான ஓவியங்கள் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றவையாகும். கடந்த மார்ச் மாதத்தில், யாக்கை அறக்கட்டளை குழுவினர் இங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது, இவ்வூரின் வடமேற்கு திசையில் உள்ள “ஊர் பரெ(ஊர் பாறை)” எனுமிடத்தில் பாறை ஓவியத்தொகுப்பு ஆவணப்படுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பழங்குடி மாவட்டம் என்று அழைக்கத் தகுதிவாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஆறு அழிநிலைப் பழங்குடிக் குழுக்கள் வாழ்கின்றனர். இதில் குறுமர் எனும் பழங்குடி மக்கள் குன்னூர், கோத்தகிரி வட்டாரத்தில் வனங்களுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் தீவிர சடங்குகளில் ஈடுபடுகின்றனர். வாழ்வின் பல்வேறு படிநிலைகளையும் சடங்குகளால் கடத்தும் வல்லமையைக் கொண்டுள்ளனர். செவ்வியல் இலக்கியங்களில் சொல்லப்படும் மலை உச்சிகளில் தெய்வங்கள் உறையும் எனும் தொல்நம்பிக்கை இவர்களின் வழிபாட்டு நம்பிக்கையில் எஞ்சியிருப்பது காணமுடிகிறது. இங்கு வாழும் குறுமர் பழங்குடி இன மக்கள் மரபார்ந்த தொழில்நுட்ப அறிவு, சூழலியல் அறிவு மிக்கவர்களாக விளங்குகின்றனர். இதுகுறித்து விரிவாக “நீலமலைத் தொல்லியல்” நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பகுதியில் மேலும் புதிதாக ஒரு பாறை ஓய்விடம் வெளிவந்திருப்பது இப்பகுதியின் தொல்லியல் வரலாற்றை மேலும் செம்மைப்படுத்தும் சான்றாக அமைகிறது.

ஊர் பரெ என்று பழங்குடி மக்கள் அழைக்கும் இவ்விடம் கடப்பதற்கு சவாலான இடமாகும். மலையின் பாறைச் சரிவில் சுமார் 450 மீட்டர் தூரம் ஏறிச்சென்று காணக்கூடிய அமைப்பில் உள்ளது. இந்த மலையின் உச்சியில் பல இடங்களில் ஊற்றுகள் உள்ளன. மழைக்காலங்களில் பெரிய அருவியைப்போல இம்மலைப் பரப்பு முழுவதும் நீர்க்கொட்டுவதால் இந்த இடத்திற்குச் செல்வது சாத்தியமில்லை. கோடைக் காலங்களில் மட்டுமே இங்கு செல்ல முடியும். அதுவும் பழங்குடி மக்கள் தேனெடுக்கப் பயன்படுத்தும் கொடியேணியைப் பயன்படுத்தியே இங்கு செல்லமுடியும். இவ்விடம் பழங்குடி மக்கள் தேனெடுக்கும் சடங்கில் ஈடுபடும்போது நாட்களில் ஓய்வெடுக்கும் இடமாகவும் விளங்குகிறது.

ஊர் பரெ பாறை ஓய்விடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீ உயத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பு 1030 செ.மீ. நீளமும் 1100 செ.மீ. உயரமும் கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 638 செ.மீ நீளமும் 540 செ.மீ. உயரமும் கொண்ட பரப்பில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றில் முப்பது ஓவியங்கள் அடையாளம் காணக்கூடிய வகையிலுள்ளது. சில இடங்களில் தெளிவற்ற உருவங்களும் பதிவாகியுள்ளன. இவை, முழுவதும் செஞ்சாந்து நிறத்தில் வரையப்பட்ட ஒற்றை நிறத்தன்மை உடைய ஓவியமாகும். இந்த ஓவியத் தொகுப்பை அதன் வரைகலை தன்மையில், நுண் கோடுகளால் வரையப்பெற்றவை, தடித்தக் கோடுகளால் வரையப்பெற்றவை, வடிவியல் குறியீடுகளை இணைத்து உருவம் கொண்டுவரும் பாங்கில் வரையப்பெற்றவை என வகைப்படுத்தலாம்.

நீலகிரி மலையில் இதுகாறும் கிடைத்த ஓவியங்களில் ஊர் பரெ பாறைக் கலைப்படைப்புகள் கருப்பொருள் தன்மையில் தனித்துவம் பெறுகின்றன. இங்கு பதிவான ஓவியங்கள் கருப்பொருள் தன்மையில், கூம்பு வடிவ தலைப்பாகை கொண்ட மிகை மாந்த உருவங்கள், மிகைசக்தியாகக் காட்டப்பெற்ற மாந்த உருவங்கள், நீண்ட கால்களை உடைய மாந்த உருவங்கள், ஏணி போன்ற உடலமைப்பு கொண்ட மாந்த உருவங்கள், செவ்வக வடிவ கட்டத்தில் புள்ளிகள் இட்டு நிரப்பப்பட்ட சடங்குக் குறியீடுகள் என பன்மைக் கருப்பொருளுடன் பதிவாகியுள்ளன. ஊர் பரெ ஓவியங்களின் கருப்பொருள் பழங்குடி மக்களின் மீயியல் உருவங்களின் மீதான நம்பிக்கை, மீயியல் சடங்கு வழக்கங்களைக் காட்டும் ஆவணங்கள் தொடர்பானவை என்பதை அறிய முடிகின்றது. ஊர் பரெ ஓய்விடத்திற்கு அருகிலுள்ள எழுத்துப் பாறை, தொளிக்கிப் பாறை ஆகிய ஓய்விடங்களில் பதிவான ஓவியங்கள் மீயியல் தன்மையில் இருப்பினும், மூன்று இடங்களும் ஒன்றுக்கொன்று உருவ வடிவம், வெளிப்படுத்தும் மீயியல் நம்பிக்கைகளில் மாறுபட்ட பண்புகளை வெளிப்படுத்துகின்றன. மிகை மாந்த உருவம் ஒன்று சுமார் 40 செ.மீ. உயரம் அளவில் பெரியதாகவும், சடங்குப் புள்ளிகள் 3 மி.மீ. அளவில் சிறியதாகவும் காணமுடிகின்றது. நீலகிரி மலையில் வெள்ளரிக்கோம்பை சுற்றுவட்டப் பகுதியில் மட்டும் இத்தகு தன்மையிலான ஓவியங்கள் கிடைத்திருப்பது மானுடவியல் பார்வையில் இங்கு வாழும் மக்களின் தொடர்புறவுகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது.

ஊர் பரெ ஓய்விடத்தில் வெவ்வேறு காலவெளியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியத்தொகுப்பில் பல்வேறு அடுக்குகளில் மீளவும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதைக் கொண்டு இதனை அறியலாம். எழுத்துப்பாறை ஓய்விட ஓவியங்கள் அதிகபட்சமாக நான்கு வெவ்வேறு பண்பாட்டுக் காலவெளியில் வரையப்பெற்றவை என யாக்கை வெளியிட்ட “நீலமலைத் தொல்லியல்” நூலில் தொழில்நுட்ப உதவியுடன் நிறுவி உள்ளனர். இங்கும் அதுபோன்று கால அடுக்குகளைப் பகுப்பாய்வு செய்யும்போது எவ்வளவு பண்பாட்டுக் கால இடைவெளி என்பதை அறிய முடியும்.

ஊர் பரெ ஓய்விடம் மழை நீர்க் கசிவினால் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. ஓவியங்கள் வரையப்பெற்ற பாறையின் மேற்பரப்பில் தொடர்ந்து நீர் வழிந்து பாசிகள் வளரத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் பூச்சிகள் மண்கூடு கட்டியுள்ளன. சூழல் மாசுக்கள் ஓவியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் படிந்துள்ளன. தொல் மாந்தர்களின் இருப்பைப் பதிவு செய்யும் இவ்வகை ஓவியங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததிகளுக்கு தர வேண்டிய கடமை நம் சமூகத்திற்கு உண்டு. தொன்மையான மக்கள் சமூகத்தின் ஆவணமாக விளங்கும் ஓவியங்களைப் பாதுகாக்க தேவையான செயல்திட்டங்கள் கொண்டுவர வேண்டும். கடினமான இவ்விடங்களுக்கு செல்வது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆகவே, நீலகிரியின் தொல்லியலை ஆய்வுசெய்ய விரும்பும் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு தேவையான படங்கள், தரவுகளை வழங்க யாக்கை அறக்கட்டளை தயாராக உள்ளது.

நன்றி: ஊர் பரெ பாறை ஓவியங்கள் குறித்த செய்தியை வெளியிட்ட New Indian Express, The Hindu, Deccan chronicle, தினகரன், தினமணி நாளிதழ் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நம் நன்றி.

Photos from Yaakkai's post 11/04/2026

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் நீலமலைத் தொல்லியல் நூல் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்த் துறையின் தலைவர் பேரா. கோ. பழனி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். அவரது வரவேற்புரை நூல் குறித்த மதிப்பீடு வழங்கும் உரையாகவே அமைந்தது. சிறப்பு விருந்தினர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் மார்க்சிய காந்தி அவர்கள் நூலின் ஒவ்வொரு இயலையும் நுணுக்கமாக வாசித்து மிக விரிவான மதிப்பீடுகள் வழங்கி உரையாற்றினார். முனைவர் க. த. காந்திராஜன் அவர்கள், பாறை ஓவியங்கள் துறையின் நீண்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு நீலமலையின் தொல்லியலை ஆவணப்படுத்தியிருப்பதன் தேவையைக் குறிப்பிட்டு பேசினார். நூலாசிரியர்கள் குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி கு. ஐஸ்வர்யா நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைந்து தொகுத்து வழங்கினார். முதுகலை முதலாமாண்டு மாணவர் கி. ராம்கார்த்திக் நன்றியுரை வழங்கினார்.

நீலமலைத் தொல்லியல் நூல் அறிமுகக் கூட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் நிகழ்த்த என்று விரும்பி அதற்கான செயல்திட்டத்தை முன்னெடுத்த நண்பர்கள் ச. ந. விக்னேஷ், முனைவர் குணசேகரன் ஆகியோருக்கு நம் அன்பும் நன்றியும். இந்நிகழ்விற்கு பல்வேறு வகைமைகளில் உதவிய நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நம் நன்றிகள்.

Photos from Yaakkai's post 02/04/2026

விழிப்புணர்வு

நம் யாக்கை குழு மரபுச் சின்னங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதையும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கள ஆய்வுப் பயணம், விழிப்புணர்வு, பயிற்சி பட்டறைகள் ஒருங்கிணைத்து வருவதையும் நண்பர்கள் பலரும் அறிவீர்கள். அதுபோலவே, ஒவ்வொரு மரபு இடங்களுக்கு செல்லும்போதும் அங்குள்ள பொதுமக்கள், இளைஞர்கள் இடையே உரையாடல் நிகழ்த்துவது, மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பைக் கொண்டு வருவதையும் யாக்கை தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் அவ்வாறான பணிகளில் யாக்கை ஈடுபட்டுள்ளது. சில நிகழ்வுகள் நன்கு திட்டமிட்டு பல நண்பர்களின் கூட்டு முயற்சியால் நடந்தேறி உள்ளது. பல இடங்களில் எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் எதேச்சையாகவே விழிப்புணர்வும் பயிற்சிப் பட்டறைகளும் நடைபெற்று விடுவதுண்டு.

அண்மையில் நம் யாக்கை குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டிருந்த பொழுதில் அவ்வழியாக வந்த பள்ளி மாணவர்கள் நம் குழுவினருடன் உரையாடல் நிகழ்த்த, அது பின்னர் ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்வாகவே அமைந்தது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆவணப்படுத்தும் வழிமுறைகளைக் கேட்டு, கற்று, பயிற்சியும் பெற்றனர். மரபுச் சின்னங்கள் அறிமுகம், அவற்றை ஆவணப்படுத்தும் வழிமுறைகள், டிஜிட்டல் ஆவணமாக்கல் பயிற்சி, அளவீடுகள் பயிற்சி, புவியிடக் குறியீடுகளை அறிதல், மரபு இடங்களைப் பாதுகாத்தல் என அரைநாள் பொழுதை செலவிட்டு எங்களுடன் பயணித்தனர். யாக்கை குழுவினருக்கும் நிறைவான நாளாக அது அமைந்தது. அனைவருக்கும் நம் நன்றி!.

#யாக்கை
#மரபுச்சின்னங்கள்
#யாக்கை_அறக்கட்டளை


Photos from Yaakkai's post 30/03/2026

நீலமலைத் தொல்லியல் || திறனாய்வுக் கூட்டம் || சென்னை.

தமிழ்நாட்டுத் தொல்லியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் அடையாளமாக, வரலாற்று அத்தியாயமாக விளங்கும் மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள் திருமிகு இராஜகோபால் சுப்பையா, திருமிகு பத்மாவதி அம்மா ஆகியோரின் அறிவுப்பூர்வமான மதிப்புரையோடு சமகால தொல்லியல் களத்தில் வேட்கையோடு இயங்கும் இளந்தலைமுறையை சேர்ந்த ஆய்வாளர்கள் திருமிகு தமிழரசு, திருமிகு வெள்ளையப்பன், திருமிகு தினேஷ்குமார் ஆகியோரின் விமர்சன உரையோடு நீலமலைத் தொல்லியல் நூல் மீதான திறனாய்வுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

சென்னையில் செயல்பட்டுவரும் கலப்பை பதிப்பகம் ஒருங்கிணைந்த இந்நிகழ்வில் கலப்பை பதிப்பகத்தின் திருமிகு இராமசாமி அவர்கள் வரவேற்புரையும் திருமிகு அனுசுயா இராமசாமி அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள். முனைவர் நி. கனகராசு அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

சென்னை சுற்றுவட்டப் பகுதியிலிருந்து நண்பர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை சுருதி டிவி நன்முறையில் ஒளிப்பதிவு செய்து தமது வலையொளி(YouTube) பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது. சுருதி டிவி நிர்வாகத்தினருக்கு நம் நன்றிகள். அறிஞர் பெருமக்கள் ஆற்றிய உரைகளின் வீடியோ இணைப்பு மறு மொழியில் தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஒருங்கிணைக்க உதவிய நண்பர்கள் எல்லோருக்கும் நம் நன்றிகள்.

நூல் வேண்டுவோர் சென்னையில் உள்ள கலப்பை பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Photos from Yaakkai's post 22/03/2026

தொல்லியல் சான்றிதழ் படிப்பு - கள ஆய்வுப் பயணம்

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களுக்கு “தொல்லியல் சான்றிதழ் படிப்பு” எனும் மதிப்புறு பாடத்திட்டத்தை தமிழ்த் துறையுடன் இணைந்து நமது யாக்கை மரபு அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது. நடப்பு கல்வி ஆண்டிற்கான தொல்லியல் சான்றிதழ் படிப்பை ஐம்பது மாணவர்கள் தொடர்கின்றனர். அவர்தம் கல்வி பயணத்தின் அங்கமாக, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் தொல்லியல் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் குரக்குத்தளி ஆளுடைய நாயனார் எனும் இடை வரலாற்றுக்கால கோயிலில், கோயில் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்பெறும் சமூகம், சமயம், நுண் கலைகள், கோயிற்கலை மரபு ஆகியவற்றை அறிய செய்யும் உரையாடல் நடைபெற்றது. கடத்தூர் கொங்கவிடங்கீஸ்வரர் கோயிலில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆவணப்படுத்தும் வழிமுறைகளைக் கற்றறிந்தனர். ஐவர்மலை சமணப் பள்ளியில் அவைதீக சமயங்களின் வரலாற்றுக் கால பங்களிப்புகள், வட்டெழுத்துக் கல்வெட்டுகளின் பரவல், பெருவழிப் பாதைகளின் பங்களிப்பு என உரையாடல் நீண்டது. மதகடிப்புதூர் பாறை ஓய்விடத்தில் பாறை ஓவியக் கலையின் அறிமுகமும் எதிர்கால ஆய்வுக் களங்கள், வாய்ப்புகள் குறித்தும் விரிவான உரையாடல் நிகழ்த்தப்பட்டது.

தொல்லியல் சான்றிதழ் வகுப்பை தொடங்கி தமிழியல் துறை மாணவர்களுடன் பயணிக்கும் இந்த நல்வாய்ப்பினை வழங்கிய பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியின் தலைவர் திருமிகு அடிகளார் அவர்கள், கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நம் நன்றிகள்.

குறிப்பு: தொல்லியல் சான்றிதழ் படிப்பு திட்டமானது தொல்லியல், கல்வெட்டியல் துறை பாடங்களைப் பல நுண் வகைப்பாட்டில் வைத்து, கோட்பாடு மற்றும் செய்முறை விளக்கம் இரண்டையும் இணைத்து கற்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.

Photos from Yaakkai's post 17/03/2026

Legacy of Giving

KANINI Software Solutions Pvt Ltd நிறுவனம் தமது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் வாயிலாக ஐந்து மடிக்கணினிகளை நமது யாக்கை தொல்லியல் நூலகத்திற்கு வழங்கியுள்ளது. யாக்கை நூலகத்தின் தகவல் பாதுகாப்பு திட்டத்திற்கும் கல்வி உள்ளகப் பயிற்சி பெறக்கூடிய மாணவர்களின் திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும் இந்த மடிக்கணினிகள் பயன்படுத்தப்பட உள்ளன. KANINI நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டிலும் ஐந்து மடிக்கணினிகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நமது யாக்கை குழுவின் கள செயல்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் KANINI Software Solutions Pvt Ltd நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நமது நன்றிகள்.

Photos from Yaakkai's post 10/03/2026

நீலமலைத் தொல்லியல் நூல் குறித்த விரிவான அறிமுகம் BBC News தமிழில் வெளிவந்துள்ளது.

நன்றி: திருமிகு சேவியர் செல்வக்குமார்

குறிப்பு: கட்டுரையின் இணைப்பு மறு மொழியில் தரப்பட்டுள்ளது.

Photos from Yaakkai's post 09/03/2026

நீலமலைத் தொல்லியல் நூல் திறனாய்வு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் சார்பில் “நீலமலைத் தொல்லியல்” நூல் திறனாய்வுக் கூட்டம் 06-03-26 அன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் திருமிகு யு. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரிவான மதிப்புரை வழங்கினார்கள். இந்நூலின் பதிப்பும் உள்ளடக்கமும் தமிழியல் உலகில் ஒரு முன்மாதிரியான செயல், இந்நூலில் காணப்பெறும் பாறை ஓவியங்களை தொன்மையான செவ்விலக்கியப் பார்வையில் புரிந்து கொள்ள முற்படுவது, மேற்கொண்டு மேலதிகமான ஆய்வுகள் வெளி வருவதற்கும் இந்நூல் களம் அமைத்து தந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள மான் உட்பட சில விலங்குகளின் உள்ளுறுப்பு ஓவியங்களை சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சூல் கொண்ட யானை, மான், மயில் போன்றவற்றை உவமையாகக் கொண்டிருக்கும் சொற்றொடரை நினைவுப்படுத்தி, அதனடிப்படையில் தொல் மனவோட்டத்தின் பதிவாகவே பண்டைய ஓவியங்களைக் கருத வேண்டுமென மாணவர்களிடம் உரையாற்றினார். இந்நூலில் இடம்பெற்றுள்ள தொல்சடங்குகளின் வெளிப்பாடு சமவெளிப் பகுதி மக்களின் அன்றாட வழக்காறுகளில் வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்வதை குறிப்பிட்டு, அதையெல்லாம் கவனத்தில் கொண்டு இந்நூலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் அமைந்த இவ்வுரையின் இறுதியாக இதுவொரு ஆவணக் களஞ்சியம், ஆய்வு மாணவர்கள் அனைவரும் அவசியம் ஒருமுறையாவது இந்நூலை வாசித்து அறிய வேண்டும் என்றார்கள்.

சேவியர் கல்லூரியின் தொல்லியல்துறை தலைவர், பேராசிரியர் திருமிகு இரமேஷ் பெரியசாமி அவர்கள் இந்நூலில் தொல்லியல் சின்னங்கள் பல நுண் வகைமைகளில் ஆவணப்படுத்தியதைக் குறிப்பிட்டு தமது மதிப்புரையை வழங்கினார்கள். பல்கலைக்கழக தொல்லியல் துறையின் பேரா. K.மதிவாணன் அவர்கள் யாக்கை குழுவின் தொடர் செயல்பாடுகளை குறிப்பிட்டு அம்முயற்சியில் வெளிவந்திருக்கும் நீலமலைத் தொல்லியல் நூல் தொல்லியல் சின்னங்களை அறிவியல் தன்மையோடு அணுகியிருப்பதை விவரித்து தமது மதிப்புரையை வழங்கினார்கள். தொல்லியல் துறையின் தலைவர் பேரா. S. சுதாகர் அவர்கள் நீலமலைத் தொல்லியல் நூலில் இடம்பெற்றுள்ள தரவுகள், படங்கள் அவற்றின் பின்னுள்ள வரலாற்று முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு தமது வாழ்த்துரையை வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் மையமாக தொல்லியல் துறை மாணவர்கள் திருமிகு N.பாலா திருமிகு H. வாகினி ஆகியோர் வழங்கிய திறனாய்வு உரை அமைந்தது. இருவரும் இந்நூலை முழுமையாக வாசித்து விரிவான திறானாய்வை வழங்கினர். மேலும் தங்களுக்கு எங்கெல்லாம் புரிதல் சிக்கல், மாற்றுக் கருத்துகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் கேள்வி எழுப்பி, பதிலைப்பெற்று நிறைவான உரையாடல் நிகழ்வாக மாற்றினர்.

தொல்லியல் துறையின் பேரா. P. முருகன் அவர்கள் அறிமுக உரையையும் பேரா.R. சந்தியா அவர்கள் நன்றி உரையையும் வழங்கினார்கள். தொல்லியல் பயிலும் மாணவர்களிடையே நீலமலைத் தொல்லியல் நூலைக் கொண்டுசேர்க்கும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றிகள்.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Near SPK Enterprises, FCI Road, Opp. Rajagopal Transport, Varatharajulu Nagar, Ganapathy
Coimbatore
641006