03/04/2026
AIYF Coimbatore
அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் வேலை!
03/04/2026
24/03/2026
மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அவர்களின் 95வது நினைவு தினத்தை முன்னிட்டும், மறைந்த AIYF மாவட்டத் தலைவர் வே.கௌதம்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
#பகத்சிங் #கோவை
24/02/2026
முத்தண்ணன்குளக் கரையில் டர்ப் விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு கொடுக்கும் முடிவைத் திரும்பப் பெறக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் நேற்று 23.02.2026 கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்திருந்தோம். இதன் செய்தி தினந்த்தந்தி, தினகரன், தினமணி ஆகிய நாளேடுகளில் வெளியாகி இருக்கிறது.
#கோவை #விளையாட்டு
டர்ப் விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு கொடுக்கும் முடிவைத் திரும்பப் பெறாவிட்டால் கட்டணம் செலுத்தாமல் விளையாடும் போராட்டத்தை நடத்துவோம்!
கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் AIYF மனு!
கோவை மாவட்டம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட முத்தண்ணன் குளக் கரையில் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் டர்ப் விளையாட்டு மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதை நிர்வகிப்பதற்கு தனியாரிடம் ஒப்படைப்பதென கடந்த 11.02.2026 அன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற குழுத் தலைவர் தோழர் சாந்தி சந்திரன் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்.
கோவை மாவட்டம் வேகமாக நகரமயமாகி வருகிறது. தொழில், கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மையமாக திகழ்கிறது. வெளி மாவட்டத்தினர், வெளி மாநிலத்தவர்கள் கோவையில் குடிபெயர்வது அதிகமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை பெருகுவதால் விளையாட்டு மைதானங்கள் குறைந்து வருகிறது. மேலும், ஏற்கனவே இருக்கும் மைதானங்களும் சுருக்கப்பட்டு வருகின்றன.
கோவையின் பிரதான மைதானங்களான சாஸ்திரி மைதானம், வ.உசி. மைதானம் போன்றவைகள் பொருட்காட்சி, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் இளைஞர்கள், மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் தனியார் டர்ப் மைதானங்கள் பெருகி வருகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000க்கு மேல் பணம் கொடுத்துதான் விளையாட முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.
இந்நிலையில், முத்தண்ணன்குளக் கரையில் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள டர்ப் விளையாட்டு மைதானத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு, இளைஞர்களின் விளையாடும் வாய்ப்பை, ஆர்வத்தை பெருமளவில் குறைத்துவிடும். இம்முடிவு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
போதைப்பொருள், செல்போன் போன்றவற்றிற்கு அடிமையாகி, சீரழிந்து வரும் இளைஞர் சமுதாயத்தை மீட்பதற்கு "விளையாட்டு" மிகச்சிறந்த ஆயுதமாகும். விளையாட்டு வணிகப்பொருள் அல்ல; இது அனைவரின் உரிமை.
எனவே,
1. முத்தண்ணன் குளக்கரையில் டர்ப் மைதானத்தை தனியாருக்கு கொடுக்கும் கோவை மாநகராட்சியின் முடிவை திரும்பப் பெற வேண்டும். மாநகராட்சியே நிர்வகிக்க வேண்டும்.
2. மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் கட்டணமில்லா மைதானங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமாய் மாவட்ட ஆட்சியரிடத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் மனு அளித்தோம்.
மேலும், மாநகராட்சி நிர்வாகம் இம்முடிவை திரும்பப்பெறாவிட்டால், "டர்ப் மைதானத்தில் கட்டணம் செலுத்தாமல் விளையாடும் போராட்டத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ( ) அவசியம் நடத்தும்" என்பதையும் தெரிவித்தோம்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
All India Youth Federation
கோவை மாவட்டக்குழு
#கோவை #விளையாட்டு
10/10/2025
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோவையில் இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
வணக்கம். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கொடூரமான முறையில் ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆயுத வியாபாரிகளின் லாபமும், அமெரிக்க அரசின் மேலாதிக்கமும் இப்போரின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை போர்க்குற்றவாளி என அறிவித்த பின்னரும், அமெரிக்க டிரம்ப் அரசு சகல உதவிகளையும் செய்து, தான் ஒரு "உலக ரவுடி" என்பதை நிரூபித்து வருகிறது.
சுமார் 2 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் இன அழிப்புப் போரில் சுமார் 18000 குழந்தைகள் உட்பட 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலின் குண்டுகள் பாதுகாப்பான பகுதிகள், மருத்துவமனைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. காசா என்ற அழகிய நகரமே தற்போது சுடுகாடாக மாற்றப்பட்டிருக்கிறது.
காசா மக்களுக்கு உணவும், முதலுதவியும் கொடுக்கச் சென்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பட்டினிச் சாவுகள் அனுதினமும் அரங்கேறி வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகள் இஸ்ரேல் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன; பாலஸ்தீனத்திற்கு உதவிகளையும் செய்து வருகின்றன.
இந்தியாவில் இதற்கு நேர்மாறாக, இஸ்ரேல் அரசுடன் சுமார் 7000 கோடி மதிப்பில் பாஜக அரசு வணிக ஒப்பந்தம் செய்துள்ளது. இன அழிப்புப் போருக்கு ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்யும் மனிதத் தன்மையற்ற செயலிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
இதற்கு எதிராக, இனவெறி இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும், பாலஸ்தீன் ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து உடனே வெளியேற வேண்டும், இந்திய அரசு ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு அடிபணிந்து, இனவெறி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பில் அக். 5 முதல் 11 வரை நாடு தழுவிய முறையில் பிரச்சார இயக்கங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் இன்று (10.10.2025) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவர் எம்.மணிகண்டன், மாணவர் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினர் பா.துர்கா ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணைச் செயலாளர் கலை.அஸ்வினி துவக்கவுரையாற்றினார். இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மௌ.குணசேகர், நிர்வாகி வே.வசந்தகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இளைஞர் பெருமன்ற மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் ராஜ்கமல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினர் அ.மன்சூர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் மூ.மணிகண்டன், என்.கணேசமூர்த்தி, ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இச்செய்தியினை தங்களது ஊடகத்தில் வெளியிட்டு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
29/09/2025
பகத்சிங் பிறந்தநாளில் 74 பேர் இரத்த தானம் செய்தனர்
கோவை : மாவீரன் பகத்சிங் 119வது பிறந்தநாள், மறைந்த இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் வே.கௌதம்குமார் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) கோவை மாவட்ட குழுவின் சார்பில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கும் முகாம் இன்று (28.09.2025) கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்றது.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளர்கள், பொருளாதார ரீதியாக பிந்தங்கியவர்கள் பெருமளவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நாளொன்றுக்கு சுமார் 18 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. மேலும், அவசர சிகிச்சைகளுக்கு அவ்வப்போது கூடுதல் யூனிட் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இரத்தக் கொடையாளர்களை தொடர்ந்து ஏற்பாடு செய்து கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (28.09.2025) கோவை ஜீவா இல்லத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மௌ.குணசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.மணிகண்டன் வரவேற்றுப் பேசினார். பாலதண்டாயுதம் இரத்த தான இயக்க செயலாளர் வே.வசந்தகுமார் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முகாமினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ஜேம்ஸ் துவக்கி வைத்தார். இளைஞர் பெருமன்ற தேசிய செயலாளர் ஹரீஷ் பாலா வாழ்த்துரை வழங்கினார். கரூரில் கூட்ட நெரிசலில் பலியான அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் மாமன்றக்குழுத் தலைவர் சாந்தி சந்திரன், இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் கலை.அஸ்வினி, மாமன்ற உறுப்பினர்கள் பிரபா ரவீந்திரன் (48வது வார்டு) ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் Ex.MLA, மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சி.தங்கவேல், மாவட்டப் பொருளாளர் மு.வ.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கொடையாளர்களை, மருத்துவக் குழுவினரை பாராட்டினர். மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.எம்.செல்வராஜ், பெ.மௌனசாமி, வி.ஆர்.பாண்டியன், ஜி.பி.சக்திவேல், ராமமூர்த்தி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயலாளர் அ.அசரப் அலி, இஸ்கப் மாநிலப் பொருளாளர் எஸ்.கோட்டியப்பன், மாதர் சம்மேளன மாவட்டச் செயலாளர் எம்.பேபி, சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மாவட்டச் செயலாளர் சையது இப்ராஹிம், AISF மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.துர்கா, விஷ்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமில் 3 பெண்கள் உட்பட 71 பேர் இரத்த தானம் செய்தனர். மேலும், நீலம்பூர் அருகே ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலத்தைச் சேர்ந்த தோழர் சேகர் அவர்களுக்கு 3 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. மொத்தம் 74 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் அ.மன்சூர் நன்றி கூறினார்.
முகாமில் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் மூ.மணிகண்டன், என்.கணேசமூர்த்தி, அ.ஹரிஹரசுதன், முகாம் பொறுப்பாளர் எம்.அபிமன், நிர்வாகக்குழுக் உறுப்பினர்கள் சு.பிரசாத், அ.விஜயகுமார், கே.ஜி.பவன்குமார், எஸ்.முத்துகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் எம்.ராஜ்கமல், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.விஜயகுமார், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் அ.ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#இரத்ததானம் #கோவை #இளைஞர்
27/09/2025
#இரத்ததானம்
25/09/2025
#இரத்ததானம்
04/09/2025
மகாராஜா கல்லூரி மாணவர்களுக்கு நீதி கேட்டுப் போராட்டம்
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள மஹாராஜாஸ் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் சுமார் 300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு Bsc. Cardiac, Diploma Nursing, BAMS, BNYS உள்ளிட்ட 8 பாடப் பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியானது ராஜஸ்தானில் உள்ள சன்ரைஸ் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் இணைக்கப்பட்டு (Affiliation) செயல்பட்டு வருவதாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்படுகிறது.
சன்ரைஸ் பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியக்குழுவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், இப்பல்கலைக்கழகமானது ராஜஸ்தான் மாநிலத்திற்கு வெளியில் எங்கும் கல்வி நிறுவனத்தை தொடங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் அனுமதியையோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையோ பெற்றிருப்பதாக எந்த ஆவணத்தையும் காட்டவில்லை.
இக்கல்லூரியில், கடந்த கல்வியாண்டில், எந்த பாடப்பிரிவிற்கும் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெறவில்லை. முதல் பருவத் தேர்வில், மூன்று பாடங்களுக்கு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 8 பாடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. கல்லூரியின் அடையாள அட்டையில் கல்லூரியின் பெயரே இல்லை: சன்ரைஸ் பல்கலைக்கழகத்தின் பெயர் மட்டுமே உள்ளது. மேலும், போதுமான வகுப்பறைகள், தகுதியான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகளோ இல்லை. மேலும், BAMS பாடப்பிரிவிற்கு நீட் கட்டாயம் என்ற விதியை மீறி நீட் தேர்வு எழுதாதவர்களை BAMS பாடப் பிரிவில் சேர்த்தியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இக்கல்லூரியில் நிலவும் பிரச்சினைக்கு, விசாரணை செய்து விரைவில் தீர்வு காணக்கோரி 24.07.2025 மற்றும் 04.08.2025 அன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். இதன் பேரில் இக்கல்லூரியில் 3 கட்டங்களாக விசாரணை நடைபெற்றுள்ளது. சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்திற்கு மேற்கண்ட விசாரணையின் அறிக்கை கடந்த 22.08.2025 அன்று அனுப்பபட்டுள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதையே நோக்கமாக கொண்ட கல்லூரி நிர்வாகம், மாணவர்களை தொடர்ந்து மிரட்டி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கல்லூரி விடுதியில் உணவு கூட சரிவர வழங்குவதில்லை. இங்கும் படிக்க முடியாமல், வேறு கல்லூரிக்கும் செல்ல முடியாமலும் செய்வதறியாது நிற்கின்றனர். எனவே, கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் இன்று (03.09.2025) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1. கிணத்துக்கடவு அருகே அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மகாராஜா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடுக!
2. பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்த்திடுக!
3. மாணவர்களுக்கு சான்றிதழ், கல்விக் கட்டணம், இழப்பீடு ஆகியவற்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக!
இப்போராட்டத்திற்கு, மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் பா.தினேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மௌ.குணசேகர் கண்டன உரையாற்றினார். இதில், மாநில துணைச் செயலாளர் கலை.அஸ்வினி, திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் அ.மன்சூர், எம்.மணிகண்டன், என்.கணேசமூர்த்தி, ஷிர்பத் நிஷா, சட்டக் கல்லூரி நிர்வாகி சுப ஸ்ரீ உள்ளிட்டோரும், கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Syrian Church Road No. 2
Coimbatore
641001
