07/01/2015
ஒரு நதியைத் தேடி...!கானல் நீராகும் திட்டம்! எக்ஸ்.செல்வக்குமார் மற்றும் ஏ.சிவகுருநாதன்
கவுசிகா நதியை அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென்று சொல்வதெல்லாம் சரி. அந்த திட்டமே கானல் நீராக இழுக்கும் போது, அதிலே இதை இணைப்பது சாத்தியமா? என்றொரு கேள்வி எழுகிறது. இந்த இடத்தில்...அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக்...
எளிமையாகச் சொல்வதென்றால், பில்லுார் மற்றும் பவானி சாகர் அணை நிரம்பிய பின், காவிரியில் சங்கமித்து, கடலில் கலக்கும் உபரி நீரில் 2 டி.எம்.சி., தண்ணீரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, கால்வாய் மூலமாகத் திருப்பி, 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தச் செய்வதே இத்திட்டம். ஏறத்தாழ, 50 ஆண்டுகளுக்கு முன்பாக, காமராஜர் ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் வகுக்கப்பட்ட போது, அன்றைய மதிப்பீடு, 310 கோடி ரூபாய். கடந்த 2011-2012 வருடத்திய CWC படிவத்தில், இதன் மதிப்பீடு, 1,862 கோடி ரூபாய். மத்திய அரசின் வெள்ள நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு, மத்திய நீர் வளக்குழுமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நீர் வள ஆதார அமைப்பு கூறுகிறது. ஆனால், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆரம்பகட்ட நிதியாக 25 சதவீதத் தொகையை ஒதுக்கி செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே, மத்திய அரசின் பங்களிப்பு நிதியை ஒதுக்க முடியுமென்று அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழுவிற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில், பவானி சாகர் அணை 5 முறை நிரம்பி 100 டி.எம்.சி., உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளதாகச் சொல்கின்றனர் விவசாயிகள். ஆனால், இத்திட்டத்திற்கு தேவையான தண்ணீர் 2 டி.எம்.சி., மட்டுமே. அதுவும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பி விட்டால் போதுமானது. அப்படிச் செய்தால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் நிரம்புமென்பது எதிர்பார்ப்பு. இதன் மூலமாக, 30 லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பெறுவர். விவசாயம் செழிக்கும். தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள கால்நடைகள் பெருகும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். 1000- ெமகா வாட் மின்சாரம் சிக்கனப்படும். கிராமப்பொருளாதாரம் உயரும் என்று தீர்க்கமாக நம்புகின்றனர் விவசாயிகள்.
மத்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நீராதாரத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசு 835 கோடியை வறட்சி நிவாரண நிதியாக விவசாயிகளுக்கு வழங்கியது. எனவே, இத்திட்டம் நிறைவேற வெறும் 200 கோடியை ஒதுக்கி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று, 3 மாவட்ட விவசாயிகள் நீ....ண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும், வாக்குறுதியாக தரப்படும் இத்திட்டம், அதன் பின்பு கிடப்பில் போடப்படுவது வாடிக்கையான வேடிக்கை.எதிர்க்கட்சியினரும் இதற்காக அவ்வப்போது அறிக்கை வெளியிடுவர்; தேர்தல் நேரத்தில், நடைப்பயணம், போராட்டம் அறிவிப்பர். புள்ளி விபரங்களை அள்ளி விடுவர். தேர்தல் முடிந்து விட்டால், கூடாரம் காலியாகி விடும்.
ஆனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, எந்த மக்கள் பிரதிநிதியும் மெனக்கெடுவது இல்லை. அதிகாரிகளும், அதிகமாக அக்கறை காட்டுவதில்லை. விவசாயிகளும் இதற்காக, இதுவரை உக்கிரமான போராட்டம் எதையும் முன்னெடுத்ததில்லை. இந்நிலையில் தான், இந்த திட்டத்தில், கவுசிகா நதியையும் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை, புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு 200 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக செலவாகும்; பலன் பல மடங்கு அதிகம் கிடைக்குமென்று ஆணித்தரமாக வாதிடுகின்றனர் அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகள்.இதை வலியுறுத்தியே, சர்க்கார் சாமக்குளம், இடிகரை, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள் மற்றும் 16 கிராம ஊராட்சிகளில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள், பல லட்சம் மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தும் அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமே, காகிதங்களிலேயே கசங்கிக் கொண்டிருக்கும்போது, இந்த திட்டத்தை அதிலே இணைத்து, அரசாணை வெளியிட, தமிழக அரசு முன் வருமா? அப்படி வந்தால் திட்ட வடிவு எப்படியிருக்கும்...?
நடைமுறைச்சிக்கல்...!
அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், கவுசிகா நதியைச் சேர்க்க வேண்டுமென்று, இந்த சங்கத்தின் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கைக்கு பொதுப்பணித்துறையின் திட்டம் (ம) திட்ட வடிவமைப்பு கோட்டம் செயற்பொறியாளர் ராஜகோபால் அனுப்பியுள்ள பதிலில் கூறியுள்ளதாவது: அத்திக்கடவு-அவிநாசி வெள்ள நீர் கால்வாய் திட்டத்தில், அக்ரஹார சாமக்குளம், சர்க்கார் சாமக்குளம் ஆகிய குளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீர், கவுசிகா நதியில் சேர்கிறது. இருப்பினும், இத்திட்டத்தில் உத்தேசித்துள்ள நேர்பாட்டில் சில தொழில் நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், பொதுப்பணித்துறை திட்ட உருவாக்கம் தலைமைப் பொறியாளரின் தள ஆய்வு அறிக்கையில் (தேதி:24-07-2013) குறிப்பிட்டுள்ளவாறு, பழைய நேர்பாடு புதுப்பித்தல் மற்றும் தகுந்த நேர்பாடு குறித்த ஆய்வுப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுபற்றி, தமிழக அரசுக்கு தலைமைப்பொறியாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு பொதுப்பணித்துறை சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.
இத்தனை ஊர்களின் எதிர்பார்ப்பு!
அத்திக்கடவு-கவுசிகா நதி திட்டத்துக்காக, தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பியுள்ள உள்ளாட்சி அமைப்புகள்:
பேரூராட்சிகள்: இடிகரை, சர்க்கார் சாமக்குளம், மோப்பிரிப்பாளையம்.
கிராம ஊராட்சிகள்: அத்திப்பாளையம், கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், தெக்கலுார், செம்மாண்டம்பாளையம், வஞ்சிப்பாளையம், புதுப்பாளையம் மற்றும் கணியாம்பூண்டி.
விளை நிலம் விற்பதைத் தடுக்கலாம்!
மகாலிங்கம், துணைச்செயலர், அத்திக்கடவு- கவுசிகா ேமம்பாட்டுச்சங்கம்-: கவுசிகா நதியின் வழித்தடத்தின் இரு புறமும், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில், நீர்ப்பாசன வசதி இல்லாததால், விவசாயம் நலிந்து, அழிந்து வருகிறது. இங்குள்ள மக்கள், வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், கவுசிகா நதியை இணைப்பதன் மூலமாக, ஏராளமான குளம், குட்டைகள் நிரப்பப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்; பாசனக் கிணறுகளில் விவசாயத்துக்கான தண்ணீர் கிடைக்கும். விவசாயப்பரப்பு அதிகரிக்கும். நிலங்களை லே-அவுட்களுக்கு விற்கும் அவலம் தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1,500 அடி ஆழத்துக்கு ஆழ்துளை அமைத்து, பூமியைப் புண்படுத்தும் கொடுமை தடுக்கப்படும். குறைந்த செலவில், அதிக பலன் தரும் திட்டம் என்பதால், மாநில அரசு நிதியிலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசே முன் வர வேண்டும்.
2டி.எம்.சி:
கடலில் கலக்கும் உபரி நீரில் 2 டி.எம்.சி., தண்ணீரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, கால்வாய் மூலமாகத் திருப்பி, 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தச் செய்வதே இத்திட்டம்.
1862:
கடந்த 2011-2012 வருடத்திய CWC படிவத்தில், இத்திட்டத்தின் மதிப்பீடு, 1,862 கோடி ரூபாய்.
100டி.எம்.சி:
கடந்த 15 ஆண்டுகளில், பவானி சாகர் அணை 5 முறை நிரம்பி 100 டி.எம்.சி உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளதாகச் சொல்கின்றனர் விவசாயிகள்.
500:
இத்திட்டத்தால் 500 குளம், குட்டைகள் நிரம்பும், 30 லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பெறுவர்.
SOURCE : http://www.dinamalar.com/news_detail.asp?id=1155240

07/01/2015
07/01/2015
14/07/2014