03/10/2023
காந்தி! எப்பேர்ப்பட்ட மனிதர்! எவ்வளவு அசாத்தியமான நம்பிக்கைகளும் எதிர்ப்பார்ப்புகளும் கொண்ட அபூர்வப் பிறவி! முப்பது வயதிலேயே முதுமை கொண்ட மனிதர்.
எங்கோ கடல் கடந்த நாட்டில் தனக்கு நேர்ந்த ஒரு அவமதிப்பை மனித இனத்திற்கே பொதுமைப்படுத்திக் கொள்ளக்கூடிய மன விசாலம் பெற்று இயற்கையின் தன்னிச்சையான அள்ளித் தெளிப்பால் கிடைத்த தோல் நிறத்தாலே கூட ஒரு மனிதன் இன்னொருவனை விட உயர்த்தி எனக் கொள்ளக்கூடிய எந்தவித நியாயவாதத்திற்கும் உட்பட முடியாத ஆனால் எவ்வளவோ நூற்றாண்டுகளாக நடைமுறை வாழ்க்கையில் ஒன்றிப் போய்விட்ட சிருஷ்டி விநோதப் பெருமையையும் அகங்காரத்தையும் முற்றிலும் உணர்ந்து, சோகத்தில் தோய்ந்து, அந்தச் சோகத்தின் உந்துதலால் எண்ணற்ற அசாத்தியமான பணிகளில் ஈடுபட்ட மனிதர். அந்த வெள்ளிக்கிழமையன்று மாலை குண்டடிப்பட்டுச் சாகும்வரை சுயசுத்திரிகரிப்புத் தவத்தைத் தவறவிடாதவர். மனித இயல்பின் சபலங்களையும் பலவீனங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். அப்படிப்பட்ட மனிதருக்கு மனமுறிவும் ஏமாற்றங்களும் சாத்தியமேயில்லை.
ஆனால் அவருடைய கடைசி ஆண்டுகள் கண்ணீரில் உப்பரிக்கப்பட்டவை. அழையா இடங்களுக்கு அவராகப் போய் அவரைக் கேட்காத ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவராகக் கொடுத்து, பிரளயமாகப் பொங்கி வந்தப் பயங்கரக் கேடுகளுக்கு அவரே காரணம் எனத் தோற்றம் கொண்டு மற்றோரையும் நினைக்க வைத்து, தான் கண்டெடுத்து உருவாக்கி வளர்த்துவிட்ட சீடர்களைக் கிழம் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறது எனச் சொல்லாமல் சொல்ல வைத்து, தன்னை வணங்கிய ஒருவன் கையாலேயே சாவும் அடைந்தவர். மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா?
ஏதோ பல்லுப்போன, உடல் வலுவிழந்த, விவரம் அறியாச் சிறுவர்களுக்கு மட்டும் களிப்பூட்டும் விதூஷக உருவம்தான். ஆனால் அப்படி இல்லை, எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சினைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக் கொள்ளாதவர், ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக் கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளையும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள் கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக் கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர், தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் - மாற்றம் கொள்ளக் கூடியவன் - உயரக்கூடியவன் - என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் முன்கணம் களங்கமுற்றதை இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர், இந்த மனிதர் கடவுளைக் குறிப்பது என்று தான் நம்பிய ஒரு சொல்லை உச்சரித்தபடிதான் தன் இறுதி மூச்சை விட்டார். அவர் கடவுளைக் கண்டாரா? கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா? இந்த மனிதரால் எப்படிச் சிரிக்கவும் முடிந்திருக்கிறது?
காந்தி சிறுகதையிலிருந்து
- அசோகமித்திரன்.
02/10/2023
#தங்கமனசுபாட்டி
எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!!
புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது.
நாற்காலி, மேசை எதுவும் இல்லை. திண்ணையில், பாட்டியின் அருகே அமர்ந்து பலர் பசியாறிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலருக்கும் வயிறு நிறைந்து போகிறது. மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் எல்லாமும் தனம் பாட்டி தான்.
84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம்.
நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரருக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோட புதுக்கோட்டைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டாரு.
டீக்கடையை வச்சி பிழைப்பு ஓட்டிக்கிட்டு இருந்தோம். சமாளிக்க முடியலை. கொஞ்ச வருஷம் கழிச்சி இட்லிக்கடை ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்சப்ப இட்லி ரூ.10 காசு. மத்த கடைகளைவிட எப்பவும் நம்ம கடையில விலை கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும்.
நாம போதும்னு சொல்ற ஒரே விஷயம். சாப்பாடுதான். எவ்ளோ நல்ல சாப்பாடா இருந்தாலும், யாரா இருந்தாலும், வயிறு நிறைஞ்சதுக்கு அப்புறம் சாப்பிட முடியாதே. பணத்தை விட, நம்மள தேடி வர்றவங்களோட பசியை போக்குறது தான் முக்கியம்னு நினைச்சோம். அதனாலயே என்னவோ எங்களைத் தேடி நிறைய பிள்ளைங்க வருவாங்க. பலர் உங்களுக்கு எப்படி கட்டுப்பிடியாகுது?னு கேட்பாங்க. குறைஞ்ச லாபம் கிடைச்சா போதும்னு நினைக்கிறதாலதான் சமாளிக்க முடிஞ்சது. இப்பவும் முடியுது.
டீ, இட்லி வியாபாரம் செஞ்சே தான் பிள்ளைங்க மூணு பேரையும் வளர்த்தோம். மூணு பேரும் கல்யாணம் முடிஞ்சு நல்லாயிருக்காங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, வீட்டுக்காரருக்கு கண்ணு ஆபரேசன் செஞ்சோம். அப்புறம் அவருக்கு கிட்னியில பிரச்னை வந்ததால டீக்கடையை நிறுத்திட்டோம்.
இட்லி கடையை மட்டும் நிறுத்தவே இல்லை. காலையில 5 மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிடுவேன். ஸ்கூல் பிள்ளைங்க, ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க, கூலிக்கு வேலை பார்க்கிறவங்கன்னு தினசரி வாடிக்கையாளர்கள் பலர் வருவாங்க. அதிகபட்சமா ஒருநாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு சிலநாள் வியாபாரம் பெருசா இருக்காது. அடுத்த நாள் உளுந்து, அரிசி வாங்கிறதுக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனாலும், எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன்.
விறகு அடுப்புக்கு, சாயந்தர நேரத்துல காடு, கரைக்கு போய் விறகு எடுத்துக்கிட்டு வந்துடுவேன். மாவுக்கல்லு இருக்கு. இப்போ பையன் கிரைண்டரும் வாங்கிக் கொடுத்திருக்கான். பெரும்பாலும், மாவுக் கல்லுலயே மாவு ஆட்டிக்கிடுவேன்.
நாலு பேருக்கு தினமும் இட்லி கொடுத்துப் பழகிட்டேன். அவங்களும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க. நான் சாப்பிடுற பிள்ளைங்ககிட்ட கணக்கு கேட்கிறதேயில்லை. வேணுங்கிற இட்லியை எடுத்து வச்சிக்குவாங்க. சாப்பிட்டுட்டு சரியா கணக்குப் போட்டு கொடுத்துட்டு போயிடுவாங்க
ரொம்ப வருஷமா ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன். விலைவாசி உயர்ந்துகிட்டே இருந்தாலும் நான் மட்டும் விலையை ஏத்தாம தான் இருந்தேன். இப்போ ரெண்டு வருஷமாதான் ரெண்டு ரூபாய்க்குக் கொடுக்குறேன். அதுகூட, தினமும் இங்க சாப்பிட வர்ற பிள்ளைங்கதான், உன் உழைப்புக்காகவது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கணும்னு சொல்லி, அவங்களா விலையை ஏத்தி கொடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாங்க. அது அப்படியே மாறிருச்சு.
சாப்பிட வர்ற பிள்ளைங்க பலர், `உன் குடிசையை எடுத்துக் கட்டித் தர்றேன்'னு சொல்லுவாங்க. அதெல்லாம் வேண்டாம் ராசா, இந்த கிழவிக்கு இதுவே போதும்னு சொல்லிடுவேன். முடியாம இருந்த வீட்டுக்காரரை இட்லி வேலை செஞ்சே பார்த்துக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அவரு என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு. இப்ப கூட என் பிள்ளைங்க, எங்களோட வந்து ஓய்வு எடுங்கம்மான்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. ஆனா, இட்லி கடையையும், கடைக்கு வர்ற இந்த பிள்ளைகளையும் விட்டுப்போக மனசில்ல. இந்த கிழவியோட உயிரும் இட்லி கடையிலயே போகட்டும் ராசான்னு சொல்லி அவங்களை அனுப்பிடுவேன். வெந்த இட்லிகளை தட்டுக்கு மாற்றுகிறார் தனம் பாட்டி.
சிலரது வாழ்க்கை இப்படித்தான் அழகாகிக் கிடக்கிறது உழைப்பாலும் அன்பாலும்.
20/05/2023
கணக்கதிகாரமும் பலாப்பழமும்:
பதிவு- யாதும் முத்து
என் தந்தையின் அப்பா, குமாரசாமி அவர்களும் அவரது சகோதரர்களும் சில கணிக்கும் திறமைகள் இருந்ததாகச் சொல்வார்கள். அதாவது நிலக்கடலை விளைந்த காட்டில் மூலை மூலைக்கு ஒரு செடியை பறித்து அதில் உள்ள காய்களின் எண்ணிக்கை மற்றும் பருப்பின் திரட்சியை கணக்கிட்டு, அந்த நிலத்தில் இருந்து எத்தனை மூடை கடலை கிடைக்கும் என்பதை துள்ளியமாக சொல்வாராம். அது போலவே அவரது சகோதரர் சங்கரலிங்கம் அவர்கள், அன்றைய அணாக்களை (ஓட்டைகாசு) கைப்பிடி எடுத்து அது இரண்டு /மூன்று / ஐந்து ரூபாய் எனச் சரியாக சொல்வாராம். இப்படி நம் முன்னோர்கள் நேரத்தை, தண்ணீரை, ஆடு/ மாடுகளின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடும் திறமைகளை வைத்திருந்தார்கள்.
இதற்கு பின் அவர்களின் தனித்திறமை இருந்தாலும், இதுபோன்ற கணிப்புகளுக்கு பல சூத்திரங்களும் உண்டு. அதைப்பற்றி விளக்குவதே 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த "காரி" என்ற புலவர் எழுதிவைத்த "கணக்கதிகாரம்" என்ற நூல்.
இன்று எங்கள் வீட்டில் அந்த பழங்கால கணிப்பு விளையாட்டு ஒன்றை பரிசோதனை செய்தோம். அது, பலா பழம் ஒன்றை வெட்டாமல் உள்ளே இருக்கும் சுளைகளின் எண்ணிகையை கணக்கிடும் கணிப்பு முறை.
என் மனைவி மீனா, காலையில் ஒரு சிறிய பலா பழம் ஒன்றை உள்ளூர் விவசாயிடம் வாங்கினார்.
உடனே எங்கள் கணிப்பு விளையாட்டு தொடங்கியது. நாங்கள் பழத்தை வெட்டாமல், சொல்லப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில், 57 சுளைகள் இருக்கும் என கணித்தோம். பிறகு நானும் மகன்களும் ஊர்சுற்ற பக்கத்தில் உள்ள அணைக்கட்டு வரை சென்றுவிட்டோம். (அங்கே கற்றது தனி பதிவில் வரும்). நாங்கள் திரும்பி வருவதற்குள் எங்களுக்கு காலைச் சிற்றுண்டி தயார் செய்து விட்டு, பலா பழத்தை வெட்டி வைத்த மனைவி, வந்ததும் எங்களை எண்ணிப்பார்க்க கட்டளையிட்டார்.
அட ஆமாங்க, நாங்கள் கணிய்தது போலவே சரியாக 57 சுளைகள் இருந்தன.
இது சாத்தியம், அந்த சூத்திரம் இதோ...
பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை
- கணக்கதிகாரம், காரி நாயனார்
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கியபின், அதை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.
காம்பு அருகில் உள்ள முட்களின் எண்ணிக்கை *47*
அதை 6 ஆல் பெருக்கிய எண் 47×6 = *282*
வந்த எண்ணை 5 ஆல் வகுத்தால் 282/5 = *56.4*
ஆக *56 அல்லது 57* சுளைகள் இருக்க வேண்டும்.
எங்களுக்கு கிடைத்த சுளைகள் 57.
***
இது பலா பழம் கிடைக்கும் பருவம், நீங்களும் ஒரு சிறிய பழம் வாங்கி (காம்பு அருகில் உள்ள முட்களை எண்ண ஏதுவாக இருக்கும் பழம்) பரிசோதித்து, நம் முன்னோர்கள் கணக்கியல் திறமையை உணர்ந்து மகிழுங்கள்.
20/05/2023
இந்தியாவின் முதல் புத்தக கிராமம்
2 கோடி புத்தகங்கள் - மகராஷ்டிராவின் சாதனை
அவுரங்காபாத் கிராமத்தில் 1976இல் நான் வேலை செய்தபோது சதாரா மாவட்டம் மிக பின் தங்கிய மாவட்டம் . இன்று இங்குள்ள பிலார் ( BHILAR -
MAHARASHTRA) கிராமத்தை இந்தியாவின் முதல் புத்தக கிராமமாக( 'Pustakanche Gaav') - மகராஷ்டிரா மாநில அரசு மாற்றி இருக்கிறது.
பஞ்சகனி மலைபிரதேசத்தில் ஸ்ட்ராபெரி நிறைய விளையும். இந்த கிராமத்தில் 25 இடங்களில் மேசை நாற்காலி , அலங்கார குடைகல் போடப்பட்டு 2 கோடி மராத்தி புத்தகங்கள் இலவசமாக படிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனை Marathi Bhasha department and Rajya Marathi Vikas Sanstha, a government body இணைந்து சாதித்து இருக்கின்றன. இந்த கிராமத்து ரயில் நிலையத்திலேயே பெரிய விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பிரிட்டனில் உள்ள Hay-on-Wye, a Welsh town என்பதைப் பின் பற்றி சாதித்து் இருக்கிறார்கள்.
பதிவு - இந்திரன் ஐயா Indran Rajendran
12/05/2023
🍂கூடுகிறது 🍂
நம்மஊரு சந்தை - கோயம்புத்தூர்
இயற்கை வழி வேளாண் மக்கள் & உற்பத்தியாளர்களின் நேரடி சந்தை
14- 05- 2023 ஞாயிறு
காலை 10 மணி முதல்
மாலை 4 மணி வரை.
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,
கிராஸ்கட் சாலை , மேம்பாலம் அருகில், பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம், காந்திபுரம்,
கோயம்புத்தூர்.
பாரம்பரிய அரிசிவகைகள்
சீர்தானியங்கள்
மரசெக்கு எண்ணெய் வகைகள்
நாட்டுச் சர்க்கரை, பனங் கருப்பட்டி, கற்கண்டு.
குழம்பு பொடி வகைகள்.
மளிகைப் பொருட்கள்
காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள்,
குழந்தைகளுக்கான உணவு வகைகள்
மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள்,
மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள்
வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள்,
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பருத்தி உள்ளாடைகள்,
அணையாடைகள்
உடல் சுத்தப்பொடிகள்,
வெட்டி வேர்பொருட்கள்,
சுத்தப்படுத்திகள்,
தேன் மெழுகில் செய்த
சோப்புகள்,
மருந்துப்பொருள்கள்,
உடல்பொலிவு பொருட்கள் (Cosmetics)
மண்பாண்டப் பொருட்கள்,
மர விளையாட்டுப் பொருட்கள்,
மூங்கில் பயன்பாட்டு பொருட்கள்
பனை ஓலைப் பொருட்கள், சணல் பைகள், ஜோல்னா பைகள், துணிப்பைகள் (Cotton Bags)
சாப்பிட மதிய உணவு,
அருந்த மலர் மற்றும் கனிச்சாறு,
நீரா பானம்
என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் நம்ம ஊரு சந்தையில் கிடைக்கும்.
இத்துடன் குழந்தைகளுக்கான விளையாட்டுகளும், கதைகளும் காத்திருக்கின்றன.
வாருங்கள்..
தொடர்புக்கு
9942118080
9500125125
அனைவரும் வருக!!, அனுமதி இலவசம்..
எண்ணெய் வாங்க பாத்திரங்களும், பொருட்கள் வாங்க துணிப்பையும் கொண்டு வாங்க.
(முற்றிலுமாக ஞெகிழி இல்லா சந்தை இது)
நண்பர்களுக்கும் பகிருங்கள்..
location link:
https://maps.app.goo.gl/4N6aG5qwq7miw1a68
இயல்வாகை நிகழ்வுகளை அறிய fb link 👇🏾
https://www.facebook.com/iyal.vaagai?mibextid=ZbWKwL
whats app குழுவில் இணைந்து கொள்ள 👇🏾
https://chat.whatsapp.com/KDiucZDBlpU1R9pSeUMQYk
11/05/2023
மாயன்கள் காலத்துக்குப் பிறகு மத்திய அமெரிக்காவிலே தோன்றிய நாகரீகம் அஸ்டெக் நாகரீகம்.
மாயன்களிடம் இருந்து பெற்ற சாக்லெட், காலண்டர் (நாட்காட்டி) இரண்டையும் அஸ்டெக் மக்கள் மெருகேற்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஸ்கார்லெட் என்கிற சிவப்புச் சாயம், கேனோ படகு, பாப்கார்ன் இவற்றையெல்லாம் முதன்முதலில் உருவாக்கியவர்கள் கூட அஸ்டெக் மக்கள்தான்.
அஸ்டெக் மக்களின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மிதக்கிற தோட்டங்கள், பண்ணைகள்.
அஸ்டெக் மக்கள், மெக்சிகோ பள்ளத்தாக்குப் பகுதிக்கு முதலில் வந்தபோது சதுப்புநிலத்துக்கு நடுவிலே இருந்த ஓர் ஏரிப்பகுதிதான் அவர்களுக்கு கிடைத்தது. அங்கேதான் அவர்கள் குடியிருந்தார்கள். சதுப்பு நிலத்துக்கு நடுவில் இருந்த அந்த பகுதியில் போதுமான அளவுக்குப் பயிர் செய்ய முடியவில்லை.
ஆனால், போதுமான அளவுக்கு உணவுத்தானியங்களை உற்பத்தி செய்தே ஆக வேண்டும் என்கிற நெருக்கடி அஸ்டெக் மக்களுக்கு ஏற்பட்டது. அதற்காக அவர்கள் கண்டுபிடித்த வழிதான் சினாம்பாஸ் என்னும் மிதக்கும் தோட்டங்கள்.
நாணல், இலை தழை செடிகளாலே 90 அடி நீளம், எட்டடி அகலத்துக்கு ஒரு கூடையைப் பின்னி, அதிலே சேறு, சகதி, அழுகின இலைதழைகளைப் போட்டு அதைச்சுற்றி, சூரிய வெளிச்சத்தை அதிகம் மறைக்காத வில்லோ மரங்களை அஸ்டெக் மக்கள் வளர்த்திருக்கிறார்கள்.
இந்த மிதக்கிற தீவுகளில் பயிர்ப்பச்சைகளை அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். இதற்கு உரமாகப் பயன்பட்டது மனிதக்கழிவு.
இதன்மூலமாக மிதக்கிற தோட்டத்துக்கு உரமும் கிடைத்தது. அஸ்டெக் மக்கள் வாழும் நகரமும் சுத்தமாக மாறியது. இதன்மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார்கள் அஸ்டெக் மக்கள்.
இந்த மிதவைத் தோட்டங்கள் மூலமாக அந்தக்காலத்திலே, ஆண்டுக்கு 3 கோடியே 99 லட்சம் கிலோ சோளத்தை, அஸ்டெக் மக்கள் உற்பத்தி செய்திருக்கிறார்கள்.
இந்த சினாம்பாஸ் என்கிற மிதக்கும் தோட்டங்களில் வெறும் வேளாண்மை மட்டும் செய்யாமல், வான்கோழி மாதிரியான பறவைகளையும் அஸ்டெக் மக்கள் வளர்த்திருக்கிறார்கள்.
மனிதக்கழிவுகள் இப்படி உரமாகப் பயன்பட்டதால், மலக்குழி பிரச்சினை, அதன் அடைப்பு நீக்க உள்ளே இறங்கும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அஸ்டெக் மக்களுக்கு இருக்கவில்லை. சமூகநீதி, சர்க்கரை வியாதி மாதிரியான கூச்சல்களும் இருக்கவில்லை.
அஸ்டெக் ராஜ்ஜியத்தில் மது இருந்திருக்கிறது. ஆனால், 70 வயதுக்கு மேலே ஆனவர்கள் மட்டும் மது அருந்தலாம் என்று அங்கே ஒரு சட்டமும் இருந்திருக்கிறது.
அதேமாதிரி அஸ்டெக் நாகரீகத்தில், குழந்தைகளுக்கு கட்டாய கல்வி முறை இருந்திருக்கிறது. பள்ளிக்கூடம் தொடங்குகிறபோது குழந்தைகளை கூட்டி வருகிற வேலையையும், முடியும்போது வீட்டுக்கு அழைத்துப்போகிற வேலையையும் இந்தக் காலத்து பெற்றோர்கள் மாதிரியே அந்தக்காலத்து அஸ்டெக் இனத்து அம்மா அப்பாக்கள் செய்திருக்கிறார்கள்
அஸ்டெக் மக்களிடம் மனிதர்களைப் பலியிடும் வழக்கமும் இருந்திருக்கிறது. ஆனாலும், கழிவுகளை அவர்கள் கையாண்ட விதம் உள்பட அவர்களது பங்வேறு செயல்பாடுகள் வியப்பூட்டுகின்றன.
………………………
மோகன ரூபன் முகநூல் பதிவு 11.05.2023
10/05/2023
நெதர்லாந்து உத்ரெக்ட் (Utrecht) நூலகங்கமும் உள்ளே மிதிவண்டிகள் பயன்பாடும்..
நெதர்லாந்தில் நூலகத்திற்குள் சென்று மிதிவண்டி ஓட்டுதல் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது!
உடற்பயிற்சி ஒருபுறமும் வாசகர்களின் மின்னணு சாதனங்களை மின்னூட்டம் (charge) செய்தல் மறுபுறமும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! இல்லை இல்லை; மூன்று மாங்காய்கள்! மிதிவண்டியை இயக்கிக்கொண்டே புத்தகம் படிப்பது,மடிக்கணினி இயக்குவது ஆகிய செயல்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியை நல்குகின்றனவாம்! ஓர் ஆய்வில் கண்டுள்ளார்களாம்! இதற்கு அதிக உழைப்பு தேவையில்லையாம்! சிலர் கால்களை ஆட்டிக்கொண்டே பணி செய்கிறார்களல்லவா?அந்த ஆற்றலே போதுமானதாம்! களைப்பு தோன்றவே தோன்றாதாம்! அவ்வளவு இலகுவாக மிதிவண்டியை ஓட்டலாமாம்!
இந்த யோசனை எளிமையானது, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது, சில குறிப்புகளை மதிப்பாய்வு செய்யும் போது அல்லது மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கும் போது நீங்கள் சோர்வடையும் வரை, தரையில் நங்கூரமிடப்பட்ட
மிதிவண்டிகளைப் பயன்படுத்த ஊக்கம் தருகிறார்கள். மிதிவண்டி ஓட்டுதல் மற்ற நடவடிக்கைகளுக்கு மாற்றியமைக்க முடியாது என்று யார் கூறினார்கள்?
இந்த கண்டுபிடிப்பு நெதர்லாந்திற்கு வெளியே காணப்படவில்லை, ஆனால் இது எந்த நேரத்திலும் புவியைச் சுற்றி விரிவடையும் ஒரு சிறந்த யோசனையாகும்!.
உத்ரெக்ட் (Utrecht,) நகரைப் பற்றிய சிறு குறிப்பு:
நெதர்லாந்திலுள்ள நகராட்சிகளில் நான்காவது மிகப் பெரிய நகராட்சியாக விளங்குகின்றது. 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 330,772 ஆக இருந்தது.
உத்ரெக்ட்டின் தொன்மையான நகரமையம் பிந்தைய நடுக்காலத்துக் கட்டிடங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இது நெதர்லாந்தின் சமய மையமாக விளங்குகின்றது. டச்சுப் பொற்காலம் வரை இதுவே நெதர்லாந்தின் மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது; நாட்டின் பண்பாட்டு மையமாகவும்
மக்கள் தொகை மிகுந்த நகரமாகவும் ஆம்ஸ்டர்டம் முன்னேறியது. 1321க்கும் 1382க்கும் இடையே கட்டப்பட்ட டோம்கெர்க் பேராலயம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.1674 இல் ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் இப்பேராலயத்தின் ஒரு பகுதி அழிபட்டது. இப்பகுதி மீண்டும் கட்டப்படவில்லை. எனவே இப்பகுதி பேராலயத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக உள்ளது.
நெதர்லாந்தின் பெரிய பல்கலைக்கழகமான உத்ரெக்ட் பல்கலைக்கழகம் இங்குள்ளது. தவிரவும் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்நகரில் உள்ளன. நாட்டின் மையத்தில் இருப்பதால் இருப்பூர்தி, சாலைப் போக்குவரத்துக்கு மையச்சாக விளங்குகின்றது. பண்பாட்டு நிகழ்வுகளில் ஆம்ஸ்டர்டாமை அடுத்து நாட்டின் இரண்டாமிடத்தில் உள்ளது.
புகைப்படங்கள்:
நெதர்லாந்து உத்ரெக்ட் (Utrecht) நூலகங்களில் உள்ளே மிதிவண்டிகள் பயன்பாடு.
நூலகத்தின் படங்கள்.
நன்றி:
நெதர்லாந்து சுற்றுலா அமைச்சகம்.
பதிவு : Veeramani Veeraswami
09/05/2023
உயிர் எழுத்துகள் அறிமுகம்..
எழுத்தின் உள்ளே படங்களுடன் ..
பதிவு : Kasthu Vijay
04/05/2023
எப்பேர்பட்ட கற்பனை பாருங்கள். யானையினை பிழந்து உள்ளே சிவன் உள்ளான். அவன் கால்களும் கைகளும் யானைக்குள் அடக்கம். இது திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ளது.
இதை பார்த்ததும் புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் கதை என் முன் சென்று மறைந்தது. கதையை கேளுங்கள்
https://youtu.be/XPvD9JxZ1cw
பதிவு : Pandiyarajan
27/04/2023
திருப்பூரில்,
சீர்தானிய மரபு திண்பண்டங்கள் செய்முறை பயிற்சி
30 ஏப்ரல் 2023 - ஞாயிறு
காலை 9.30 மணி முதல்
மாலை 4 மணி வரை.
நம் குழந்தைகளை ரசாயனங்கள் கலந்த பாக்கெட் தீனிகளில் இருந்து விடுவித்து
மரபு ரக உணவுகளில் குழந்தைகளுக்கு சுவையான திண்பண்டங்களைத் தர
நினைக்கும் பெற்றோர்களுக்கும்,
சீர்தானியங்கள், மரபு ரக அரிசி வகைகள் குறித்த விழிப்புணர்வும், பயன்பாடும் பெருகி வரும் நிலையில்
வீட்டிலிருந்தபடியே சீர் தானிய திண்பண்டங்களை மற்றவர்களுக்கு தயாரித்து கொடுக்க விரும்புபவர்களுக்கும்
சிறந்த வாய்ப்பு..
செயல்முறை பயிற்சியாக
🍁மாப்பிள்ளை சம்பா அரிசி
மிளகு தட்டுவடை,
🍁ராகி முடக்கத்தான்
ஓலை பக்கோடா,
🍁 தினை மிக்சர்,
🍁 தக்காளி மிக்சர்,
🍁 புதினா மிக்சர்,
முறுக்கு வகைகள்:
🍁இளநீர் முறுக்கு,
🍁செவ்வாழை முறுக்கு,
🍁சின்ன வெங்காய முறுக்கு,
🍁பாலக்கீரை முறுக்கு,
🍁 பூண்டு முறுக்கு,
🍁புதினா முறுக்கு,
🍁கறிவேப்பிலை முறுக்கு,
🍁கருப்பட்டி முறுக்கு,
மூலிகை முறுக்கு வகைகள்:
☘️வல்லாரை முறுக்கு,
☘️தூதுவளை முறுக்கு,
☘️முடக்கத்தான் முறுக்கு
🍁 பாக்கெட்டில் அடைக்கப்படும் தீனிகள்
நீண்ட நாட்களுக்கு (Storage ல்) மொறுமொறுப்பு குறையாமலும், எண்ணெய் சிக்கு வாடை வராமல் இருப்பதற்கான தயாரிப்பு நுட்பங்கள்,
பயிற்றுநர்:
"நம்ம ஊரு சந்தை " யின் பெருமை மிகு பங்கேற்பாளர்
திரு.கணேசன் - Cavery foods,
பரமத்தி வேலூர்.
திரு. கணேசன் அவர்கள் சீர்தானியம், மரபு அரிசி வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திண்பண்டங்களை சுவையாக ( சமையல் சோடா, நிறமூட்டி, சுவையூட்டி எதுவுமில்லாமல்) தயாரிப்பதிலும், அதன் நுட்பங்களை பிறருக்கு பயிற்றுவிப்பதிலும் வல்லவர்..
நம்ம ஊரு சந்தையில், 2019 ல் ஆரம்பித்து இப்போது வரை, தன் திண்பண்டங்களுக்கென பெரும் வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்..
பயன் பெற விழைவோர்
முன்பதிவுக்கு : 9942118080, 9500125125
பயிற்சி பங்களிப்பு : ரூ.500/-
(30 நபர்கள் மட்டும்)
இடம்:
திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகம்,
A2B உணவகம் அருகில்,
பல்லடம் ரோடு, பழைய பேருந்து நிலையம், திருப்பூர்.
நல்உணவு,
நல்லுடல்,
நல்வாழ்வு.
16/04/2023
கன்னியாகுமரி மாவட்ட,
நாகர்கோவில் புத்தக திருவிழா - 2023
இயல்வாகை
அரங்கு எண் 11
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானம்.
கோணம், நாகர்கோவில்.
ஏப்ரல் 14முதல் ஏப்ரல் 24 வரை
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
பேச 9942118080 / 9500125125
ஒளிப்படங்கள் : பாலகிருஷ்ணன்
16/04/2023
ஊத்துக்குளி இயல்வாகை குழந்தைகள் நூலகத்தில், இந்த வார ஞாயிறு குழந்தைகளின் சிலம்ப பயிற்சி ..
ஒவ்வொரு வாரமும் கட்டணமில்லாமல் சிலம்பம் பயிற்சி நடைபெறுகிறது.
எல்லா வயதினரும் கற்றுக் கொள்ளலாம்..
பேச : 9942118080
இயல் வாகை சூழலியல் இயக்கம்
ஊத்துக்குளி
ஒரு விதை பூமி முழுவதையும் பசுமையாக்குகிறது..