14/08/2026
பத்திரிகை செய்தி:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தமிழ்நாடு மாநிலக்குழு
14.08.2026
தொடர் போதைக் கொலைகள்: கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்!
கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பாக போதை, மது மற்றும் குழு வன்முறையின் பின்னணியில் 3 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் இளைஞர்களின் பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளன.
கிணத்துக்கடவில் மது அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. பீளமேட்டில் பழிவாங்கும் நோக்கில் ஏற்பட்ட குழு மோதலில் நவீன் உயிரிழந்துள்ளார். இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாணவர் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
போதைப்பொருள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியளிக்கிறது. போதைப்பொருள் குறித்து தகவல் அளிப்பவர்களின் அடையாளத்தை ரகசியமாகப் பாதுகாத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
கோவையில் கஞ்சா மட்டுமின்றி 41 வகையான போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், போதை ஒழிப்பை வெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக மட்டும் அரசு அணுகக்கூடாது. போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது, யார் விற்பனை செய்கிறார்கள், யார் விநியோகிக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, அதன் பின்னணியில் உள்ள முழு வலையமைப்பையும் முறியடிக்க வேண்டும்.
அதேநேரத்தில், போதைக்கு அடிமையான இளைஞர்களை குற்றவாளிகளாக மட்டும் அணுகாமல், அவர்களுக்கு சிகிச்சை, உளவியல் ஆலோசனை மற்றும் மறுவாழ்வு வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிரான சிறப்பு நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் இளைஞர்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இளைஞர்களை கைது செய்வது மட்டும் போதை ஒழிப்பு அல்ல. போதைப்பொருள் வலையமைப்பை முறியடித்து, தகவல் அளிப்பவர்களைப் பாதுகாத்து, போதையில் சிக்கிய இளைஞர்களை மீட்டு, அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே உண்மையான போதை ஒழிப்பு.
கோவையில் இன்னொரு உயிர் பலியாகும் முன்பே அரசு விழித்துக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தோழமையுடன்
செல்வராஜ்
மாநில தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநில செயலாளர்