07/10/2026
‘ஸ்மார்ட் மின் மீட்டர்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் (பொறுப்பு) அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சார்பில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ‘ஸ்மார்ட் மின் மீட்டர்’களைப் பொருத்துவதற்கும், அவற்றை நிர்வகிக்கத் தனியார் நிறுவனங்களை நியமிப்பதற்குமான டெண்டர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும், நுகர்வோர் உரிமைகளையும் பறிக்கும் இந்த ஆபத்தான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்தடை, சீரற்ற மின்னழுத்தம், பல இடங்களில் முறிந்தும் சாய்ந்தும் காணப்படும் ஆபத்தான மின்கம்பங்கள் மற்றும் பழுதடைந்த மின்மாற்றிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புச் சிக்கல்களால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அத்தியாவசியப் பிரச்சினைகளைச் சீரமைக்கத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாமல், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கொண்டுவரத் துடிப்பது மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை அல்ல.
மின் விநியோகத்தில் தனியாரை அனுமதிக்கும், எதிர்ப்பின் காரணமாக நிலுவையிலுள்ள ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவில் இத்தகைய உத்தேச நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்த முனைவது கண்டிக்கத்தக்கது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால், கைபேசிகளைப் போல முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யும் ‘ப்ரீபெய்ட்’ முறை நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இதனால், கைவசம் பணமில்லாத ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அவசரக் காலத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாமல் போனால், மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும் கொடூரச் சூழல் உருவாகும். மேலும், டிஜிட்டல் மீட்டர்களின் மென்பொருள் குளறுபடிகளாலும், ‘பீக் ஹவர்’ எனும் உச்சநேரக் கட்டண முறையினாலும் மின்கட்டணம் கணிசமாக உயர்ந்து, நுகர்வோர் மீது கூடுதல் நிதிச்சுமை விழும் அபாயமும் உள்ளது.
குறிப்பாக, இத்திட்டத்தின் மூலம் மீட்டர்களை நிறுவுவது, தரவுகளைப் பராமரிப்பது மற்றும் வசூல் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது, பொதுத்துறையான மின்சார வாரியத்தைப் படிப்படியாகத் தனியார்மயமாக்கும் சதியாகும். இது, மின்கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிப் பாதுகாப்பைப் பாதிப்பதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கான புதிய அரசு வேலைவாய்ப்புகளையும் முற்றிலுமாகப் பறித்துவிடும்.
அதுமட்டுமின்றி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்போது விவசாயப் பயன்பாட்டுக்கான இலவச மின்சாரச் சேவையும் கேள்விக்குள்ளாகும் என்ற விவசாயிகளின் அச்சமும் நியாயமானதே.
எனவே, பொதுமக்களுக்கும் மின்சார வாரிய ஊழியர்களுக்கும் பேராபத்தாக விளங்கும் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான டெண்டர் அறிவிப்புகளைத் திரும்பப்பெற்று, மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.