20/10/2026
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வீரத்தாய் குயிலியின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்!
~~~~~~~~~~~~~
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அடையாளமாகத் திகழ்ந்தவர் வீரத்தாய் குயிலி அவர்கள். சிவகங்கைச் சீமை மண்ணில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படையில் தளபதியாக விளங்கிய குயிலி, ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்த வீரப்பெண்மணி ஆவார்.
பெண்கள் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்ட காலத்திலேயே, அஞ்சாமையும் தன்னம்பிக்கையும் கொண்ட போராளியாகத் திகழ்ந்த குயிலியின் வரலாறு, இன்றைய தலைமுறைக்கும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் எழுச்சியூட்டும் வரலாறாகும்.
வீரத்தாய் குயிலியின் தியாகம் என்பது ஒரு தனிமனிதரின் வீரத்தை மட்டும் குறிப்பதல்ல; அது விடுதலை உணர்வையும், பெண் ஆளுமையையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் எடுத்துரைக்கிறது.
சமூகநீதி, சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடும் அருந்தமிழர் விடுதலைக் கழகம், வீரத்தாய் குயிலியின் நினைவைப் போற்றுவதுடன், அவருடைய வீர வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் அனைவரின் கடமை என்றும் வலியுறுத்துகிறது.
வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றும் உரிய அங்கீகாரம் பெறாத சமூகங்களின் வீரர்களையும் வீராங்கனைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதும், அவர்களின் பங்களிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் சமூகநீதிக்கான முக்கியமான பணியாகும்.
வீரத்தாய் குயிலியின் வீரமும் தியாகமும் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கட்டும்!
அரசியல் அதிகாரமே! சமூக விடுதலை!!
சுப.இளங்கோவன்,
நிறுவனர் தலைவர்,
அருந்தமிழர் விடுதலை கழகம்.