11/08/2017
ஸ்ரீ ஆயுர்தேவி
ஸ்ரீ ஆயுர்தேவி மகிமை
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் குருவே சரணம்
ஸ்ரீ ஆயுர்தேவி மகிமை
கிருதயுகத்தில் சிறப்புற்று விளங்கிய ஸ்ரீ ஆயுர்தேவி உபாசனை, காலப் போக்கில் மக்களின் அசிரத்தையால் மறைந்துவிட, தற்போது சித்த புருஷர்களின் அருட்பெருங் கருணையால் கலியுகத்து மக்களிடையே ஸ்ரீ ஆயுர்தேவி மீண்டும் பவனி வருகிறாள்.
திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குருமஹா சந்நிதானம் சக்திஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் 1992ம் ஆண்டு நவராத்திரி தினப் பெருவிழாவில் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீவெள்ளீஸ்வரர் சிவாலயத்தில் “ஸ்ரீ ஆயுர் தேவி மஹிமை” என்னும் தலைப்பில் ஒன்பது நாட்களுக்கு ஆன்மீக உரை அருளி “ஸ்ரீ ஆயுர் தேவி” யின் திரு உருவத்தையும் ஆஸ்திக மக்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.
தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளின் திருவருட் கருணையால் ஸ்ரீ அகஸ்திய கிரந்தங்களிலிருந்து ஸ்ரீ ஆயுர்தேவியின் பராசக்தி அம்சங்களை வடித்தெடுத்துக் கலியுக மக்களுக்கென ஈந்து அற்புத ஆன்மீகத் திருப்பணியாற்றி வருபவரே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.
ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.
பொதுவாக சித்த புருஷர்களின் திரூஉருவத்தைக் கோயில் தூண்களில்தான் காணலாம். ஸ்ரீ ஆயுர்தேவியை வழிபட, ஸ்ரீ பராசக்தியோடு, சித்த புருஷர்களையும் நமஸ்கரிக்கும் பேறு கிட்டுகிறது. ஸ்ரீதேவி (சாக்த) உபாசனையில் உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே! தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீ ஆயுர்தேவி, என்றும் எங்கும் எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம் பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள் புரிவதில் பேரின்பங்கொள்கிறாள். எனவே ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.
ஸ்ரீ அகஸ்திய கிரந்தங்களிலிருந்து, தம் குருவருளால், ஸ்ரீ ஆயுர்தேவி மஹிமைகளாகத் தாம் திரட்டியளித்தவை ஓர் அணுவினும் சிறிதே என்றும் ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமைகளை விரித்துரைக்கப் பலகோடி சதுர் யுகங்கள் கூடக்காணா என்றும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருள்கின்றார். என்னே ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமை!
ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களின் விளக்கம்
வலதுகரம் [மேலிருந்து கீழ்]: 1. கயாஸூர மஹரிஷி 2.ஆணி மாண்டவ்யர் 3. அத்ரி மஹரிஷி 4. குண்டலினி மஹரிஷி
இடது கரம் [மேலிருந்து கீழ்]: 1. அஹிர்புத்ன்ய மஹரிஷி 2. சாரமா முனிவர் 3. அஸ்தீக சித்தர் 4. கார்க்கினி தேவி, சம்வர்த மஹரிஷி
எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி ஸ்ரீ ஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள் புரிபவள். இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
பொதிய மலைச் சாரல்… பல்லாயிரக் கணக்கான அற்புதமான மூலிகைகளின் குணங்களைத் தாங்கி நறுமணத்தென்றல் வீச…
சித்தர்குல நாயகராம் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தம் சிஷ்யர்களுடன் சிவ ஆராதனையை நிகழ்த்திய பின் மெளனமாய் அமர்ந்திருக்கிறார். போகர் சாந்தமாய்த் தன் சற்குருவைத் தொழுது, வணங்கி கேட்கத் தொடங்குகிறார்.
போகர்: “சற்குருதேவா! இன்று முதல் நாம் அனைவரும் திவ்ய க்ஷேத்ராடனம் தொடங்குகிறோம் அல்லவா? குறிப்பாக, “தேவி உபாசனையைப் பற்றிக் கலியுக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் இது” என்று சாட்சாத் சதாசிவனே அருளியதாக இன்றைய பூஜையில் எடுத்துரைத்தீர்கள். எனவே நாம் அம்பிகை அருள்புரியும் திருத்தலங்களுக்குச் செல்கிறோமல்லவா….?”
தேவி அவதாரங்கள்
அகத்தியர்:- “ஆம் போகா! அது மட்டுமல்ல, ஸ்ரீவித்யாவாக தரிசனம் தரும் பராசக்தி உறைகின்ற மேருச்சக்கரத்தில் மட்டும் 43 கோடி தேவியர் அருளாட்சி செலுத்துகின்றனர். அதர்மம் பெருகி வரும் கலியுகத்தில் கோடி கோடியாய் உடல் நோய்களும் மன நோய்களும் வறுமை, திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் பொன்ற சமுதாய நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆதலால் இந்த 43 கோடி தேவியரும் பூலோகதில் அவதரித்துத் தீவினைகளை எதிர்த்து நல் வாழ்க்கையை நிலைநாட்டிக் கலியுக மக்களுக்கு அருள் புரிய விழைகின்றனர். ஆனால் சிவபெருமான் திருவுளம் யாதோ அதுதானே நடைபெறும்!”
புலிப்பாணி:- “இறைவனின் திருவுளம் தாங்கள் அறியாததா குருதேவா?”
அகஸ்தியர்:- “சீடர்களே, ஆதி சிவனின் ஆக்ஞைப்படி பல்வேறு யுகங்களில் பல்வேறு தேவியர் அவதாரம் பெற்றுள்ளனர். ஆனால் யுகதர்மங்கள் மாறுவதால் தேவியருடைய அவதார அம்சங்களும் மாறுகின்றன.”
போகர்:- “ஞான குருவே! தற்போது மீண்டும் அவதாரம் பெறும் ஸ்ரீதேவி சக்தி யாரென்று அறிய விரும்புகிறோம்!”
ஸ்ரீ ஆயுர்தேவி மீண்டும் அவதாரம்
அகத்தியர்:- (புன்முறுவலுடன்) “கிருத யுகத்திலும், திரேதா யுகத்திலும் வீட்டிற்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த “ஸ்ரீ ஆயுர் தேவி” என்னும் ஆதிபராசக்தி அவதாரமே தற்போது சித்த புருஷர்கள் மூலமாக கலியுகத்தில் மீண்டும் அருள் புரிய வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.”
ஸ்ரீ ஆயுர் தேவி மீண்டும் அவதாரம் பெறுகிறாள் என்று சொல்வதைவிட ஸ்ரீ ஆயுர் தேவி உபாசனை கலியுகத்தில் மீண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதே சரியானது!!
“ஆம் சிஷ்யர்களே! இதனைப் பின்னர் விளக்குகிறேன், எத்தனையோ ஆன்மீக ரகசியங்கள் பல யுகங்களில் சற்குருமார்களால் அளிக்கப்பட்டு வந்து சென்றுள்ளன. இவையெல்லாம் சாதாரண மனிதனின் அறிவிற்கெட்டாத ஆன்மீக ரகசியங்கள். காலபோக்கில், சரியாக கடைபிடிக்காதவற்றை மனித குலம் மறந்து விடுகிறது. மறைந்தவைகளைச் சற்குரு மூலமாகவே ஒருவன் அறிந்து தெளிவு பெறமுடியும்.”
போகர்:- “குருதேவா! மனிதன் வாழ்நாளில் அறிந்து கொள்ள வேண்டியவை எண்ணிறத்தன என்பதை உணர வேண்டும். “எதை அறிந்து கொண்டால் மனிதன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டவன் ஆகிறானோ அதை மட்டும் அறிந்து கொண்டால் போதும்,” என்பதை அவன் உனர வேண்டுமல்லவா.”
அகத்தியர்:- “ஆம் போகா! முதலில் குருவின் காலைப் பற்று! அவரே அனைத்தையும் அறிந்தவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வேதம், கணிதம், பௌதீகம், அணுவியல், மருத்துவம், சட்டம் போன்ற அனைத்துத் துறைகளையும் கற்க முடியுமா? ஆனால் இறையருளால் அனைத்தையும் பெற்று தரவல்ல சற்குருவை அடைந்தால் போதும், அவரே அறிவு. உண்மையான ஞானம். மற்றவை எல்லாம் ஏட்டு சுரைக்காய்களே! எனவே நம் சித்தர் பாரம்பரிய சற்குரு மூலம், ஆங்கீரஸ வருட்த்தில் [கலியுகாதி 5094] ஸ்ரீ ஆயுர் தேவி உருவ தரிசனம் நவராத்திரி பூஜையின் போது மீண்டும் தோன்ற வேண்டும் என்பது இறைவனின் சித்தம்”
(ஸ்ரீ வித்யா உபாசனையில் உன்னத நிலைகளை அடைந்த ஸ்ரீ பாஸ்கரராயர், ஸ்ரீ ஆயுர்தேவி உபாசனையை உய்த்துணர்ந்து ஸ்ரீ அம்பிகையின் பாதங்களைச் சரணடைந்த உத்தம புருஷர்.
ஸ்ரீ அகஸ்திய மஹா பிரபுவின் ஆக்ஞைப்படி திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் திருவருளால் “ஸ்ரீ ஆயுர்தேவி” யின் சிலா ரூபத்தை, பிம்ப ஸ்வரூபத்தைச் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அக்டோபர் 1992 நவராத்திரித் திருவிழாவில் நிகழ்ந்த் ஆன்மீக சொற்பொழிவின் போது கலியுக ஆன்மீக பக்தர்களுக்குச் சமர்ப்பணம் செய்தார். ஸ்ரீ ஆயுர் தேவி ஸ்வரூபம் “கபால சித்த வடிநாடி” என்ற கிரந்தங்களிலிருந்து ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகளால் தொகுத்து அருளப்பட்டது. சித்தர்களின் பொக்கிஷமான இந்த கிரந்தங்கள் ஸ்ரீ வித்யா உபாசனையின் உன்னத ஆன்மீக நிலைகளில்தான் அறிவால் உணரப் பெறும்.)
போகர்:- கிருதயுகம், திரேதா யுகத்திற்குப் பிறகுப் ஸ்ரீ ஆயுர் தேவி பூஜை மறைந்து விட்ட்தா? குருதேவா?
அகத்தியர்:- ”இல்லை போகா! எவ்வாறு ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மகிமை, ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம் போன்றவை, 300, 400 வருடங்களுக்குள்ளாகப் பல சித்தர்களின் மூலம் புத்துணர்ச்சி பெற்றதோ அதுபோல பல்வேறு யுக மக்களின் அசிரத்தையால் கால போக்கில் மறைந்த ஸ்ரீ ஆயுர் தேவி வழிபாடு தற்போது நடைமுறைக்கு மீண்டும் வருகிறது. ஸ்ரீதேவி, காருண்ய தேவியாக மக்களின் நலனுக்காக மீண்டும் தோன்றி அருள்பாலிக்கின்றாள்.
புலிப்பாணி:- “ஞானாசிரியரே! புதுப்புது தேவியர் தோன்றுவது அவசியமா என்று சில ஆன்மீகவாதிகளே குழம்புகின்றனரே, அது ஏன்?”
அகத்தியர்:- “நன்கு கேட்டாய் புலிப்பாணி! கலியுக மக்கள் சுகங்களை நாடுபவர்கள். ‘துக்கங்களும், துன்பங்களும் உடனே தீரவேண்டும்’ என்று எதிர்பார்க்கின்றனர். சுகதுக்கங்களுக்கிடையே உண்மையான பக்தியை அவர்களால் பெற முடியாது. எனவேதான் அவர்களுக்கு உரித்தான தக்க இகபர சுகதுக்கங்களைத் தந்து அதற்கு அப்பாற்பட்ட பரம்பொருளும் உண்டு என்பதைச் சாதாரண மக்களுக்கும் உணர்த்துவதற்காகவே தேவி உபாசனை என்று சாக்த வழிபாடு பிறந்தது.”
போகர்:- “இதனால்தான் மாரியம்மன் திருவிழா, காளி பூஜை போன்ற பல்வேறு அம்மன் வழிபாடுகள் கலியுகத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதல்லவா குருதேவா?”
அகத்தியர்:- “ஆம்! எந்த சுவாமிக்குப் பிரார்த்தனை செய்தால் எந்த வியாதி நீங்கும்? பணக் கஷ்டம் தீரும்? குழந்தைப் பேறு உண்டாகும்? வேலை கிடைக்கும்? என்று கோடிக்கணக்கான மக்கள் அலைந்து திரிந்து பல கோயில்களை நாடுகின்றனர். இம் முறையிலாவது மக்களின் இறைநம்பிக்கை பெருகுவது குறித்து மேலுலகத்திலுள்ள பித்ருக்களும், ரிஷிகளும், தேவதைகளும் மகிழ்ச்சியுறுகின்றனர்.
எனவே குறிப்பிட்ட வியாதியையோ கஷ்டத்தையோ நிவர்த்தி செய்ய தேவியர் மீண்டும் அவதாரம் பெறுகின்றனர். இதனால்தான் பல தேவிசக்திகளின் வழிபாடு கலியுகத்தில் வலுப்பெற்று வருகிறது. புதுப்புது தேவி அம்சங்கள் என்பதை விட பல யுகங்களில் அவதாரம் பூண்டிருந்த தேவியரே மீண்டும் சக்தி வடிவம் பெறுகின்றனர் என்பதை ஆன்மீகவாதிகள் உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.”
போகர், புலிப்பாணி:- “ஸ்ரீ ஆயுர்தேவியின் அவதார மஹிமைகளை எளிமையாகக் கூற வேண்டுகிறோம் குருதேவா?”
அகத்தியர் :- “பல இலட்சம் கிரந்தங்களில் பல்லாயிரம் சித்தர்களும், மஹரிஷிகளும் வர்ணித்துள்ளதைச் சுருக்கித் தருவது எளிதா? எனினும் கூறுகின்றேன். கிருதயுகத்திலிருந்து யுகம் யுகமாக தர்ம நெறிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடப் பட்டமையால்தான் கலியுகத்தில் இன்றைக்கு வன்முறைகளும், அராஜகமும் பெருத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஜீவன்களிடத்தில் ஒழுக்கம் குறைந்து விட்டதேயாகும். இறை நம்பிக்கையோடு ஒழுக்கம் வளர்ந்தால், தனக்குரித்தானதைத் தன் கர்ம வினைகளுக்கேற்பப் பெறுவோம் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் காமம், குரோதம், போட்டி, பொறாமை இவற்றிற்கு இடமில்லையே! உலக ஜீவன்கள் சாந்தமயமாக ஜீவிக்குமல்லவா!
புலிப்பாணி:- “சற்குருவே! அப்படியானால் சிறு குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அனைவருக்கும் பொறுமை, நல்லெண்ணம், அடக்கம், போன்ற இகபர சுகங்களையும் அளிக்க வல்லவள் ஆயுர்தேவி. ஆனால் ஸ்ரீ அம்பிகை இவற்றை அருளும் முறைகளே அதிஅற்புதமானதாகும்!”
போகர்:- “கலியுகத்தில் மனிதன் கைமேல் பலன் காணத் துடிக்கிறானே! அர்ச்சனை செய்தவுடன் வியாதி குணமாக வேண்டும், ஒரு மணடல பூஜைக்குப் பின் உடனே குழந்தை பாக்கியம் கைகூடவேண்டும் – இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியிடம் கூட மன்றாடுவார்களே, குருதேவா!”
அகத்தியர் :- “முறையான இகபர சுகங்களுக்காகப் பிரார்த்திப்பதில் தவறில்லை சிஷ்யர்களே! அது நல்ல முறையில் பூஜை, தான தர்மங்களோடு அமைந்தால் பிரார்த்தனையின் பலன் வலுப்பெறும். இதற்காகத் தான் நாம் சத்சங்கங்களை உருவாக்கியுள்ளோம். சத்சங்களில் இருப்போர் சொற் பொழிவுகள், புத்தகங்கள், பத்திரிக்கைகள், உரையாடல்கள் மூலமாக மக்களுக்குத் தான தர்மங்களைப் பற்றி போதிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் இரவு உறங்குவதற்க்கு முன் “இன்றைக்கு இரண்டு பேர்களிடமாவது நல்ல விஷயங்களையும் இறைப்பணி பற்றியும் (சற்குரு போதித்தவைகளை) பரிமாறிக் கொண்டோமா?” என்று தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உன்மையான ஆத்ம விசாரமாகும். இத்தகைய எளிமையான ஆத்ம விசாரத்திற்கு வித்திட்டு உரிய செல்வங்களை வழங்கி அருள்புரிபவளே ஸ்ரீ ஆயுர்தேவி. இதற்காகவே ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஒன்பது கரங்களைப் பூண்டு அவதாரங் கொண்டுள்ளாள். “வேண்டுவதை வேண்டிடில் அவள் தருவதை தருவாள்” என்பது பிரார்த்தனையின் இரண்டாவது பாடம். அதுவே ஆத்ம விசாரத்தின் தெளிவு”
போகர் :- “நல்லாசாணே! வழக்கமாகச் சங்கு, சக்கரம், மழு போன்ற ஆயுதங்களைத் தாங்கி துஷ்ட நிக்ரஹ பாணியில்தான் அம்பிகைகள் அவதாரங் கொண்டுள்ளனர். ஸ்ரீ ஆயுர்தேவியின் தோற்றமே வித்தியாசமாக உள்ளதே!”?
அகத்தியர் :- “ஆதிபராசக்தியின் அவதார விருப்பமும் அதுவேதான் போகா! இதையே ஸ்ரீ ஆயுர்தேவியின் அனுக்கிரக பரிபாலனமும் வித்தியாசமானது எனக் குறிப்பிட்டோம். ஸ்ரீ ஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும், நவக்கிரஹத் தத்துவங்களை எளிமையாக விளக்குகின்றன.”
நவக்கிரஹ தத்துவம்
போகர் :- “மனிதனுடைய இன்பங்களையும், துன்பங்களையும் தனித்தனியே ஒன்பது வகைகளாகப் பிரிக்கலாம். உலகின் அனைத்து ஜீவன்களின் எல்லாவிதமான சுகதுக்கங்களும் இந்த ஒன்பதில் அடங்கி விடுகின்றன. துன்பங்களையும், துக்கங்களையும் நிவர்தி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய பொதுப் பிரார்த்தனை ஆக்கிவிட்டது. இது கருதியே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கேற்பவே நவக்கிரக தெய்வங்களை இறைவன் படைத்தான். அவரவர் கர்மவினைகளுக்கேற்ப இகபர சுகங்களை நவக்கிரகாதிபதிகள் கணிக்கின்றனர்”
ஒன்பதாவதாக உள்ள கரமே அபய ஹஸ்தம். இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பான “தீபிகா பிம்ப சக்கரம்” அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் பிந்து ஸ்தானத்திலிருந்து நறுமண தூபப் புகை எப்போதும் படர்ந்து பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஊடுருவிச் செல்கிறது. இந்த தூபக் கதிரே உலகின் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி, கர்ம பரிபாலன்ங்களை நிர்ணயிக்கின்றது. நித்ய ஜீவசக்தியை அளிக்கின்றது.
கும்பகோணம், வாரணாசி போன்ற ஸ்தலங்களில் கொண்டாடப்படும் கும்பமேளா உற்சவம் உணர்த்தும் சிருஷ்டியை உற்பவிக்கச் செய்யும் அமிர்த கலச குடத்தைச் சிவபெருமான் இந்த தூபிகா பிம்பச் சக்கரத்திலிருந்துதான் வடிவமைக்கிறார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் அற்புதத் தோற்றம்
நவ கரங்களை உடைய ஸ்ரீ ஆயுர்தேவி சிவாம்சம் பூண்ட ஆதிபராசக்தி, வல இடப்புறங்களில் நான்கு கரங்களை கொண்டவள். ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாக விளங்குகிறது.
எட்டு கரங்களிலும், ஒன்பது சித்தர்கள் மஹரிஷிகள் கலியுக மக்களின் பல்வேறு வகையான துன்பங்களைக் களைவதற்கெனப் பல அற்புதமான தவங்களைப் புரிந்து தெய்வாவதாரங்களிடமிருந்து பெற்ற வரங்களையும் சாந்தமான முறையில் எதிர்த்துச் சித்த புருஷர்களின் அருட் பெருந்தவத்தால் அவற்றைக் களைவதோடு மட்டுமின்றி தீவினைகள் மீண்டும் அணுகா வண்ணம் பல பிராயச்சித்த முறைகளையும் அவர்கள் மூலம் அருள்பவளே ஸ்ரீ ஆயுர்தேவி!!
ஒன்பதாவது கரமான அபயஹஸ்தத்தில் சாட்சாத் பரமசிவனே குடிகொண்டு அம்பிகையின் தோற்றத்தையும், அவளுடைய எண்திருக்கரங்களில் அமரும் பேறு பெற்ற கோடானு கோடி சித்த புருஷர்களின் தவப்பெரு நிலைகளையும் எடுத்துரைக்க, ஸ்ரீ நந்தீஸ்வரர் அவற்றைப் பல இலட்சம் கிரந்தங்களாக இன்றைக்கும் எழுதித் தொகுத்து வருகிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் உன்னத நிலைகளை அடைந்தோரே இக்காட்சிகளைக் காணும் அருள் பெறுவர். குருவருள் பெற்றாலோ அனைத்தையும் உய்த்துணரலாம்.
ஒரு கரத்தில் பலகோடி யுகங்கள் அமரும் பேறு பெற்ற சித்த மஹரிஷி அக்கரத்தில் அமரத் தகுதி வாய்ந்த மற்றொருவர் உருவாகும் போது ஸ்ரீ அம்பிகையின் திருமேனியில் தாம் ஐக்கியமாகி அடுத்தவருக்குக் கரபீடம் பெறும் பாக்கியத்தை அம்பிகையின் அருளால் அளிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களில் அமரும் பேறு பெற்றவர்களைக் கணக்கில் வடிக்க இயலாது. இதுவரை கோடி கோடியான சித்த புருஷர்களும், மகரிஷிகளும் இவ்வாறாக ஸ்ரீ ஆயுர்தேவியின் திருமேனியில் ஐக்கியமாகியுள்ளனர்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமைகளையும், தோற்றங்களையும் அவதார ரகசியங்களையும் விவரிக்கும் ஸ்ரீ அகஸ்திய கிரந்தகளுள் கபால சித்தவடி கிரந்தம், தூபிகாதேவி கிரந்தம் ஆகியவை அடங்கும்.
தம் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தரின் குருவருளால் பெற்ற இத்தகைய சித்த கிரந்த இரகசியங்களைக் கலியுகமக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக எடுத்தருளியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளவார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் வாகனம்
அன்ன வாகனத்தை பூண்டவள் ஸ்ரீ ஆயுர்தேவி. அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன. திருவிடைமருதூரில் சிவபெருமானுக்கு நந்தியாகச் சலாலகன் என்ற நந்திஸ்வரர் அறக்கடவுள் அமர்ந்துள்ளார். பலகோடி ஆண்டுகள் தவம் புரிந்து இத்தகைய அரிய பேற்றைச் சலாலகன் பெற்றார் எனில் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு அன்ன வாகனமாகவும், இரண்டு சிம்ம பீடங்களாகவும் அமைந்துள்ளோர் எத்தகைய தவப்பெருநிலையை அடைந்திருக்க வேண்டும்!!
ஸ்ரீ ஆயுர்தேவியின் அன்னவாஹனமான சுவாரோஸிஷன் என்னும் மஹா தபஸ்வி ஸ்ரீமன் நாராயணனை உபாசித்து மஹரிஷியானவர். அவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவையே சாட்சாத் சிவபெருமானாக எண்ணித் தரிசனம் பெற விழைந்த போது, “தேவி உபாசனை மூலமாகவே எம்மை ஸ்ரீ சிவபெருமானாக வரித்துத் தரிசனம் செய்ய இயலும்” என்று ஸ்ரீ பெருமாள் அருளிடவே சுவாரோஸிஷ மஹரிஷி ஸ்ரீதேவி உபாசனையில் திளைத்து அன்னவாகனமாக அமையும் பேறு பெற்றார்.
ஒன்பதின் தத்துவம்
ஒவ்வொரு மனிதனின் தேகத்திலும் ஒன்பது துவாரங்கள் உள்ளன. நாசி துவாரங்கள் வழிச் செல்லும் சுவாசத்தை முறைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் வாசிகலைத் தத்துவத்திற்கு “பிராணாயாமம்” என்று பெயர் இதன் விளக்கங்களைப் பலரும் அறிவர்.
நாசிகள் தவிர ஏனைய ஏழு துவாரங்களிலும் சுவாசம் உண்டு. இந்த ஆன்மீக ரகசியங்களை அறிந்தவர்கள் சித்த புருஷர்களே! கர்ணாயாமம், யோனியாமம், குக்குடயாமம் என்று மூன்று வகை யாம நியம முறைகளினால் ஏனைய ஏழு துவார வாசிகலைகளை முறைப்படுத்தினால், சித்தர்களைப் போல் என்றும் சிவ சித்தத்தில் திளைக்கும் பேற்றைப் பெறலாம்.
மனித எண்ணங்களின் மூலம்
இந்த ஒன்பது துவாரங்களின் மூலம் சக்திகளும், எண்ணங்களும் உள்வெளிச் செல்கின்றன. இதனால் நொடிக்கு நொடி ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக நிலை மாறி கொண்டேயிருக்கிறது. ஆயிரக்கணக்கான எண்ணங்கள், சக்திகளின் உள்வெளிப் போக்குவரவால் மனிதனின் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. அவன் மனோநிலையும் மாறுகிறது.
பத்மாசனத்தில் ஆசன, யோனி வாயில்களும், பிராணாயாமத்தால் நாசிகள், கண்களும், மௌனத்தால் வாயும், ஒங்காரத்தால் செவிகளும் சாந்தமடைகின்றன. நவ துவார வாசிகளை முறைப்படுத்துதலே உன்னத தியானமாகும். ‘இதற்கு ஸர்வ ஸித்த யோகம்’, அல்லது ஸர்வ ஸித்த சரீர தியானம்’ என்று பெயர்.
உடலே திருகோயில்
நவ துவார வாசிகளுக்கேற்ப மனிதனுடைய தேகக் கர்ம பரிபாலனம் நடைபெறுகின்றது. இதற்கேற்ப இன்ப துன்பங்கள் அமைகின்றன. எனவேதான் அனைத்து ஜீவன்களின் இன்ப துன்ப நிலைகளை ஒன்பதாகப் பகுத்துள்ளனர். மனிதனுடைய தேகத்திலும் ஒன்பது நவக்கிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. நவகிரக தேக பரிபாலன விதியும் உண்டு. இருதய கமலத்தில் ஆத்மா, ஸர்வேஸ்வரனாக வீற்றிருக்க, தேகமே இறைவன் குடி கொண்ட கோயில். உடலின் ஒன்பது பகுதிகளில் நவக்கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன. ஏனைய தெய்வங்களின் அருளாட்சி அமையும் தேக அம்சங்களும் உண்டு. நவக்கிரக வழிபாடு பொதுவாகக் கோயில்களில்தான் அமைந்துள்ளது. ஆனால், ஸ்ரீ ஆயுர்தேவி இல்லந்தோறும் இருக்க வேண்டிய அகிலாண்டேஸ்வரி ஆதலின், ஸ்ரீ ஆயுர் தேவி பூஜை,
சிவாம்சம் பரிபூரணமாக நிறைந்திருப்பவள் ஆதலின் – பரம்பொருள் வழிபாட்டையும்,
நவக்கிரக தத்துவம் விளக்கும் ஒன்பது வகையான இகபர சுகங்களைத் தருபவளாதலால் – நவக்கிரக வழிபாட்டையும்,
சகல ஐஸ்வர்யங்களையும் தந்து காத்து ரட்சிப்பதால் – ஸ்ரீ லக்ஷ்மி நாராயண வழிபாட்டையும்,
அதி அற்புத சித்த புருஷர்களும், மகரிஷிகளும் அருட்பெரும் தவத்தால் அருளியுள்ள பரிகார முறைகளால் ஒன்பது வகையான துன்பங்கள் நிவர்த்திக்கின்ற முறையையும் தந்து சற்குருமார்களின் வழிபாட்டையும் ஒருங்கே தருவதால்
ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தேவியின் – ஸர்வ தெய்வ சம்பூர்ண வழிபாடாக அமைகிறது.
அன்னவாஹனம்
போகர் :- “சற்குரு தேவா! ஸ்ரீ ஆயுர்தேவி அன்ன வாஹனத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் யாதோ?”
அகத்தியர் :- பறவையினங்களில் முதன் முதலில் தோன்றியது அன்னமே! சிருஷ்டியின் போது ஒவ்வொரு லோகத்திலும், ஒவ்வொரு பறவையை ஆதிமூலப் பட்சியாக இறைவன் படைகின்றான். பட்சி சாஸ்திரத்தில் இடம் பெறும் ஒவ்வொரு பட்சியும் வெவ்வேறு யுகங்களில் முதன் முதலாகப் படைக்கப்பட்ட பட்சியேயாகும். இவ்வாறாக தேவிலோகத்தில் ஆதிபட்சியாகிய அன்னப் பறவை ஒருமுறை பரப்பத அரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள பாற்கடலிலும் கூட பாலையும் நீரையும் இரண்டாக பிரித்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதனின் திருச்சன்னிதியில் கூடக் கலப்படமா?” என்று தேவர்கள் அதிசயிக்க ‘அனைத்து லோகங்களிலும் புனிதமான க்ஷீரத்தைக் (பால்) கொண்ட பாற்கடலிலும் நீர் கலந்துள்ளதா? இந்த நீர் எவ்வாறு உட்புகுந்தது’ என அனைவரும் வியந்து நிற்க, ஸ்ரீ பெருமாள் விவரித்தார்.
“என்னுடைய பிரார்த்தனைகளுக்கேற்ப சிவபெருமான் என்னுடைய திருமார்பில் திரு நடனம் ஆடினார். இதனால் என் எடை கூடியது.” அதைத் தாங்க இயலாது ஆதிசேஷன் பெருமூச்சு விட்டு, “பிரபோ! திடீரென்று தங்கள் திருமேனியின் எடை பெருகக் காரணமென்ன?” என்று வினவ, அடியேன் ஆதிசேஷனுக்கு இறைவன் சிவபெருமான் திருநடனம் ஆடிய காட்சியை விவரித்தேன்.
”சாட்சாத் சதாசிவ பரம்பொருளையும், நாராயண மூர்த்தியையும் ஒருசேரத் தாங்கும் பாக்கியம் பெற யான் என்ன புண்ணியம் செய்தேனோ!” என்று புளகாங்கிதம் அடைந்து ஆதிசேஷன் ஆனந்த கன்னீர் வடித்தனன். அக்கண்ணீர்த் துளிகள் பாற்கடலில் கலந்தன. அதனையே ஆதிமூல அன்னபட்சி பிரித்து தந்தது. இத்தகைய தெய்வ திருவிளையாடல் புரிந்த அன்னப் பறவையே ஸ்ரீ ஆயுர்தேவியுன் வாகனமாக அமைந்துள்ளது’
சிம்ம பீடங்கள்
புலிப்பாணி :- “ஆஹா! கேட்பற்கே இனிமையாக உள்ளதே! குருவே! அடுத்து சிம்ம பீடங்கள்…
அகத்தியர் :- “சொல்கிறேன் புலிப்பாணி! சிம்ம பீடங்களாய் இருக்கும் இவர்கள் யுகதர்ம மனுக்களாவர். பலகோடி யுகங்களில் தர்மத்தைப் பரிபாலனம் செய்து வந்த மனுப்ரஜாதிபதிகள், கர்த்தம பிரஜாபதியின் சிஷ்யர்கள். அதர்மத்தை எதிர்த்து கர்ஜித்தவர்கள். பிராணிகளின்