DYFI Tenkasi

Directions Contact the organization

DYFI Tenkasi இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI
தென்காசி மாவட்டக்குழு முகநூல் பக்கம்

07/10/2026

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அக்டோபர் 9 அன்று தமிழகம் முழுவதும் DYFI–SFI பேரணி

சென்னை உள்ளிட்ட 11 மையங்களில் நடைபெறும் பேரணியில் இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தற்போது பதவி வகித்து வருகிறார். (Election Commission of India)

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமை, தேர்தல் வெளிப்படைத்தன்மை, வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை மற்றும் தேர்தல் ஆணையத்தின் சுயாதீனம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்களும், சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பொதுமக்களின் நம்பிக்கை நிலைத்திருப்பது ஜனநாயகத்தின் நலனுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் DYFI மற்றும் SFI சார்பில் அக்டோபர் 9 அன்று தமிழகம் முழுவதும் கண்டனப் பேரணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பேரணிகள் மூலம் தேர்தல் நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டும், வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், தேர்தல் ஆணையம் அரசியல் சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும், ஜனநாயக நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கை உறுதி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.

“வாக்குரிமை எங்கள் உரிமை; ஜனநாயகம் எங்கள் உரிமை” என்ற அடிப்படையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது ஜனநாயகக் குரலை பதிவு செய்யும் வகையில் இந்தப் பேரணிகள் நடைபெறுகின்றன.

11 மையங்களில் பேரணி

1. சென்னை
2. மதுரை
3. திருச்சி
4. கோவை
5. கன்னியாகுமரி
6. திருப்பூர்
7. சேலம்
8. நாமக்கல்
9. தஞ்சாவூர்
10. திருவாரூர்
11. மயிலாடுதுறை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இப்பேரணிகளில் மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், வாக்காளர்களின் உரிமைக
ளை நிலைநாட்டவும் நடைபெறும் இந்தப் பேரணிகளில் அனைவரும் பங்கேற்குமாறு DYFI–SFI தமிழ்நாடு சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது.

நாள்: 09.10.2026
இடம்: தமிழகம் முழுவதும் 11 மையங்கள்
அமைப்புகள்: DYFI – SFI

07/10/2026

6,574 அல்ல; குறைந்தபட்சம் 10,000 குரூப்–4 பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

தேர்தல் வாக்குறுதிகளை வெறும் அறிவிப்புகளாக மாற்றாமல் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் – DYFI

சென்னை, அக்டோபர் 6:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான குரூப்–4 தேர்வு அறிவிப்பில் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இதில் அடங்குகின்றன.

அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு வேலைக்காக பல லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர். இந்தச் சூழலில் 6,574 பணியிடங்கள் என்பது இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தேவைக்கு போதுமானதாக இல்லை.

குறிப்பாக, TNPSC அறிவிப்பிலேயே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது என்றும், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு மாற்றியமைக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, காலிப்பணியிடங்களின் இறுதிப் பட்டியலை முழுமையாகக் கணக்கிட்டு, குறைந்தபட்சம் 10,000 பணியிடங்களையாவது இந்த குரூப்–4 தேர்வின் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DYFI வலியுறுத்துகிறது.

திமுக ஆட்சியின் காலத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்றும் முழுமையான பதில் இல்லை

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலியாக இருந்த 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், மேலும் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது தொடர்பாக திமுக ஆட்சிக் காலத்திலேயே எதிர்க்கட்சிகளும் , இளைஞர் அமைப்புகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பின. அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு தனது தரப்பில் TNPSC உள்ளிட்ட பல்வேறு ஆட்சேர்ப்பு அமைப்புகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது. 2024ஆம் ஆண்டு அரசுத் தரப்பு தகவலின்படி, 2021 முதல் TNPSC, காவல்துறை, மருத்துவம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழியாக 34,384 பேரும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழியாக 33,655 பேரும் பணியில் அமர்த்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

எனவே, மொத்த காலிப்பணியிடங்கள் எவ்வளவு? அதில் எத்தனை நிரப்பப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை காலியாக உள்ளன? என்ற முழுமையான கணக்கை வெளிப்படையாக வெளியிட வேண்டியது அவசியம்.

திமுக மீது எழுப்பப்பட்ட அதே கேள்வியை தவெக அரசும் எதிர்கொள்ளக் கூடாது

இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு தொடர்பாக திமுக ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும், வேலைவாய்ப்பு தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பிரச்சாரத்தில் முக்கியமாக முன்வைத்தது.

2026 தேர்தல் அறிக்கையில், அனைத்து அரசுப் பணியிடங்களையும் 365 நாட்களுக்குள் நிரப்பும் வகையில் Recruitment Accountability Act கொண்டு வரப்படும் என த.வெ.க. உறுதியளித்துள்ளது. மேலும் இளைஞர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அப்படியானால், அரசுப் பணியிடங்களை விரைவாக நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்துள்ள தற்போதைய அரசு, அதற்கான முதல் சோதனையை குரூப்–4 ஆட்சேர்ப்பிலேயே எதிர்கொள்கிறது.

திமுக ஆட்சியின் காலத்தில் “காலிப்பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பியவர்கள், இன்று ஆட்சியில் இருக்கும்போது அதே கேள்வியை இளைஞர்கள் கேட்கும் நிலையை உருவாக்கக் கூடாது.

தேர்தல் காலத்தில் வேலைவாய்ப்பு குறித்து வழங்கப்படும் வாக்குறுதிகள் வெறும் எண்ணிக்கைகளாகவும் அறிவிப்புகளாகவும் முடிந்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் தமிழ்நாடு ஏற்கெனவே போக்குவரத்து , பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் தனியார்மயத்தை ஊக்குவித்து நிரந்தர வேலைவாய்ப்பை கேள்விக்குள்ளாக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை போதுமானது இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

எனவே,

* அரசுத் துறைகளில் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* குரூப்–4 தேர்வில் அறிவிக்கப்பட்டுள்ள 6,574 பணியிடங்களை குறைந்தபட்சம் 10,000 ஆக உயர்த்த வேண்டும்.
* ஓய்வு, பதவி உயர்வு, புதிய பணியிட உருவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் உருவாகும் காலிப்பணியிடங்களையும் கணக்கில் கொண்டு கூடுதல் பணியிடங்களை சேர்க்க வேண்டும்.
* அனைத்து அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை ஆண்டுதோறும் கணக்கிட்டு, காலமுறை ஆட்சேர்ப்பு அட்டவணை வெளியிட வேண்டும்.
* தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்படும் வேலைவாய்ப்பு வாக்குறுதிகளுக்கு காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம் வெளியிட வேண்டும்.
* அரசு வேலைக்காக பல ஆண்டுகளாக தயாராகி வரும் இளைஞர்களுக்கு தேர்வுகளுக்கிடையேயான நீண்ட இடைவெளியைத் தவிர்க்க வேண்டும்.

திமுக ஆட்சியின் காலத்தில் காலிப்பணியிடங்கள் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்கள், தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க. அரசுக்கும் ஒரு முக்கியமான பாடமாக இருக்க வேண்டும். ஆட்சி மாறினாலும், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் நிலை மாறவில்லை என்பதே உண்மை .

எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் முதல் கட்டமாக, இந்த ஆண்டுக்கான குரூப்–4 ஆட்சேர்ப்பில் குறைந்தபட்சம் 10,000 பணியிடங்களை நிரப்பி, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு DYFI தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

செல்வராஜ்
மாநிலத் தலைவர்

எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்





06/10/2026

செவிலியர்கள் கைது – தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு DYFI கண்டனம்!

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, காவல்துறையிடம் முறையான எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்று, சுமார் 4,000 செவிலியர்கள் சென்னை எழும்பூரில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது பல்வேறு செவிலியர்கள் மயக்கமடைந்த நிலையிலும், தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.

இந்நிலையில், மாலை 7 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதன் பேரில், செவிலியர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக உள்ளே சென்றபோது, தமிழக காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஜனநாயக வழியில் அமைதியாகப் போராடிய செவிலியர்கள் மீது தமிழக காவல்துறை அடக்குமுறையை கையாள்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

செவிலியர்களின் நியாயமான போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழ்நாடு முழுவதும் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. போராடிய செவிலியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த தமிழக காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, செவிலியர்களின் நான்கு முக்கிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து செவிலியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழ்நாடு முழுவதும் DYFI சார்பில் செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுப்போம்.

27/09/2026

காலிப்பணியிடங்களை நிரப்புவதாக அமைச்சர் அறிவித்துவிட்டு, மீட்டர் ரீடிங் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா?

சமூக நீதி கொள்கைகளுக்கு விளக்கம் அளிக்குமா தவெக அரசு ?

அறிவிப்பை திரும்பப்பெறவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

வாலிபர் சங்கம் கண்டனம் !

சென்னை, செப். 26:

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், முக்கியமான மீட்டர் ரீடிங் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வலியுறுத்துகிறது .

TNPDCL-ன் வருவாய் பிரிவு சார்பில் செப்டம்பர் 24, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், Assessment Cadre-ல் கணிசமான காலிப்பணியிடங்கள் இருப்பதால், மீட்டர் ரீடிங் பணிகள் தாமதமாவதாகவும், இதனால் நுகர்வோர் புகார்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாக, காலிப்பணியிடங்கள் உள்ள பகுதிகளில் ஆறு மாத காலத்திற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த மீட்டர் ரீடர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதே மின் துறையில் 65,921 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அரசின் மின்துறை வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 2026–27ஆம் ஆண்டில் 15,058 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு முன்மொழிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மட்டும் Multi Purpose Field Assistant (Assessor உட்பட) பணிகளுக்கு 12,500 இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதைவிட முக்கியமாக, மின் துறை அமைச்சர் ஏற்கெனவே இந்த ஆண்டுக்குள் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். மின் துறையில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை இருப்பதாகவும், முதல் கட்டமாக 15,000 பேரை பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதன் அடுத்த கட்டமாக மின் வாரியத்தில் உள்ள நிரந்தர காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்குப் பதிலாக, அதே பணிச்சுமையை தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

TNPDCL சுற்றறிக்கையே, போதிய நிரந்தர ஊழியர்கள் இல்லாததால் தற்போதுள்ள பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இதற்கான நீண்டகாலத் தீர்வு புதிய நிரந்தர பணியிடங்களை உருவாக்கி, தகுதியான இளைஞர்களை அரசு பணியில் நியமிப்பதே தவிர, நிரந்தரப் பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைப்பது அல்ல.

மேலும், சுற்றறிக்கையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு மீட்டர் ரீடர் தினமும் குறைந்தபட்சம் 250 சேவைகளையும், பிற மாநகராட்சிகளில் 220, நகராட்சிகளில் 200, பேரூராட்சிகளில் 180, ஊரகப் பகுதிகளில் 110 சேவைகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான பணியை மேற்கொள்ளும் பணியாளர்களின் பணிநிலை, ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலை உத்தரவாதம் குறித்தும் அரசு வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

1. அமைச்சர் அறிவித்த 15,000 நிரந்தர மின் வாரியப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
2. மின் வாரியத்தில் உள்ள 65,921 காலிப்பணியிடங்களையும் படிப்படியாக நிரப்புவதற்கான கால அட்டவணையை அரசு வெளியிட வேண்டும்.
3. மீட்டர் ரீடிங் போன்ற நிரந்தரத் தேவையுள்ள பணிகளை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
4. ஏற்கெனவே ஆட்சேர்ப்பு முன்மொழிவில் இடம்பெற்றுள்ள 12,500 Assessor உள்ளிட்ட Multi Purpose Field Assistant பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
5. இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மின் துறையின் மனிதவளத்தை வலுப்படுத்த வேண்டும்.
6. மீட்டர் ரீடிங் பணியில் நுகர்வோருக்கு துல்லியமான மதிப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருபுறம் “15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று அரசு அறிவிக்கிறது; மறுபுறம் “காலிப்பணியிடங்கள் உள்ளதால்” அதே பணியை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் இந்த உத்தரவுக்கு எதிராக வாலிபர் சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய மின் வாரியம், நிரந்தரப் பணிகளை ஒப்பந்தமயமாக்கும் பாதையில் செல்லக்கூடாது என்று DYFI தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

செல்வராஜ்
மாநிலத் தலைவர்

எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்

பாலுக்கு அழும் குழந்தை கல்விக்கு ஏங்கும் மாணவன் வேலை தேடும் இளைஞன் இல்லாத சமத்துவ இந்தியா காண விரும்பிய தோழர் பகத்சிங் 1...
27/09/2026

பாலுக்கு அழும் குழந்தை கல்விக்கு ஏங்கும் மாணவன் வேலை தேடும் இளைஞன் இல்லாத சமத்துவ இந்தியா காண விரும்பிய தோழர் பகத்சிங் 119 பிறந்தநாள் ✊✊

16/09/2026

பத்திரிக்கைச் செய்தி

4724 செவிலியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றுக!

இளம்பெண்களின் உழைப்பைச் சுரண்டும் ஒப்பந்த நியமன முறையை கைவிடுக!

அரசாணை எண் 258-ஐ திரும்பப் பெற வேண்டும்!

– இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு சார்பில் 11.09.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள செவிலியர் பணியாளர் தேர்வு அறிவிப்பு, மருத்துவத்துறையில் பணியாற்றக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளம் செவிலியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வலியுறுத்துகிறது.

தேசிய நலவாழ்வு குழுமம் – தமிழ்நாடு (NHM-TN) சார்பில் அரசு மருத்துவமனைகளில் 4,724 Staff Nurse பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால், இப்பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர அரசுப் பணிகளாக இல்லாமல் ஒப்பந்த/தற்காலிக அடிப்படையிலேயே நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் அரசு ஊழியர்களாக அல்லாமல் State Health Society-யின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்றும், இப்பணி எந்த நிலையிலும் நிரந்தரப் பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதம் ரூ.21,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கட்டமைப்பின் முதுகெலும்பாக இருந்து, நோயாளிகளின் உயிரைக் காக்கும் பணியில் இரவு–பகல் பாராமல் ஈடுபடும் செவிலியர்களை இத்தகைய குறைந்த ஊதியத்தில், வேலைப் பாதுகாப்பின்றி, நிரந்தரப் பணிக்கான எந்த உத்தரவாதமும் இல்லாமல் பணியமர்த்துவது கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்.

தேவைக்கேற்ப செவிலியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் மருத்துவ சேவையின் தேவைக்கும் ஏற்ப போதுமான எண்ணிக்கையில் செவிலியர்கள் நியமிக்கப்படாததால், ஏற்கெனவே பணியில் உள்ள செவிலியர்களின் பணிச்சுமையும் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் ஆயிரக்கணக்கான நிரந்தர பணியிடங்களை உருவாக்கி, போதுமான எண்ணிக்கையில் செவிலியர்களை அரசு பணியில் நியமிப்பதற்கு பதிலாக, 11 மாத ஒப்பந்தம், வேலைப் பாதுகாப்பின்மை, நிரந்தரப்படுத்த வாய்ப்பில்லை என்ற நிபந்தனைகளுடன் பணியமர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

செவிலியர் பணிக்காக முறையான கல்வியும் பயிற்சியும் பெற்று, பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களை நிரந்தர அரசு வேலை என்ற நம்பிக்கையிலிருந்து தள்ளிவிட்டு, அவர்களின் உழைப்பை தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் பயன்படுத்துவது சமூகநீதிக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் எதிரானதாகும்.

தேர்தல் வாக்குறுதிக்கு முரணான முடிவு

தவெக தனது தேர்தல் அறிக்கையில், ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றதும் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளது.

அதேபோல், அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், செவிலியர் பணியிடங்களை நிரந்தரப் பணிகளாக நிரப்பாமல், நிரந்தரப்படுத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறி ஒப்பந்த அடிப்படையில் மட்டும் நியமிப்பது தேர்தல் வாக்குறுதிகளுக்கே முரணானதாகும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவது மட்டும் போதாது. படித்த இளைஞர்களுக்கு பாதுகாப்பான, நிரந்தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் முதன்மைப் பொறுப்பாகும்.

இது செவிலியர்களின் பிரச்சனை மட்டுமல்ல; இளம்பெண்களின் எதிர்காலப் பிரச்சனை

தமிழ்நாட்டில் செவிலியர் பணிக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை பல லட்சமாக உள்ள நிலையில், அவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பான்மையானவர்கள் இளம் பெண்கள்.

பெண்கள் அதிகம் பணிபுரியும் ஒரு துறையில், அவர்களின் உழைப்பை நிரந்தர வேலைப் பாதுகாப்பின்றி பயன்படுத்தும் ஒப்பந்த முறை என்பது பாலின சமத்துவத்திற்கும் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இளம் பெண்களின் கல்வி, உழைப்பு, கனவு ஆகியவற்றை தற்காலிக ஒப்பந்த வேலைக்குள் முடக்காமல், அவர்களுக்கு கண்ணியமான நிரந்தர வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக:

1. 11.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 258 மற்றும் அதன் அடிப்படையிலான செவிலியர் பணியாளர் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.
2. அறிவிக்கப்பட்டுள்ள 4,724 செவிலியர் பணியிடங்களையும் நிரந்தர அரசுப் பணியிடங்களாக மாற்ற வேண்டும்.
3. ஒப்பந்தம் மற்றும் தற்காலிகப் பணியாளர் முறையை கைவிட்டு, தகுதியான செவிலியர்களை முறையான அரசு பணியாளர் தேர்வு நடைமுறையின் மூலம் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.
4. ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளிலும் NHM உள்ளிட்ட திட்டங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களின் பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு, அவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தரப் பணிக்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
5. அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
6. செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அவர்களின் கல்வித் தகுதி, தொழில்முறை பொறுப்பு மற்றும் பணிச்சுமைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு, 4,724 செவிலியர் பணியிடங்களையும் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றும் கொள்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

செல்வராஜ்
மாநிலத் தலைவர்

எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்





மதுராந்தகம் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சுகந்தி படிப்பு M.A .B.edசமூக செயற்பாட்டாளர்1990 ஆம் ஆண்டு  முதல் அரசு து...
15/09/2026

மதுராந்தகம் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சுகந்தி
படிப்பு M.A .B.ed
சமூக செயற்பாட்டாளர்

1990 ஆம் ஆண்டு முதல் அரசு துவங்கிய அறிவொளி இயக்கத்தில் தொண்டராக, கருத்தாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்.

கல்வி கற்கும் வாய்ப்பை இழந்த ஏழை எளிய மக்களுக்கு எழுத்தறிவை கற்றுக் கொடுத்த பணியின் மூலம் பொது வாழ்விற்கு வந்தவர்.

2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக , வன்கொடுமைகளுக்கு
எதிராக. ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தவர்

1995 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில பள்ளிக்குச் சென்ற மாணவி கொடூரமாக கூட்டு பாலியல் வன்முறை பிரச்சனை.

காரைக்காலில் 2012ஆம் ஆண்டு அமில வீச்சுக்கு ஆளான பொறியியல் பட்டதாரியான வினோதினி சிகிச்சைக்கு நிதி உதவி - சட்டப் போராட்டம்

2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவிகள் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, உள்ளிட்ட பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக முன்னெடுத்து நீதியும் பெற்றுத் தந்தவர்.

சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்களுக்கான கோரிக்கைகளுக்காக பல போராட்டக் களங்களைக் கண்டவர் தோழர் சுகந்தி.

தற்போது மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்

அரசியல் நேர்மை
கொள்கையில் உறுதி
போராட்ட வரலாறு கொண்ட
தோழர் சுகந்தி
மாற்றத்திற்கு ஏங்கும்
தமிழக மக்களுக்கு
Real மாற்று.

நமது சின்னம்
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்.

09/09/2026

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு
கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கபட வேண்டும்!

குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பக்கூடாது!

தமிழக அரசை வலியுறுத்தி செப் 7 மாவட்ட ஆட்சியரிடம் DYFI முறையீடு!



09/09/2026

மெட்ரோவில் இடம்பெற்ற பெண்களை இழிவுபடுத்தும் வணிக விளம்பரத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம்: அரசு விளம்பரங்களை நெறிமுறைப்படுத்த வேண்டும்!

பொதுப் போக்குவரத்தான மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், பாலின சமத்துவத்திற்கு எதிராகவும் வைக்கப்பட்டுள்ள வர்த்தக விளம்பரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

சமீபத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து ஊழியர் கூட்டுறவு கிரெடிட் சொசைட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு நிலையான வைப்பு நிதி (FD) விளம்பரத்தில், வங்கி வட்டி விகிதத்தை ஒரு பெண் தோழியோடு (Girlfriend) ஒப்பிட்டு, தரம் தாழ்ந்த இரட்டை அர்த்த வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் உதவியோடு இயங்குகிற கூட்டுறவு சொசைட்டி சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் இன்னும் பல இடங்களில் அகற்றப்படாமல் இருக்கிறது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக அந்த விளம்பரம் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளதோ அதையெல்லாம் அகற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வணிக நோக்கத்திற்காகப் பெண்களை இழிவுபடுத்துவது, அவர்களை நுகர்பொருளாகச் சித்தரிப்பது மற்றும் தனிப்பட்ட உறவுகளைக் கேலி செய்வது போன்ற போக்குகள் நாகரிக சமூகத்திற்கு பொருத்தமானதாக இருக்க முடியாது. இது ஏற்கனவே சமூகத்தில் பெண்கள் மீதுள்ள ஆணாதிக்க கருத்துக்களை அதிகப்படுத்துவதோடு சமத்துவமான சமூகத்தை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பின்னடைவுக்கு தள்ளும். அரசு அல்லது கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புடைய நிறுவனங்களே சமூகப் பொறுப்பின்றி இத்தகைய விளம்பரங்களை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல.

அரசு பொது நிறுவனங்கள் சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளில் முக்கிய பங்கு வகிக்க கூடியவை. ஆனால் அந்த அமைப்புகளின் விளம்பரங்களே இத்தகைய பாலின ரீதியிலான ஒடுக்குமுறை வார்த்தைகளை பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது.

பொதுப் போக்குவரத்து போன்ற அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் இடங்களில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களை அனுமதிக்கும் போது, உரிய நெறிமுறைகள் மற்றும் கண்காணிப்பு பின்பற்றப்பட வேண்டும்.

இத்தகைய விளம்பரங்களை உடனடியாக அகற்றுவதோடு, பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களில் பெண்களைக் கண்ணியக் குறைவாகச் சித்தரிப்பதைத் தடுக்க விளம்பரத் தரக் கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது போன்ற விளம்பரங்கள் இளம் தலைமுறையினரிடம் பாலின ஒடுக்குமுறை கருத்துக்களை கொண்டு செல்வதோடு, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க எந்த வகையிலும் உதவிகரமாக இருக்காது. எனவே, அரசு கடுமையான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வேண்டும். உடனடியாக அந்த விளம்பரம் நீக்கப்பட வேண்டுமென்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

09/09/2026

பத்திரிக்கைச் செய்தி

SFI மாநிலத் தலைவர் தோழர் மிருதுளாவை குறிவைத்து நடைபெறும் மிரட்டல் மற்றும் இழிவுபடுத்தும் சமூக வலைதளப் பிரச்சாரத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம்!

SFI தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் மிருதுளா அவர்கள் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக, அவரை குறிவைத்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வரும் தனிப்பட்ட தாக்குதல், இழிவுபடுத்தல் மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு கருத்துடன் உடன்பாடு இல்லை என்றால் அதற்கு கருத்தின் மூலமாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும், ஜனநாயக முறையிலும் பதிலளிப்பதே ஒரு நாகரிகமான சமூகத்தின் பண்பாகும். ஆனால், கருத்து தெரிவித்த ஒரு பெண் மாணவர் அமைப்பின் தலைவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த அழைப்பு விடுப்பது, அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மிரட்டும் வகையில் பிரச்சாரம் செய்வது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகப் பண்பாட்டிற்கு எதிரானவை.

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக மருத்துவ அறிக்கைகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே மாறுபட்ட கருத்துகளும் விவாதங்களும் இருக்கலாம். இத்தகைய பிரச்சினைகள் குறித்து யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துக்களை முன்வைக்கலாம்; அதேபோல் அந்தக் கருத்துக்களை விமர்சிக்கவும் உரிமை உண்டு. ஆனால், கருத்து வேறுபாட்டிற்கு பதிலாக மிரட்டல், அவதூறு மற்றும் தனிநபர் தாக்குதலை மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக, தோழர் மிருதுளா ஒரு பெண் என்பதையே பயன்படுத்தி அவரை மிக மோசமான மற்றும் இழிவான வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தாக்குவது கடும் கண்டனத்திற்குரியது. பொதுவெளியில் பெண்கள் அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களை முன்வைக்கும்போது, அவர்களை அச்சுறுத்தி அமைதிப்படுத்த முயல்வதும், அவமானப்படுத்துவதும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.

மேலும், கருத்து வேறுபாட்டை சாதிய அடையாளத்துடன் இணைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தூண்டிவிட முயல்வது மிகவும் ஆபத்தான அரசியலாகும். ஒரு தனிநபரின் கருத்தை விமர்சிப்பதற்கும், சாதி உணர்வுகளைத் தூண்டி அவருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. தமிழகத்தின் சமூகநீதி மற்றும் ஜனநாயக மரபிற்கு எதிரான இத்தகைய முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் தோழர் மிருதுளாவை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில், அவரை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து, அவருக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் அரசியல் அமைப்புகளையும் திட்டமிட்டு தாக்க வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது கருத்து வேறுபாட்டை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் அணுகுமுறை அல்ல.

ஒரு கருத்தை எதிர்க்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால், கருத்துரிமையைப் பயன்படுத்தும் ஒருவரை மிரட்டும் உரிமை யாருக்கும் இல்லை. குறிப்பாக, சாதியின் பெயரால் சமூகத்தில் வெறுப்பையும் பதற்றத்தையும் உருவாக்கி, ஜனநாயகக் கருத்துக்களை முன்வைப்பவர்களை அச்சுறுத்துவது சட்டத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரானதாகும்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சாதி ஆதிக்கம், சாதியப் பாகுபாடு மற்றும் அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது. கருத்துரிமை, சமூகநீதி மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் வாலிபர் இயக்கத்தின் முக்கியமான கடமையாகும்.

எனவே, SFI மாநிலத் தலைவர் தோழர் மிருதுளாவை குறிவைத்து சமூக வலைதளங்களில் நடைபெறும் மிரட்டல், அவதூறு மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது. சட்டத்தை மீறும் வகையிலான மிரட்டல் அல்லது வெறுப்பைத் தூண்டும் செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கருத்து வேறுபாடுகளை சாதிய மோதலாக மாற்றுவதையும், பெண்களின் அரசியல் பங்கேற்பைத் தடுக்க அவர்களை இழிவுபடுத்துவதையும், மிரட்டல்களின் மூலம் ஜனநாயகக் குரல்களை அடக்க முயல்வதையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நாங்கள் ஒரு போதும் சாதியவாதிகளின் கூச்சல்களுக்கு அடி பணிய மாட்டோம். இந்த சமூகத்தில் சமத்துவம் மலர தொடர்ந்து எங்கள் போர்க்குரலை எழுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் மிருதுளா தனிநபர் அல்ல ; அவர் எங்கள் இயக்கத்தின் தலைவர் . அவரோடு இந்த தருணத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனது ஒருமைப்பாட்டினை தெரிவித்துக் கொள்கிறது.

செல்வராஜ்
மாநிலத் தலைவர்

எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்


Address

M. 161 TNBH காலனி தென்காசி
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Tenkasi:

Shortcuts

Share