22/07/2026
மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் அராஜக தாக்குதலை கண்டித்து சென்னையில் யங் டெமாக்ரட்ஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!
தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஒன்றிய அரசின் காவல்துறை நடத்திய அராஜக அடக்குமுறைத் தாக்குதலைக் கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ‘யங் டெமாக்ரட்ஸ்’ அமைப்பின் சார்பில் இன்று (ஜூலை 22) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யங் டெமாக்ரட்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது பிர்னாஸ், சமீரா, பையாஸ் முபாரக், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், முகமது அர்ஃபயீன், அசேன் அலி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது ரஷீத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய யங் டெமாக்ரட்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்தீக், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நியாயமான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ஒன்றிய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கல்விச் சீர்திருத்தம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி மற்றும் அடக்குமுறையை அவர் வன்மையாகக் கண்டித்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு ஜனநாயக ரீதியில் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு மிரட்டலையும் வன்முறையையும் கையாண்டு போராட்டத்தை ஒடுக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும், குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைதியான முறையில் போராடும் உரிமையையும் அப்பட்டமாகச் சீர்குலைக்கிறது என்றார். எனவே, காவல்துறையின் இந்த அத்துமீறல் மற்றும் வன்முறை குறித்து உடனடியாக ஒரு சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அமைதி வழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசு மற்றும் டெல்லி காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் வீரியமிக்க கண்டன முழக்கங்களை எழுப்பினர்.