06/10/2026
#உலகம் அவர்களை கொண்டாட மறந்தாலும்....
---------------------------------
#ஆசிரியர்_தின_வாழ்த்துச்_செய்தி
ஆசிரியர்கள் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் சவால் நிறைந்ததொரு பணியை மேற்கொள்கின்றனர். இரண்டு வகையில் அவர்களது பணி சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
1. Context - அவர்கள் இப்பணியில் ஈடுபடுகின்ற காலம், சூழல், உலக ஒழுங்கு.
2. Role - அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்ற பணி.
முற்றிலும் வித்தியாசமான ஒரு அகச் சூழலில் அவர்கள் தமது பணியை நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்று பெரும்பாலான மாணவர்கள் அனைத்தையும் சுதந்திரமாக அனுபவித்தல் எனும் லிபரல்வாத மனப்பாங்குடன் உள்ளவர்கள்.
"நான் யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல. நான் யாருக்கும் கடமைப்பட்டவன் அல்ல. நான் விரும்பினால் படிக்கலாம், விரும்பினால் விளையாடலாம். என்னை கேட்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இவர்கள் யார்?" என்ற முழுமையான லிபரல் மனப்பாங்குடையவர்களாக இருக்கின்றனர்.
இத்தகைய லிபரல்வாத மனப்பாங்கை (Liberal Mindset) தொடராக Promote பண்ணும் உலக ஒழுங்கில் மாணவர்களும் சமூகமும் நாடும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது.
மறுபுறம் மாணவர்கள் வாழும் சூழல்
👉 டிஜிட்டல் உபகரணப் பாவனையினால் ஏற்படும் கவனச் சிதைவு.
👉 அதிகப்படியான ஸ்மார்ட் மொபைல் மற்றும் சமூக ஊடகப் பாவனை.
👉வகுப்புக்களுக்கு வராமை.
👉 குடும்பக் கட்டமைப்புச் சிதைவு.
👉 மன அழுத்தம்
👉 உணர்ச்சிக்கு அடிமையாகுதல். 👉 செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்று மாணவர்கள் வாழும் சூழல் புதிய சவால்களைக் கொண்டமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
காலந்தோறும் ஆசிரியர்கள் அறிவின் நுழைவாயிலாக கருதப்பட்டார்கள். அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்களிடமே செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. இன்று அந்த நிலை தலைகீழாக மாறி இருக்கின்றது.
பாடவிதானங்களை கற்பித்தல், பாடத்திட்டத்தைப் பூர்த்தியாக்குதல் என்பவற்றுக்கு அப்பால், ஓர் உன்னதமான பணி ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. மானிடத்திற்கு பயனுள்ள உன்னதமான ஒரு மனிதனை உருவாக்குவதே உண்மையில் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்ற பணி.
- மாணவனை உன்னத மனிதனாக கட்டியெழுப்புகின்ற பணி ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் மிகப் பிரதான பணி.
- ஓவ்வொரு மாணவனது பின்புலம், பலம், பலவீனம், திறமைகள், ஆற்றல்கள், இயல்புகள், விருப்பு வெறுப்புகளை ஓர் ஆசிரியர் விளங்கிக் கொள்கின்றார்.
- அவனிலே மறைந்திருக்கும் திறமைகளை, ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கு களம் அமைக்கின்றார். - அதற்காக ஆர்வமூட்டுகின்றார், பொறுப்புக்களை பகிர்ந்து அளிக்கின்றார், ஊக்குவிக்கின்றார், பயிற்றுவிக்கின்றார், தவறு விடுகின்ற போது தட்டிக் கொடுத்து திடவுறுதியை ஏற்படுத்துகின்றார்.
- அர்த்தம் மிக்க இலட்சியம் நிறைந்த வாழ்க்கை ஒன்றுக்கு வழிகாட்டுகின்றார்.
இது இலகுவான காரியம் அல்ல. மிகவும் சவால் நிறைந்த பணி.
பீரங்கிப் பேச்சாளர் ஒருவர் மேடையில் ஏறி அரங்கம் முழங்க உரை நிகழ்த்தலாம். உலகம் அவரை வியந்து பார்க்கும். பாராட்டும், வாழ்த்துக்களை அள்ளி வீசும். ஆனால் ஓர் ஆசிரியர் ஆரவாரம் இல்லாமல் சமூகத்தின் அத்திவாரத்தை நிர்மானிக்கின்றார். உன்னத மனிதர்களை உருவாக்குகின்றார்.
அதற்கும் அப்பால் சமூகத்தில் பணி புரிகின்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், ஆலிம்கள், கலைஞர்கள் இலக்கியவாதிகள் அனைவரும் ஆசிரியர்களால் உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரது உருவாக்கத்திலும் ஆசிரியர்களுக்கு ஒரு பிரதான வகிபாகம் இருக்கின்றது. அவ்வகிபாகம் மிகப் பெரியது.
அல்குர்ஆனில் சூரா யாஸீனில் பன்னிரண்டாவது வசனம் எம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்ற ஓர் அற்புதமான வசனம். *நிச்சயமாக நாம் மரணித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் முற்படுத்திய செயல்களையும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்களையும் (Impact) நாம் எழுதி வருகின்றோம்*
மனிதர்கள் இவ்வுலகில் செய்த செயல்கள் குறித்த மிகவும் அற்புதமான கணிப்பீடு இது. மனிதர்களால் கண்டு கொள்ளப்படாத, கண்டு கொள்ள முடியாத கணிப்பீடு. ஓர் ஆசிரியர் தனது நடத்தையால், வழிகாட்டலால், ஆர்வமூட்டலால், தட்டிக் கொடுப்பால், அரவணைப்பால்... மாணவர்களது வாழ்க்கையில் மிகப் பெரிய Impact ஐ ஏற்படுத்தியிருப்பார். ஒரு பாரிய மாணவப் பரம்பரையை உருவாக்கியிருப்பார். அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் செய்கினற உன்னத பணியிலும் அந்த ஆசிரியரின் தாக்கம் (Impact) நிலைத்திருப்பதை அவதானிக்கலாம்.
இந்தளவு தாக்கமுள்ள ஒரு வகிபாகத்தை சுமந்திருக்கின்ற ஆசிரியர் எளிமையாக வாழ்கின்றார். பலபோது சமூகம் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. ஒரு வீட்டில் ஒரு ஆசிரியர் உருவானால் அவரை வீடு கொண்டாடுவதில்லை. சமூகமும் கொண்டாடுவதில்லை.
பூமி அவர்களைக் கண்டு கொள்ளாவிட்டாலும் வானம் அவர்களை செங்கம்பளம் விரித்து இராஜ மரியாதையுடன் வரவேற்கின்றது.
ஆசிரியர் ஒரு தொழிலை செய்கின்றார் என்பதற்கு அப்பால் ஒரு தூதை (Mission) சுமந்து கொள்கின்றார். வானத்தில் பறக்கின்ற பறவைகளும், கடல்களில் நீந்துகின்ற மீன்களும், பொந்துகளில் இருக்கின்ற பூச்சிகளும், பல இலட்சக்கணக்கான வானவர்களும் அவர்களது புகழை பாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக பிரார்த்தனை புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய கண்ணியமான பணியைத் தொடரும் ஆசிரியர்கள் விடயத்தில் சமூகம் தனது கடமையை உணர்ந்து இருக்கின்றதா?
உலகம் அவர்களை கொண்டாடாவிட்டாலும் ஆசிரியர்கள் நினைவுகூரப்படும் நாளில் ஆசிரியர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்வோம். அவர்களது அறிவு, ஆன்மீக, உடல் ஆரோக்கியத்திற்காக இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
அஷ்-ஷேய்க் ஜே.எம்.அஷ்ரப்
(தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி).
#ஆசிரியர்தினம்