Alm Saleem

Directions

Alm Saleem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alm Saleem, Saintamaruthu.

இலங்கையின் 37ஆவது நகர சபையாக இணையவுள்ள சாய்ந்தமருது நகர சபை!இலங்கை அரசாங்கத்தின் அதிகார வேறாக்கத்தின் (3 Arms of the gov...
18/09/2026

இலங்கையின் 37ஆவது நகர சபையாக இணையவுள்ள சாய்ந்தமருது நகர சபை!

இலங்கை அரசாங்கத்தின் அதிகார வேறாக்கத்தின் (3 Arms of the government and Separation of Power) தூண்களாகக் காணப்படும் நிறைவேற்றுத்துறை (Executive), சட்டவாக்கத்துறை (Legislature) மற்றும் நீதித்துறை (Judicial) என்பன ஒரு அரசின் அதிகார வரையறைக்குள் ஒன்றை ஒன்று சார்ந்த நிலையில் சுயாதீனமாக இயங்குகின்ற துறைகளாகும்.

இதில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியின் தலைமையில் காணப்படுவதுடன், அமைச்சரவை அமைச்சுக்கள், மாகாண மட்டத்தில் ஆளுநர்கள், மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபர், பிரதேச மட்டத்தில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம மட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் என்று விரிவுபட்டு இயங்குகின்றது.

நீதித்துறை, உச்ச நீதிமன்றம் தொடங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாகாண உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், (மாஜிஸ்திரேட்) நீதவான் நீதிமன்றம் என்பவற்றுடன், கிராம மட்டத்தில் சமாதான சபைகள் என்று விரிவுபடுகிறது.

ஒரு நாட்டின் அரசின் முக்கிய தூணாக விளங்குவது சட்டவாக்கத்துறை என்ற விடயம். சட்டவாக்கத்துறையில் மத்தியில் 225 அங்கத்தவர்கள் கொண்ட பாராளுமன்றம் நாட்டுக்கான பொதுவான சட்டங்களை இயற்றுகின்றது. 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மாகாண சபைகளின் உருவாக்கத்திற்கு வித்திட்டது. மாகாண மட்டத்தில் மாகாண சபைகள் நியதிச்சட்டங்களை இயற்றுகின்றன. அத்தகைய மாகாண சபைகளின் கீழ் இயங்கும் அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தின் இறுதி வடிவமாக அமைவது உள்ளூராட்சி சபைகள். அந்த வகையில், உள்ளூராட்சி சபைகள் தமது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின் நலன் கருதி, பாராளுமன்ற, மாகாண சபை சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதாக சில உப சட்டங்களை (By-laws) இயற்றும் அதிகாரம் கொண்டவை.

குறிப்பாக, சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு, சிறிய உட்கட்டமைப்புகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்களில் முன்னுரிமை அளித்து செயற்படுகின்றது.

இலங்கையில் தற்போது காணப்படும் 341 உள்ளூராட்சி சபைகளுடன், கடந்த மே மாதம் 7ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சாய்ந்தமருதை 342ஆவது உள்ளூராட்சி சபையாக இணைத்துள்ளது.

எமது நாட்டில் 1947ஆம் ஆண்டின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் மூலம் கொழும்பு, கண்டி, குருணாகல் போன்ற பாரிய நகரங்கள் உட்பட 29 மாநகர சபைகள் இயங்குகின்றன.

1939ஆம் ஆண்டின் நகர சபை கட்டளைச் சட்டத்தின் மூலம் இயங்கும் 36 நகர சபைகளுடன், 37ஆவது நகர சபையாக சாய்ந்தமருது நகர சபை இணைந்து இயங்க உள்ளது. இது 1890களிலிருந்து சாய்ந்தமருது ஒரு தனியான உள்ளூராட்சி சபையைக் கொண்ட பிரதேசம் என்பதனைச் சான்றுபடுத்துகின்றது.

அத்துடன், நாட்டில் மொத்தமாக 1987ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் 276 பிரதேச சபைகளும் இயங்கி வருகின்றன.

சாய்ந்தமருது நகர சபை 2020.02.14ஆம் திகதி அன்றைய உள்ளூராட்சி அமைச்சரால் பிரகடனம் செய்யப்பட்டாலும், 2020.02.18ஆம் திகதி குறிப்பிட்ட வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டு, அரசாங்க அச்சக இணையத்திலிருந்தும் நீக்கப்பட்டது.

அத்துடன், செப்டம்பர் மாதத்தில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வேறு ஒரு வர்த்தமானியில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவித்த நிலையில், சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தல் அறிவிக்காத நிலையில், ஒரு அடிப்படை உரிமை மீறலாக இதனை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதன் விளைவாக, சுமார் 2 வருடங்களுக்கு மேல் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வந்தது.

மே மாதம் 7ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை வலுவான முறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது மட்டுமல்லாமல், இரண்டு மாதங்களில் வட்டாரங்களுக்கான எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமுலாக்கும் விடயத்தில் அமைச்சு, உச்ச நீதிமன்ற அனுமதிக்காக மேலதிக ஆலோசனை வேண்டி சில விடயங்களை சட்டமா அதிபர் ஊடாக விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைக்கப் பெற்றதும், இன்ஷா அல்லாஹ், இலங்கையின் 37ஆவது நகர சபையாக சாய்ந்தமருது நகர சபை தனது பணியைச் செவ்வனே ஆரம்பிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர சபை, சாய்ந்தமருது நகர சபை, மட்டக்களப்பில் காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகளும், திருகோணமலையில் கிண்ணியா நகர சபையும் என்று கிழக்கு மாகாணத்தில் 5 நகர சபைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

A.L.M சலீம்

சாய்ந்தமருது நகர சபைக்கான புதிய கட்டிடம் வாசிகசாலை அமைந்துள்ள இடத்தில் அமையப் பெறுவது சிறந்தது!பொது நிர்வாக, உள்நாட்டலுவ...
07/09/2026

சாய்ந்தமருது நகர சபைக்கான புதிய கட்டிடம் வாசிகசாலை அமைந்துள்ள இடத்தில் அமையப் பெறுவது சிறந்தது!

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சாய்ந்தமருது நகர சபை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சட்டரீதியாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிழக்கு மாகாண சபை ஆரம்பிப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

வழக்காளி என்ற வகையில், பல சந்தர்ப்பங்களில் கொழும்பில் உள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்குச் சென்று இந்த விடயத்திற்குப் பொறுப்பான பல அதிகாரிகளைச் சந்தித்துள்ளேன். அமைச்சின் நிர்வாக அதிகாரியான மேலதிக செயலாளரின் கீழ் செயற்பட்டு வருகின்றது. சட்ட விடயங்கள் தொடர்பாக பிரதான சட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட சட்ட மற்றும் நிர்வாக ரீதியாக இவ்விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

கடந்த வியாழக்கிழமையும் அமைச்சுக்குச் சென்று உரிய அதிகாரிகளைச் சந்தித்தேன். அந்த வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், ஒருபுறம் சட்டரீதியான விடயங்கள் குறித்தும் மறுபுறம் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட முடிந்தது.

அந்த வகையில், பிரதான சட்ட உத்தியோகத்தரின் கருத்துப்படி, தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுவதற்கான மசோதா ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்கான வரைபடம் தொடர்பாக அளவைகள் திணைக்களமும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சாக இருந்தாலும், உள்ளூராட்சி சபைகள் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதுடன், ஆளுநரின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டவையாகும். அத்துடன், இவ்விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சு, மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் (CLG) மற்றும் தற்போதைய நிலையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஆகியோரின் நிர்வாகத் தொடர்புடைய விடயமாகவும் காணப்படுகிறது.

அந்த வகையில், சாய்ந்தமருது நகர சபைக்கான வளப் பங்கீடு தொடர்பாக மாகாண ஆளுநரின் ஊடாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைக்கான நிர்வாக எல்லைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், சாய்ந்தமருது நகர சபைக்கான செயலாளர் ஒருவரை மாகாண ஆளுநர் நியமித்து, நகர சபையின் நிர்வாக நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

நகர சபைக்கான தற்காலிக நிர்வாகக் கட்டிடம் தொடர்பிலும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது வாசிகசாலை இயங்கி வரும் கட்டிடம், பல ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றுவரை அது பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும் எதிர்காலத் தேவைகளையும் கருத்திற்கொண்டு, அந்த இடத்தில் சாய்ந்தமருது நகர சபைக்கான புதிய நிர்வாகக் கட்டிடம் ஒன்றை அமைப்பது சிறந்த தீர்வாக அமையும்.

அதேவேளை, நவீன வசதிகளுடன் கூடிய புதிய வாசிகசாலை கட்டிடம் ஒன்றை, நகர சபைக்கான யார்ட் மற்றும் அலுவலகங்களுக்காக கரைவாகு பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் அமைப்பதுட தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதற்காக விரிவான திட்டமிடல், வள மதிப்பீடு மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய செயற்றிட்டம் ஒன்று தயாரிக்கப்படுவது அவசியமாகும். நகர சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எதிர்கொள்ளக்கூடிய நிர்வாக, நிதி, உட்கட்டமைப்பு மற்றும் வளப்பங்கீடு தொடர்பான பல்வேறு சவால்களுக்கும் முன்கூட்டியே தீர்வுகள் திட்டமிடப்பட வேண்டும்.

எனவே புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள சாய்ந்தமருது நகர சபைக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனால், அந்தச் சவால்கள் அனைத்தையும் முறியடித்து, சாய்ந்தமருது நகர சபை உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றியைப் பெற்றதைப் போன்றே, எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு நாம் திறந்த மனதுடனும், இறை நம்பிக்கையுடனும், ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், மக்களின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிச்சயமாக வெற்றியடையும்.

A.L.M சலீம்

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் மேலும் ஓர் நகர்வு!அண்மையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் நகர சபை விடயம் ...
11/06/2026

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் மேலும் ஓர் நகர்வு!

அண்மையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் நகர சபை விடயம் தொடர்பாக என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்ததிற்கினங்க,

நான் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான ரிஷ்மீர், அசீம் அத்தோடு சாஸ்கோ சதாத், அமான் ஆசிரியர் ஆகியோரையும் குறித்த சந்திப்புக்கு அழைத்தேன் இதில் அசீம் தவிர மற்ற மூவரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சாய்ந்தமருது நகர சபை மற்றும் கல்முனை மாநகர சபை தொடர்பாக அமைச்சர் மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் ஊரின் நலனுக்காக என்னையும் கட்டாயம் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி சாய்ந்தமருது நகர சபை அமைப்பை விரைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் நானும் கலந்து கொண்டேன்.

இக்கூட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் சந்தன அபயவர்தன, பிரதி அமைச்சர் மற்றும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆதம் பாவா, டாக்டர் ஷிஹாப் ஆகில், கரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தர் கலீல் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அசீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ அமைச்சர் அவர்கள் ஒரு பேராசிரியர் என்பதனால், விடயங்களை இலகுவாகப் புரிந்துகொண்டு அணுக முடிந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மிக விரைவில் அமுல்படுத்த வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார். குறிப்பாக, நிதிப் பற்றாக்குறை நிலவுகின்ற காலகட்டமாக இருந்தபோதிலும் நாங்கள் முன்வைத்த பரிந்துரைகளை அவர் ஏற்றுக்கொண்டார்.

பிரதிவாதிகளில் ஒருவராக கிழக்கு மாகாண ஆளுநரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தீர்ப்பின் முழுமையான அமுலாக்கம் கிழக்கு மாகாண சபையுடன் தொடர்புடையது என்பதால், தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான பணிப்புரைகளும் வழங்கப்பட்டன.

மாநகர சபைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று இருப்பதால் ஆரம்ப கட்டத்தில் அதனைப் பயன்படுத்துவதும், தேவையான ஆளணி மற்றும் வளங்களை மாநகர சபையிலிருந்து பெற்றுக்கொள்வதும் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வட்டாரப் பிரிப்பு மற்றும் பெயரிடல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மிக விரைவில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், அமைச்சர் அவர்கள் விரைவில் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்வதாகவும் அறிவித்தார்.

எனவே, சாய்ந்தமருது நகர சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயலகம் மிக விரைவில் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கையுள்ளது.

இச்சந்திப்பை ஏற்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆதம்பாவா, பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் சந்தன அபயவர்தன ஆகியோருக்கு எமது ஊர் சார்பாக உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நகர சபை என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணம் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே என்னுள் ஆழமாக வேரூன்றியிருந்தது. குறிப்பாக, பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தை ஆரம்பித்த காலத்தில் அந்தத் தேவையை மிகவும் தீவிரமாக உணர்ந்தேன். அப்போது மைதானத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகள் வழங்கியபோது தனியான உள்ளூராட்சி அமைப்பின் அவசியம் அனைவராலும் உணரப்பட்டது.

அதனால் அன்று முதல் இன்று வரை அந்த இலக்கை நோக்கி தொடர்ச்சியாக முன்னேறினோம். பலர் கைவிட்ட போதிலும் இறுதி வரை போராடினோம். வெற்றியை வழங்கியவன் அல்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வெற்றி சுயநலமின்றி பல தியாகங்களைச் செய்து, உளத்தூய்மையுடன் 2014 ஆம் ஆண்டு முதல் இந்தப் பயணத்தில் இணைந்த அனைவருக்கும் உரியது. 2015 ஆம் ஆண்டு பள்ளிவாசல் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

2016 மற்றும் 2017 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடத்தப்பட்டன.
2017 ஆம் ஆண்டில் போராட்டங்களும் பணிமனைகளும் நடத்தப்பட்டன.
2018 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டு மக்களின் பேராதரவைப் பெற்றோம். பின்னரும் பல சந்திப்புகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் என்னுடன் இணைந்து பணியாற்றி ஆதரவு வழங்கியவர்களுக்கும், 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது வழக்குத் தாக்கல் செய்வதில் ஒத்துழைத்தவர்களுக்கும், நிதி உதவிகளை வழங்கியவர்களுக்கும், நோன்பிருந்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் இந்த வெற்றி உரித்தானதாகும்.

அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்

A.L.M சலீம்

28/05/2026
இலங்கை நிருவாக சேவையின் 31ஆவது வருட சந்திப்பு 16.05.2026ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள வாட்டர்ஸ் எட்ஜ் Waters Edge ஹோட்ட...
17/05/2026

இலங்கை நிருவாக சேவையின் 31ஆவது வருட சந்திப்பு 16.05.2026ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள வாட்டர்ஸ் எட்ஜ் Waters Edge ஹோட்டலில் நடைபெற்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அல்ஹாஜ் வை எல் நவவி, நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நயிமுதீன் உட்பட முன்னாள் செயலாளர்கள், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் திரு ரஞ்சித் அரியத்ன, பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் திரு புஷ்பகுமார, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம், ஓய்வூதிய ஆணையாளர் நாயகம், தபால் மா அதிபர் நாயகம் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லை நிர்ணய பணிகள் ஆரம்பம்..அல்ஹம்துலில்லாஹ்சாய்ந்தமருது நகர சபை 2026.05.07ஆம் திகதி உச்ச நீத...
16/05/2026

சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லை நிர்ணய பணிகள் ஆரம்பம்..

அல்ஹம்துலில்லாஹ்
சாய்ந்தமருது நகர சபை 2026.05.07ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் தீர்ப்பின் பிரகாரம் தற்பொழுது எல்லை நிர்ணய ஆரம்ப செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கல்முனைத் தொகுதியில் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு கல்முனை மாநகர சபை, மற்றும் சாய்ந்தமருது நகர சபையுடன் 02 சபைகளுமாக மொத்தம் அம்பாரை மாவட்டத்தில் 19 பிரதேச செயலகங்களும், 21 உள்ளூராட்சி சபைகளும் காணப்படுகிறது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம். (2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையிலான அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கியது.)
நடைமுறையில் உள்ளது.

பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சில் கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது நகர சபைக்கான முன்னோக்கிய நகர்வுகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக தேர்தல்கள் ஆணைய அதிகாரிகளின் கூற்றுப்படி எல்லை நிர்ணயத்திற்கான "தேசிய குழு" அமைச்சரினால் நியமிக்கப்பட்டு எல்லை நிர்ணய மற்றும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

எல்லை நிர்ணயம் என்பது நகர சபை பிரகடனம் செய்யப்பட்ட எல்லைக்குள் வட்டாரங்கள் பிரிக்கப்படுவது.
மாறாக சபைகளின் எல்லைகள் ஏற்கனவே பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய குழுவின் பணிகளில் உள்ளூர் அதிகார சபையின் இடப்பரப்பை வட்டாரங்களாகப் பிரிப்பதற்காக அமைச்சருக்கு விதப்புரை செய்தலும் ஒவ்வொரு வட்டாரத்தினதும் எல்லைகளைத் தீர்மானித்தாலும், அத்தகைய வட்டாரம் ஒவ்வொன்றினதும் பெயர், இலக்கம் என்பனவற்றை வழங்குவதுமாகும்.

மேற்படி வட்டாரங்கள் பிரிப்பில் பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

1.சம்பந்தப்பட்ட உள்ளூரதிகார சபை இடப்பரப்பின் இனரீதியான அமைப்பின் விகிதாசாரத்தைக் கருத்திற் கொண்ட அத்தகைய இன விகிதாசாரத்தின் அடிப்படை மீதான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்.

2.உள்ளூர் அதிகார சபையின் புவியியல் இடப்பரப்பும், அதன் இயல்பியல் அம்சங்களும்.

3.உள்ளூர் அதிகார சபையின் இடப்பிரப்பின் சனத்தொகையும் அத்தகைய சனத்தொகையின் செறிவும், அத்துடன்

4..உள்ளூர் அதிகார சபை இடப்பரப்பின் பொருளாதார அபிவிருத்தியின் மட்டம் என்பன.

தேசிய குழுவின் விதப்புரைகள் அமைச்சரினால் ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்படும்.

ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அத்தகைய விபரங்களை, குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை என்பவற்றை கட்டளை மூலம் வெளியிடுவார்.
அமைச்சர் ஜனாதிபதியின் கட்டளையில் வெளியிடப்பட்ட வட்டாரங்களுக்கு எல்லைகளை மாற்றம் செய்யலாம்.

அத்தகைய மாற்றங்கள் அமைச்சரினால் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.
அத்துடன் மாவட்ட மட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆறு பேர் கொண்ட மாவட்டக் குழு அமைக்கப்படும். இக்குழு தேசிய குழுவின் பணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் இயங்கும்.

இத்தகைய மாற்றங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் இன்ஷா அல்லாஹ் தேர்தல்கள் நடைபெறும்.

A.L.M சலீம்

நகர சபை வழக்கு நீயே சாட்சி!வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வழக்குத் தீர்ப்பும், அரசியல் பித்தலாட்ட நடைமுறை...
11/05/2026

நகர சபை வழக்கு நீயே சாட்சி!

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வழக்குத் தீர்ப்பும், அரசியல் பித்தலாட்ட நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைத்த தீர்ப்பு.

சாய்ந்தமருது நகர சபை வெற்றி பெற்று எமதூருக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில், வல்லவன் அல்லாஹ்வுக்கு என்றும் நன்றி கூறுவோம்.

அல்ஹம்துலில்லாஹ்!

பொறுமைக்கும் எல்லை உண்டு என்பார்கள், ஆனால் எல்லை தாண்டிய பொறுமை. எமது பொறுமைக்குக் கிடைத்த பரிசு இப்பெரும் வெற்றியாகும்.

நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

அதற்காக பாடுபட்ட ஒவ்வொருக்கும் கோடி நன்றிகள் உரித்தாகட்டும். இறைவன் ஈருலக வெற்றியை வழங்கட்டும் என்ற பிரார்த்தனையுடன்!

இந்த வழக்கைப் பொறுத்த வரையில், ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.

சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் செய்யப்பட்ட விசேட வர்த்தமானி 14.02.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. பின்பு 18.02.2020ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய ரீதியில் பல அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுவும் சில அரசியல் விசமிகள் அரங்கேற்றிய பொய்யான, ஓட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதியாக காட்டிய ஒரு துரதிஷ்டமான செயலாகும். அதற்கான கூலிகளை வல்லவன் அல்லாஹ் வழங்கப் போதுமானவன்.

தொடர்ந்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலுக்குச் செல்வதா அல்லது வழக்குப் போடுவதா என்ற சிந்தனை வந்த போது, தேர்தலே முன்னின்றது.

தேர்தலில் MPயைப் பெற்று வென்ற கையுடன் நகரசபை வர்த்தமானியை மீளக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனங்களில் இருந்தது.

எமதூர் மக்கள் மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபையின் வேண்டுகோளின் பேரில் பல அரச உயர் பதவிகளைத் துறந்து முன் ஓய்வெடுத்து எமதூர் மக்களுடன் நானும் முன்னின்று ஒருமித்த கருத்துடன் சுமார் 10,000க்கு மேற்பட்ட வாக்குகளை தேசிய காங்கிரசுக்குப் பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால் தேர்தல் நடைபெற்று MP இருந்தும் ஒவ்வொரு வருடமும் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் கழிந்தது.

கிழக்கு வாசலுக்குப் போவதும் கேட்கும் போதெல்லாம் அதைச் சரிசெய்ய முடியும் என்று தொடர்ந்தும் கூறப்பட்டது ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

தொடர்ந்த இவ்வாறான பதில்களில் நம்பிக்கை இழந்த நிலையில் நாங்கள் இரு வருடங்களாக வழக்குக்குத் தேவையான ஆவணங்களை சேர்ப்பதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டோம். அது மட்டுமன்றி, பல பிரபல சட்டத்தரணிகளை சந்தித்து ஆலோசனைகளையும் பெற்று வந்தோம். சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷஹித், இஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் நஜீப் போன்றோரை சந்தித்தோம்.

இறுதியாக உள்ளூராட்சி தேர்தல் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய காங்கிரஸின் கிழக்கு வாசலை அணுகிய போது கைவிரிக்கப்பட்டது. பள்ளிவாசலை சாய்ந்தமருது நகர சபைக்கு தனியாக தேர்தல் அறிவிக்கும்படி கோரி தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்புமாறு கூறப்பட்டது.

மேலும் நம்பிக்கை இழந்த நாங்கள் இதற்கு வழக்கைத் தவிர வேறு வழி இல்லை என்று அறிந்த பிறகு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

இடைக்கால உத்தரவு பெறப்பட்டால் மட்டுமே இந்த வழக்கை கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில், அதாஉல்லா அவர்களிடம் வழக்கு போடுவது சம்பந்தமாக கூறிய போது கேசட் செயலில் இல்லை என்றும் வாதாடுவதற்கு சரியான பாயிண்ட் இல்லை என்றும் கூறினார். ஒரு முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் இப்படிக் கூறியதும் அவநம்பிக்கை ஏற்பட்டாலும், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

நான் அவரிடம் கூறிய வார்த்தை, “ஏன் வழக்குப் போடவில்லை என்று சாய்ந்தமருது மக்கள் என்னைப் பிடிப்பார்கள்” என்று கூறிவிட்டு வந்தேன். வழக்கு என்ற இலக்கிலிருந்து நாங்கள் மாறவில்லை.

ஆவணங்களை கையளித்து வழக்கு தாக்கல் செய்தோம்.

குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் பிந்தியிருந்தால்கூட எங்களது வழக்கு திசை மாறி இருக்கும்.

இடைக்கால உத்தரவு இல்லாமல் நோமினேஷன் முடிவடைந்தால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

சிலவேளை தேர்தல் நடைபெற்றும் இருக்கும்.

எல்லாம் அவன் செயல். வல்லவன் அல்லாஹ் நாடிவிட்டான் என்றால் யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

அரசியல்வாதிகளுடைய நாடகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

எமது வழக்கை சிரேஷ்ட சட்டத்தரணியும், பாரிஸ்டருமான திரு சுரேன் ஜனராஜ் அவர்கள் தலைமையிலான குழு சமர்ப்பித்து வாதப் பிரதிவாதங்களை மேற்கொண்டது.

பிரதிவாதிகளாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர், தேர்தல் ஆணையம், எல்லை நிர்ணய ஆணையம், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பெயரிடப்பட்டன.

இரண்டு இடையீட்டு மனுக்களை மருதமுனையிலிருந்து ஒருவரும், கல்முனையிலிருந்து மற்றொருவரும் சமர்ப்பித்தனர். முதலாமவர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி, சட்ட முதுமாணி, SLMC செயலாளர் நாயகம் MP நிசாம் காரியப்பர் அவர்களும், மற்றவர் சார்பாக மற்றொரு சிரேஷ்ட சட்டத்தரணியும், அமைச்சுக்கள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே அவர்களும், தேர்தல் ஆணையம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு சாலிய பீரிஸ் அவர்களுமாக பலர் கலந்து கொண்டனர்.

சில வேளைகளில் வழக்கு இலக்கம் கூறப்படும் போது சுமார் 10க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் எழுந்து நிற்பார்கள்.

எனவே இவ்வாறு ஏறக்குறைய கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்று கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இறுதி வாதப் பிரதிவாதம் பிற்பகல் வேளையில் நடைபெற்றது.

எமது சிரேஷ்ட சட்டத்தரணியும், பாரிஸ்டருமான திரு சுரேன் ஜனராஜ் அவர்கள் நீண்ட நேரம் தனது முன்வைப்புக்களைச் செய்தார். பதிலுக்கு முதுமாணி நிசாம் காரியப்பர் மற்றும் ADG நெரின் புள்ளே போன்றோர் கடுமையான பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

இறுதியில் மதிப்புமிக்க நீதிபதிகள் வாதப் பிரதிவாதங்களை முடிவுறுத்தி, எழுத்து மூலமான முன்வைப்புக்கு காலம் வழங்கி தீர்ப்பு வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வியாழன் 07.05.2026ஆம் திகதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் அந்த நாள் வந்து தீர்வு வழங்கப்பட்டது.

மருதூர் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட்ட நாள். அரசியல் நாடகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்டமுறையானது என்றும், தனித்தனியாக கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது நகர சபைக்கான வட்டாரங்களுக்கான எல்லைகள் தேசிய குழுவினால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயம் செய்யப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இவ்வெற்றியானது சாய்ந்தமருதை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. UC என்ற இலக்கை உள்ளத்தில் இறுதிவரை சுமந்து கொண்டு சென்ற செயற்பாட்டாளர்கள், போராளிகள், ஓட்டு மொத்த மருதூர் மக்கள் அனைவருக்கும் உரித்தானது.

எனவே, இப்பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தில் பிரிவினைகளையும் அரசியல் பேதங்களையும் தாண்டி நின்று, எதிர்காலத்தில் ஒரு வளமிக்க முன்மாதிரியான சபையாக சாய்ந்தமருது நகர சபை மிளிர, எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.

மேலும் சுயநலமற்ற மருதூரை நேசிக்கும் ஒரு குழுவிடம் அதிகாரம் சென்றடைய எனது வலுவான பிரார்த்தனைகளை முன்வைக்கிறேன்.

பாரக்கல்லாஹு பீக்கும்......... ஆமீன்!

உங்களில் ஒரு நகரசபை போராளியாக என்றும்
A.L.M சலீம்

08/05/2026

சாய்ந்தமருது நகர சபைக்கான ஜனநாயக போராட்டங்கள் முதல் நீதிமன்றம் சென்றது வரை உதவிய அனைவருக்கும் ஊர் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும்.

இன்னும் நாம் ஒன்றாக பயணித்து எமது முதலாவது நகர சபை தேர்தலிலும் எமது ஊர் அபிவிருத்திக்கும் வெற்றியின் வேர்களாக மாறுவோம்.

A.L.M சலீம்

Address

Saintamaruthu
32280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alm Saleem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share