AMR social media forum

AMR social media forum பாட்டாளி மக்கள் கட்சி � Kumbakonam, Tamilnadu

28/10/2026

டீசல், உதிரி பாகங்கள் வாங்க நிதியின்றி போக்குவரத்துக் கழகங்கள் அவதி: வெற்றிப் பயண நிதியை உடனே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மகளிர் இலவசப் பயணத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடு செய்வதற்கான நிதியை அரசு இதுவரை வழங்காததால் டீசல், உதிரிபாகங்கள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்குக் கூட நிதியில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திணறி வருகின்றன.

தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட வகை பேருந்துகளில் மட்டும் விடியல் பயணம் என்ற பெயரில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்டு வந்தது. த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், அதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் பயணம் செய்வதற்கான வெற்றிப் பயணத் திட்டம் நடப்பு அக்டோபர் 2&ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அன்றாட வருவாய் பாதிக்கும் கீழாகக் குறைந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மகளிர் விடியல் பயணம், மாணவர்களுக்கான இலவசப் பயணச் சலுகை ஆகியவற்றுக்காக அரசின் சார்பில் வழங்கப்படும் மானியத் தொகையையும் சேர்த்து தினமும் ரூ.47 கோடி வருவாய் கிடைத்து வந்தது. அரசின் மானியங்கள் இல்லாமல் இயக்க வருவாயாக மட்டும் தினமும் சராசரியாக ரூ.21 கோடி கிடைத்து வந்தது. இப்போது தினசரி இயக்க வருவாய் சராசரியாக ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடியாக குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. வெற்றிப் பயணம் தவிர பிற திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியங்களையும் சேர்த்தால் கூட, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தினசரி வருவாய் ரூ. 47 கோடியிலிருந்து ரூ.22 கோடியாக குறைந்து விட்டதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழங்களின் சார்பில் தினமும் 19,283 பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அவற்றில் 7714 நகரப் பேருந்துகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த விடியல் பயணத்தின் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்ட இழப்பு கணக்கிடப்பட்டு கடந்த ஆண்டில் ரூ.3,599 கோடி வழங்கப்பட்டது; நடப்பாண்டில் இந்தத் தொகை ரூ.3,999 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போது விடியல் பயணம் விரிவுபடுத்தப்பட்டும், வெற்றிப் பயணமாக்கப்பட்ட பிறகு 12,695 பேருந்துகளில் தினமும் 84.32 லட்சம் பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், விடியல் பயணத்தின் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதைத் தான் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்க முடியவில்லை.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒவ்வொரு நாளும் டீசல் வாங்குவதற்காக ரூ.16.17 கோடி, பிற பராமரிப்புச் செலவுகளுக்கு ரூ. 2.35 கோடி என மொத்தம் ரூ.18.52 கோடி செலவாகிறது. ஆனால், பேருந்து இயக்கத்தின் மூலம் தினமும் சுமார் ரூ. 8 கோடி மட்டுமே கிடைக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் டீசல் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை எவ்வாறு சமாளிக்க முடியும்?

வெற்றிப் பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மட்டும், டீசல் வாங்கியதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.150 கோடி வழங்க வேண்டியுள்ளது. ரொக்கமாகக் கொடுத்து டீசல் வாங்கும் போது 2% தள்ளுபடி கிடைக்கும் என்றும், கடந்த 25 நாள்களில் மட்டும் ரூ.150 கோடி கடனுக்கு டீசல் வாங்கப்பட்டிருப்பதால் ரூ. 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. மேலும் டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்குவதற்கு பணம் இல்லாததால், ரீ&த்ரெட் செய்யப்பட்ட டயர்களையும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட உதிரிபாகங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கி விடக் கூடும்.

விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, ஒவ்வொரு நாளும் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. அந்தத் தொகை 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசால் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அன்றாட செலவுகளுக்குத் தேவையானதை விட அதிக தொகை பேருந்து இயக்கத்தின் மூலம் கிடைத்து வந்ததால் நிலையை சமாளிக்க முடிந்தது. ஆனால், இப்போது அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான வருவாய் கூட பேருந்து இயக்கம் மூலம் கிடைப்பதில்லை என்பது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடையக் காரணம். வெற்றிப் பயணத் திட்டத்திற்கான நிதியை அரசு வழங்கினால் மட்டுமே நிலைமை சமாளிக்க முடியும்.

ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்பும் அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்திற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது கூட இதுவரை அறிவிக்கப்படவில்லை. விடியல் பயணத் திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.3,999 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், வெற்றிப் பயணம் என மாற்றப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.5,000 கோடி முதல் ரூ.6000 கோடி வரை சேர்த்து மொத்தம் ரூ.9,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை ஒதுக்கப்பட வேண்டும் என்பது தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எதிர்பார்ப்புகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க வசதியாக, ஒவ்வொரு மாதமும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொகையை அரசு முன்கூட்டியே வழங்க வேண்டும்.

10/10/2026
என் அன்பிற்கினி Anbumani Ramadoss அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!சாதி, மதம், இனம், மொழி, நாடுகள் கடந்து மனிதர்...
09/10/2026

என் அன்பிற்கினி Anbumani Ramadoss அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சாதி, மதம், இனம், மொழி, நாடுகள் கடந்து மனிதர்களுக்காகவும், அனைத்து உயிர்களுக்காகவும் போராடும், அடுத்த தலைமுறையை பற்றி கவலைப்படும் அண்ணனை வாழ்த்த, வணங்க பல்லாயிரம் காரணங்கள் உண்டு.

சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

நூறு ஆண்டுகள் மகிழ்வோடு, புகழோடு, நோய் நொடி இன்றி வாழ்ந்து எங்களையும், இந்த மண்ணையும், மக்களையும் காக்க வேண்டும்!

1) 108 ஆம்புலன்ஸ்

2) தேசிய ஊரக சுகாதார இயக்கம் NRHM

3) பொது இடங்களில் புகைக்கு தடை 2008

4) டிவி சினிமாவில் புகை மது எச்சரிக்கை வாசகங்கள்

5) புகையிலை பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள் வாசகங்கள்

6) போலியோ ஒழிப்பு

7) புகைக்கு தொடர் எதிர்ப்பு

8 ) Single use syringes

9) ஜிப்மர் தன்னாட்சி

10) மதுரை ஏய்ம்ஸ்

11) அயோத்தி தாச பண்டிதர் பெயரில் தேசிய சித்த மருத்துவமனை

12) இந்தியா முழுவதும் SC/ST மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு (UG & PG)

13) AIIMS இல் நிலவிய தீண்டாமையை Sukhdev Thorat கமிட்டி மூலம் ஒழித்தது

14) NEET முதல் முறை கொண்டு வரப்பட்டபோது அதை மருத்துவ துறைக்கு இல்லாமல் தடை செய்தது.

15) செங்கல்பட்டு தடுப்பூசி பூங்கா

16) TKDL - இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை மேற்கத்திய நாடுகள் copyright என்ற பெயரில் திருடாமல் தடுக்கும் திட்டம். Traditional Knowledge Digital Library

17) ஏழைக்களுக்கான முதல் தேசிய குடும்ப காப்பீட்டு திட்டம் (UHIS Universal Health Insurance Scheme for People Below Poverty Line BPL). Later expended as PM-JAY

18) ASHA அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர். Accredited Social Health Workers - மகப்பேறு மற்றும் கரோனா காலங்களில் அளப்பரிய பணி செய்தனர்

19) AYUSH - ஆயுர்வேத, சித்தா, உனானி, ஹோமியோபதி, யோகா ஆகிய பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளை மேம்படுத்த தனி துறையாக உருவாக்கியது

20) FSSAI - உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் உருவாக்கியது

21) PHFI - இந்திய பொது சுகாதார அறக்கட்டளை உருவாக்கியது

22) IIPH - நாடு முழுவதும் Indian Institutes of Public Health - இந்தியா பொது சுகாதார கல்வி நிலையங்கள் உருவாக்கியது

23) புகையிலை விளம்பரங்களுக்கு தடை.

24) புகையிலை ஒழிப்புக்காக - WHO உலக சுகாதார அமைப்பின் இயக்குனரின் WHO Director General's சிறப்பு விருது

25) புகையிலை ஒழிப்புக்காக அமெரிக்க கேன்சர் சங்கத்தின் "லூதர் எல் டேற்றி" விருது

26) Universal Immunization Programme உலக தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தியது

27) கேதன் தேசாய் மாபியா பிடியில் இருந்த இந்திய மருத்துவ கழகத்தை MCI மறுசீரமைத்தது.

28) ஏய்ம்ஸ் மருத்துவமனையை நவீனப்படுத்தியது மற்றும் அதிகம் தன்னாட்சி உள்ள அமைப்பாக மாற்றியது.

29) மருத்துவ நிறுவனங்கள் பதிவு & கட்டுப்பாட்டு சட்டம் - Clinical Establishments Registration & Regulation Bill கொண்டு வந்தது

30) மருத்துவ துறை கணக்குகளை வெளிப்படையாக்கும் National Health Accounts Framework உருவாக்கியது

31) AYUSH துறைக்கு WHO உலக சுகாதார அமைப்பின் ஆதரவை பெற்றது

32) ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடு முழுவதும் பிரசவம் பார்க்கும் அளவு தரம் உயர்த்தியது.

33) CHC சமூக சுகாதார மையங்கள் உருவாக்கியது

34) கிராமப்புரங்களுக்காக Mobile Medical Units எனும் நடமாடும் மருத்துவ மனைகள் உருவாக்கியது

35) அரசு மாவட்ட மறுத்துவமனைகளை ICU வசதி உள்ளவைகளாக தரம் உயர்த்தியது

36) மருத்துவ கல்வியில் "அவசர சிகிச்சை" எனும் Emergency Medicine ஐ ஒரு பாடப்பிரிவாக சேர்த்தது

37) ஜனனி சுரக்ஷா யோஜனா மூலம் மருத்துவமனை பிரசவங்களை ஊக்குவித்தது

38) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ICDS Integrated Child Development Centres அமைப்பை வலுப்படுத்தியது

39) வளர இளம் பருவ வயதினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த National Programme for Adolescent Health என்ற அமைப்பை உருவாக்கியது

40) காசநோயை ஒழிக்க திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் RNTBCP உருவாக்கியது

41) நடுத்தர குடும்பங்களை செலவுகளால் அழிக்கும் புற்றுநோய், நீரிழிவு மற்றும் மார்பக, வலிப்பு நோய்களை கட்டுப்படுத்த NPCDCS – National Programme for Prevention and Control of Cancer, Diabetes, Cardiovascular Diseases and Stroke அமைப்பை உருவாக்கியது

42) தேசிய மனநல திட்டம் (National Mental Health Programme) உருவாக்கியது

43) National Institute of Biomedical Genomics – தேசிய உயிரணு மரபியல் மருத்துவ நிறுவனத்தை உருவாக்கியது

44) தேசிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பை Indian Council for Medical Research உருவாக்கியது

45) மருத்துவ தரவுகளை கணினி மயமாக்கும் Health Management Information System HIMS முறையை அறிமுகப்படுத்தியது

46) நாடு முழுவதும் எளிதில் அணுக முடியாத இடங்களுக்காக National Rural Telemedicine Network – தேசிய ஊரக தொலை மருத்துவ வலையமைப்பை உருவாக்கினார்

47) நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். இதை தடுக்க முயன்ற ஏய்ம்ஸ் வேணுகோபால் தலைமையலான சதிக்கும்பளை வீழ்த்தி சமூக நீதியை நிலை நாட்டினார்.

இன்னும் பல நூறு உள்ளன. தொடர்ந்து அவற்றை வெளிக்கொணறுவோம். இந்த தேசம் கொண்டாட மறந்த தலைவரின் புகழை மென்மேலும் பரவலாக்குவோம்!!

28/09/2026

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலரின் துணிச்சல் பாராட்டத்தக்கது: விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்!

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் காரில் குட்கா கடத்தி வந்த கும்பலை, அந்தக் காரின் மேற்கூரை மீது பாய்ந்து படுத்தபடியே 40 கி.மீ தொலைவுக்கு துரத்திச் சென்று பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலும், கடமை உணர்வும் பாராட்டத்தக்கவை. உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகன் குற்றங்களையும், கடத்தல்களையும் தடுப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

தலைமைக் காவலர் வேல்முருகனின் கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

01/09/2026

ரூ.1000 கோடி நிதி நிறுவன மோசடி - இளைஞர் தற்கொலை: தடுக்கத் தவறிய காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்!

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் இராசு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படும் நிலையில், அதை காவல்துறையினர் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.

மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எப்.க்யூ.எல் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரங்கள் செய்தது. இதற்காக தனிச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி மக்களிடம் சென்று முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். எப்.க்யூ.எல் நிதி நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பிய மக்களும் தங்களிடமிருந்த பணத்தை இலட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர் இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்து உள்ளார். மோசடி நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்ட நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட முதலீட்டாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பணம் கட்டி ஏமாந்த மக்களும் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம், கூட்டமாக வந்து புகார் அளித்து வருகின்றன. மோசடியின் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு இந்த மோசடி வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால், பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு எப்போது பணமும், நீதியும் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் திடீர், திடீரென மோசடி நிதிநிறுவனங்கள் தொடங்கப்படுவதும், அவை மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு மூடப்படுவதும் புதிதல்ல. சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம், திருச்சியில் எல்பின்ஸ் ஆகிய 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்தன. கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.2000 கோடி மோசடி செய்ததுடன், அதை அம்பலப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், ஏமாற்றப்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்டுத் தரப்படவில்லை.

ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியது தான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்வதவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரச்சாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம் தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும் போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்பு தான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும் அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.

இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறை தான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

24/04/2026

வெற்றி உறுதி: மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இது தான் முதல் முறையாகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர்; திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்பதையுமே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதிப்பவர்கள்; அமைதிப்புரட்சி செய்பவர்கள். இப்போதும் அதைத் தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்னொருபுறம் சட்டம் & ஒழுங்கை பாதுகாத்தல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட ஓர் அரசின் அடிப்படைக் கடமைகள் எதையுமே திமுக அரசு செய்யவில்லை. அதனால், கொந்தளித்துப் போன மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்காக காத்திருந்தனர். மக்கள் தங்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தாமல், தெளிந்த நீரோடையாக இருந்தாலும், ஆழ்கடலின் பிரளயம் போன்று அவர்களின் மனதுக்குள் திமுகவை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற கோபம் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த என்னைப் போன்றவர்களால் இந்த கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ஆட்சியாளர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; அதனால் தங்களைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. எனவே தான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நேற்று நடந்த தேர்தலில் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தி விட்டனர். அதன் விளைவு தான் வரலாறு காணாத வகையில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாகும்.

இந்த வாக்குகள் ஆட்சி மாற்றத்திற்கான வாக்குகள் தான் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தீர்ப்புக்காகத் தான் தமிழ்நாட்டு மக்கள் காத்திருந்தார்கள். இந்தத் தீர்ப்பு தான் தமிழக மக்களுக்கு நரக ஆட்சியிலிருந்து விடுதலை அளிக்கப் போகிறது. இனி வரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தத் தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வயலில் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தாலும் அவற்றை அறுவடை செய்து வராவிட்டால் எந்தப் பயனும் இல்லை. அதேபோல் தான் தேர்தல் களமும். மக்கள் மனதில் கனன்ற கோபத்தை ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்குகளாக மாற்றியது தான் இந்தத் தேர்தலின் வெற்றி ஆகும். அதற்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தீவிரமாக பரப்புரை செய்தனர்; அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார்கள். இதற்காக அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்தத் தேர்தலில் காட்டிய வேகமும், விவேகமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லா தொகுதிகளிலும் பலமுறை வீடு வீடாக சென்று கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக வாக்குகளைச் சேகரித்தனர். பல்வேறு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்ட தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்து பா.ம.க மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது சிறப்பு நன்றிகளையும், பாராட்டுகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

Address

Thanjavur
611104

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMR social media forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share